10 Apr 2023

வாழ்க்கை முறையில் நாம் காட்டும் அலட்சியம்

வாழ்க்கை முறையில் நாம் காட்டும் அலட்சியம்

சர்க்கரை நோய், கொழுப்பு நோய், இரத்த அழுத்த நோய், உடல் பருமன் உபாதைகள் போன்ற நோய்கள் பெருகியதற்கு நாம் உணவுமுறையைக் காரணம் சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.

உணவு முறை ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. நம் வாழ்க்கை முறை உணவு முறையை மாற்றி விட்டது. வாழ்க்கை முறை உணவு முறையை மட்டுமல்ல நம் பழக்க வழக்கங்களையும் மாற்றி விட்டது.

நம்முடைய வாழ்க்கை முறை நம்மை நடைபயிற்சிக்கோ, உடல் உழைப்பிற்கோ, மிதிவண்டியைப் பயன்படுத்துவதற்கோ முற்றிலும் எதிரானதாக இருக்கிறது. நமக்குக் கண்டுபிடித்துத் தரப்பட்ட கருவிகள் நம் வாழ்க்கை முறையை வேறொரு திசையில் நம்மைச் செலுத்திக் கொண்டிருக்கிறது. கருவிகளின் சொகுசில், அதிகளவு கருவியைப் பயன்படுத்தும் அடையாளங்களில் நாம் மயங்கிக் கொண்டிருக்கிறோம்.

வாழ்க்கை முறை நம்மை மாற்றி விட்டது என்பது உண்மைதான். நாம் அந்த வாழ்க்கை முறையை நமக்கு ஏற்றாற் போல உடல் நலத்திற்கு உகந்தாற் போல மாற்றிக் கொள்ள முடியாது என்று சொல்ல முடியாது.

அண்மைக் காலங்களில் நான் தார் சாலைகளில் நடப்பதற்கே அச்சப்படுகிறேன். வாகனங்களின் சுலுவான பயணத்திற்குத் தார் சாலைகள் அவசியம்தான். அந்தத் தார் சாலைகளில் நம் மக்கள் வாகனங்களில் செல்லும் வேகத்தைப் பார்த்தால் அது நிச்சயம் விமானத்தில் வான் வழியில் செல்வதற்கான வேகத்திற்கு நிகரானது.

தார் சாலைகள் ஒரு பங்கு விரிந்தால் வாகனங்கள் இரண்டு பங்கு பெருகுகின்றன. அவசரத் தேவைகளுக்கு வாகனங்களின் பயன்பாட்டை எப்படி மறுக்க முடியும்? வாகனங்கள் இருக்கின்றன என்பதற்காக எல்லாவற்றையும் அவசர தேவைகளாக மாற்றினால் அதை எப்படி ஏற்க முடியும்?

தார் சாலையில் தாறுமாறான வேகத்தில் செல்பவர்கள் அதிகம். முறையாக வாகனம் செலுத்துவதைக் கற்றுக் கொள்ளாமல் வாகனங்களைச் செலுத்திக் கொண்டிருப்பவர்கள் அதிகம். சாலை விதிகளை அறியாமலும் அறிந்தும் அதைப் பொருட்படுத்தாமலும் செல்பவர்களும் அதிகம். இத்துடன் பெருகி விட்ட வாகனங்களும் அபாயகரமான சாலை அனுபவத்தைத் தருகின்றன.

அண்மைக் காலமாக நான் தார் சாலையில் நடந்து செல்வதையே விட்டு விட்டேன். ஒதுக்குப்புறமாக இருக்கும் மண் சாலைகள் நிறைந்த இடங்களே என்னுடைய நடத்தலுக்கான தேர்வாக இருக்கின்றன. தார் சாலையில் நடந்து செல்வது ஆபத்தானது என்ற நிலை உருவாகிக் கொண்டு இருக்கிறது. நம்முடைய போக்குவரத்து அமைப்பில் நடந்து செல்வதற்கான பாதுகாப்பு அம்சங்கள் உருவாக்கப்பட வேண்டும். உருவாக்கப்பட்டவை நடைமுறையில் பின்பற்றப்படவும் வேண்டும்.

பள்ளிகளும் கல்லூரிகளும் அலுவலங்களும் தொழிற்சாலைகளும் அதிக அளவு போக்குவரத்தை உருவாக்கி விட்டன என்று மொன்னையாகச் சொல்லி விட முடியாது. எவரும் அண்மைப் பள்ளிகளையோ அண்மைக் கல்லூரிகளையோ தேர்ந்தெடுப்பதில்லை. அலுவலகங்களுக்கு அருகிலோ தொழிற்சாலைகளுக்கு அருகிலோ இல்லாமல் வேலை செய்யும் இடம் ஒரு திசையிலும் குடியிருக்கும் குடியிருப்புகள் வேறொரு திசையிலும் இருக்கின்றன.

பொது போக்குவரத்து மிக மோசமானதாக இருக்கின்றது. அவற்றின் நேர ஒழுங்கும் பராமரிப்பும் படுமோசம். இத்தனைக்கும் எல்லாவற்றிக்கும் பண வசூல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பணத்தையும் கொடுத்து விட்டு தரமற்ற சேவைகளை வேறு வழியின்றிப் பெற்றுக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. தனியார் துறை சேவைகளும் சொல்லிக் கொள்ளும் படி இல்லை. பொதுத்துறை சேவைகளின் பின்னடைவை அவை நல்லதொரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு வாடிக்கையாளர்களை ரொம்பவே அலட்சியப்படுத்துகின்றன.

இவை அனைத்தையும் சகித்துக் கொண்டு வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொண்டுதான் நம் வாழ்க்கை முறையை கட்டமைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

அவசரம் அவசரம் என உந்தித் தள்ளும் வாழ்க்கை முறை நடந்து செல்வதைப் பற்றியோ, மிதிவண்டியில் செல்வது பற்றியோ, உடல் உழைப்பில் சிறிது நேரம் ஈடுபடுவதைப் பற்றியோ நம்மை யோசிக்க விடாமல் செய்து விடுகிறது. உடற்பயிற்சி செய்வது குறித்து யோசிப்பது என்றால் உடற்பயிற்சிக் கூடங்கள் எனும் வணிகச் சூழலில் சிக்கித்தான் அதனுள் காலடி எடுத்து வைக்க வேண்டியதாக இருக்கிறது.

அவசரங்களும் நெருக்கடிகளும் எப்படி வேண்டுமானாலும் நெட்டி முறித்து எட்டி உதைக்கலாம். அதன் அவசரக் கரங்களில் சிக்காமல் நெருக்கடிகளில் உதைபடாமல் ஒரு வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வதற்கான புத்திசாலித்தனத்தில் நம்பிக்கை வைத்து நம் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதன் மூலமாகச் சில நோய்களை நாம் அண்ட விடாமல் செய்து விடலாம். அதனால் மேலும் பல பெரும்பான்மையான நோய்களையும் அண்ட விடாமல் செய்ய வாய்ப்பிருக்கிறது. பல அடுக்கு மாடிக் கட்டிடங்களாகப் புற்றுநோய் போல வளர்ந்து கொண்டிருக்கும் மருத்துவமனைகளுக்கும் ஒரு முடிவு கட்டலாம்.

நம்முடைய வாழ்க்கை முறை பற்றி நாம் கொஞ்சம் யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது. யோசிப்பதோடு சில மாற்றங்களையேனும் கொண்டு வர வேண்டிய அவசியமும் இருக்கத்தான் செய்கிறது. நமக்காக இதை நாம் செய்யா விட்டால் வேறு யாரும் இதை மாற்றி தருவதற்கான சூழ்நிலையில் நாம் இல்லை என்பதையும் நாம் உணர்ந்தாகத்தான் வேண்டும். இதைத் தவிர வேறு என்ன சிறந்த வழியிருக்கிறது என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். அப்படி இருந்தால் அதை நாம் பரிசீலிக்க வேண்டும்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...