5 Apr 2023

அடித்துத் தூக்கப்படும் தங்கத்தின் மதிப்பு - ஏன் தங்கத்தின் மதிப்பு அடித்துத் தூக்கப்படுகிறது?

அடித்துத் தூக்கப்படும் தங்கத்தின் மதிப்பு

ஏன் தங்கத்தின் மதிப்பு அடித்துத் தூக்கப்படுகிறது?

தங்கம் எப்போதும் தங்கம்தான். கிராமத்தில் பவுனு பவுனுதான் என்பார்கள். தங்கம் என்றே பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பார்கள். தங்கராசு, தங்கவேல், தங்கையன், தங்கப்பன், தங்கம்மாள், பவுனம்மாள், பவுனாயி, தங்கச்செல்வன், தங்கச்செல்வி என்று தங்கத்தோடு தொடர்புடைய எத்தனை பெயர்கள் இருக்கின்றன?!

தங்கம் இல்லாத விழாக்கள் இருக்கின்றனவா? நகைக்கடைகள் இல்லாத நகரத்தின் வணிக வீதிகள் இருக்கின்றனவா? குண்டுமணித் தங்கம் கூட போடாத திருமணங்கள் நடக்கின்றனவா?

கோயில் இல்லாத கிராமங்கள் இருக்கலாம், அடகுக் கடைகள் இல்லாத கிராமங்கள் இருக்கின்றனவா? நகைக்கடன் பிரிவு இல்லாத வங்கிகள் இருக்கின்றனவா? என்ன காரணம் வேண்டுமானால் சொல்லி உங்களது கடன் விண்ணப்பத்தை நிதி நிறுவனங்கள் புறக்கணிக்கலாம். தங்க நகை உங்களின் கைகளில் இருந்தால் உங்களை யார் புறக்கணிக்க முடியும்?

தங்கத்திற்கு எப்போதும் ஒரு மதிப்பு இருக்கிறது. அந்த மதிப்பு உயர்ந்து கொண்டுதான் வந்திருக்கிறதே தவிர, குறைந்து கொண்டு போனதில்லை. நீங்கள் எந்த விலையில் எப்போது வேண்டுமானாலும் தங்கத்தை வாங்கி வைக்கலாம். அதன் மதிப்பு குறைந்து விடும் என்று பயப்பட வேண்டியதில்லை.

விலை அதிகமுள்ள இந்த 2023 இன் ஏப்ரல் மாதத்திலும் நீங்கள் துணிச்சலாகத் தங்கத்தை வாங்கலாம். இப்போதைய தங்கத்தின் மதிப்பு அடித்துத் தூக்கப்படுவதாக நீங்கள் நினைக்கலாம். ஏன் தங்கத்தின் மதிப்பை அடித்துத் தூக்க வேண்டும்?

தங்கத்தின் மதிப்பு எப்போதும் அடித்தெல்லாம் தூக்கப்படுவதில்லை. இருக்கின்ற பொருளாதார நிலைமைகளில் அது தன்னுடைய இயல்பான மதிப்பைப் பெறுகிறது அவ்வளவுதான். சமீப இரண்டு மாதங்களுக்குள் தங்கம் விலை ஏறியதைப் பார்த்து அது அடித்துத் தூக்கப்படுவதாக உங்களுக்குத் தோன்றலாம். அது தன்னுடைய சரியான மதிப்பை விலையேறிப் பெற்றுக் கொள்கிறது. அதை அடித்துத் தூக்குவதாக எல்லாம் சொல்ல முடியாது.

கட்டுக்கட்டாகக் காகித நோட்டுகளை நீங்கள் அச்சடித்துக் கொள்வதற்காக இரக்கப்பட்டு தங்கம் எப்படி தன்னுடைய மதிப்புகளைக் குறைத்துக் கொள்ளும்? நீங்கள் பாட்டுக்கு பணவீக்கத்தை அதிகம் பண்ணும் பொருளாதார நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வட்டி விகிதத்தை உயர்த்திக் கொண்டு போனால் தன்னுடைய மதிப்பைத் தாழ்த்திக் கொள்ள தங்கம் ஒன்றும் தாழ்வு மனப்பான்மை கொண்ட அப்பிராணி அல்ல. உங்களின் பொருளாதார உள்குத்தை அறிய முடியாத இளிச்சவாயோ தற்குறியோ அல்ல தங்கம். உங்களின் பொருளாதார நடவடிக்கைக்கேற்ப தங்கம் தன்னுடைய மதிப்பை நிலைநிறுத்திக் கொள்ளும்.

தங்கம் ஒரு சரியான பொருளாதார அளவீட்டுப் பொருள். அதனால்தான் உங்கள் பணத்தையே நீங்கள் தங்கத்தை அடிப்படையாகக் கொண்டு அச்சடித்துக் கொள்கீறீர்கள். பிறகு அந்த அடிப்படையை நீங்களே மீறி மிகையாகப் பணத்தை அச்சடித்துக் கொள்கிறீர்கள். உங்களது தகிடுதித்தத்தை வெளியுலகுக்குத் தெரியாமல் நீங்கள் மறைத்துக் கொள்ளலாம். ஆனால் அது தங்கத்தின் மதிப்பில் வெளிப்பட்டே தீரும்.

உலகின் நிலையான பொருளாதார மதிப்பு கொண்ட ஒரே பொருள் தங்கம்தான். உங்கள் இறுமாப்பும் கர்வமும் ஆணவமும் டாலரை நிலையான பொருளாதார மதிப்பு கொண்டதாகப் புளங்காகிதம் அடையச் செய்யும். உண்மை என்னவென்றால் தங்கத்தின் மதிப்பிற்கேற்பவே டாலர் பலமடையும் அல்லது பலவீனமடையும். ஒரு போதும் டாலரின் பலம் மற்றும் பலவீனத்திற்கு ஏற்ப தங்கம் மாறாது. தங்கத்திற்கேற்ப டாலர்தான் மாறிக் கொள்ள வேண்டும். டாலருக்கு ஏற்ப தங்கம் மாறவே மாறாது.

தங்கத்துக்கு ஏற்ப டாலர் மாறுகிறது. டாலரைப் போல ஒவ்வொரு நாட்டின் பணமும் மாறுகிறது. இந்தியாவில் ரூபாய் மதிப்பு மாறுகிறது. இதை எப்படி தங்கத்தின் விலையேற்றம் என்று சொல்ல முடியும்? வேண்டுமானால் உங்கள் பணத்தின் மதிப்புக் குறைவு என்றோ மதிப்புச் சரிவு என்றோ மதிப்பு வீழ்ச்சி என்றோதான் சொல்ல முடியும், சொல்லவும் வேண்டும்.

தராசின் சமானத்திற்காக நீங்கள் அதிகமாகப் பொருளை வைக்க வேண்டியது போன்றதுதான் இது. எடைக்கல் மாறாமல் அப்படியேதான் இருக்கிறது தங்கத்தைப் போல. உங்கள் பொருள்தான் எடைக்கல்லுக்கு ஏற்ப கூடவோ குறைவாகவோ வைத்தாக வேண்டிய நிலையில் இருக்கிறது. உங்கள் பணத்தின் நிலை இப்போது அப்படித்தான் இருக்கிறது.

தங்கத்தின் மதிப்பு எடைக்கல்லைப் போலச் சமமமாக இருக்க அதன் மதிப்பைச் சமன்படுத்த நீங்கள் அதிகப் பணத்தை அதாவது டாலரையோ அல்லது ரூபாயையோ அல்லது உங்கள் நாட்டின் பணம் என்னவோ அதை அதிகம் வைக்க வேண்டியிருக்கிறது.

தங்கத்தின் மதிப்பு அடித்துத் தூக்கப்படவில்லை என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். உங்கள் பணத்தின் மதிப்பு குறைந்து கொண்டிருக்கிறது. அதனால் நீங்கள் அதிகப் பணம் கொடுத்துத் தங்கத்தை வாங்க வேண்டியிருக்கிறது.

இன்னும் சொல்ல வேண்டும் என்றால் உங்கள் நெல்லின் ஈரப்பதம் குறைந்து விட்டால் நீங்கள் ஒரு மூட்டை நெல்லின் எடைக்கு இன்னும் கொஞ்சம் நெல்லைக் கொட்டிக் கொடுக்கத்தான் வேண்டும் என்பதுதான் நிலைமை. இங்கும் நிலைமை அப்படித்தான்.

நீங்கள் ஒரு மாதத்திற்கு முன்பு வைத்த எடைக்கும் இப்போது வைக்கும் எடைக்கும் மாறுதல் இருக்கிறது. உங்கள் பண்டத்தின் எடை குறைந்து போயிருக்கிறது. ஆகவே இன்னும் கொஞ்சம் பண்டத்தை நீங்கள் வைத்துதான் ஆக வேண்டும். அதே போலத்தான் எடைக்கல்லாக இருக்கும் தங்கத்தைச் சமன் செய்ய நீங்கள் உங்கள் பண்டமான பணத்தைக் கூடுதலாகத்தான் வைக்க வேண்டும். அப்போதுதான் தராசின் முள்ளைச் சீர் செய்து தூக்க முடியும் சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல.

உங்கள் வங்கிகள் திவாலாகிறது என்பதற்காக, உங்களது பண வீக்கம் அதிகரிக்கிறது என்பதற்காக, நீங்கள் வட்டி விகிதத்தை அதிகரிக்கிறீர்கள் என்பதற்காகத் தங்கம் தன்னை மாற்றிக் கொள்ளாது. தங்கத்தின் மதிப்பிற்கேற்ப நீங்கள் மாறிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. அதாவது உங்கள் பணத்தை நீங்கள் கூடுதலாக எடுத்து வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

மறுபடியும் ஒருமுறை சொல்வதென்றால், நீங்கள் சீரழித்தப் பொருளாதாரத்திற்கேற்ப தங்கம் தன்னுடைய மதிப்பை உயர்த்திக் கொண்டு போகிறது. அதை உங்கள் நாட்டின் பணத்தைக் கொண்டு வாங்க நீங்கள் அதிகப் பணத்தை எடுத்து வைப்பதைத் தவிர வேறு வழியென்ன இருக்கிறது சொல்லுங்கள்?!

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...