5 Apr 2023

விவசாயத்தில் பேராசையை விதைத்தால் பெருநஷ்டம்தான் விளையும்

விவசாயத்தில் பேராசையை விதைத்தால் பெருநஷ்டம்தான் விளையும்

நேற்று சண்முகத்தண்ணன் சொன்னார், “இந்த வருஷம் விளைச்சல் சரியில்லை தம்பி!” என்று.

“எப்படிண்ணே விளைச்சல் சரியில்லாமல் போகும்?” என்று நான் கேட்டேன்.

“போன வருஷம் கண்ட அளவுக்கு இந்த வருஷம் காணாது போலருக்குப்பா!” என்றார்.

“நீங்க மாவுக்கு விதைச்சது ரெண்டரை மரக்கால். நீங்க அறுக்கப் போறது மாவுக்கு குறைஞ்சது ஏழெட்டு மூட்டை. ரெண்டரை மரக்கால விதைச்சுட்டு ஏழெட்டு மூட்டையை அறுக்கப் போறீங்க. விளைச்சல் சரியில்லன்னு சொல்றீங்களேண்ணே?” என்றேன்.

“செலவு பண்ணதுல்லாம் இருக்கேப்பா?” என்றார்.

“ஒவ்வொரு நெல்லும் பயிராகி இருபது முப்பது நாற்பது ஐம்பதுன்னு நெல்லை விளைவிச்சுக் கொடுக்குது. ஒரு நெல்லால அதைத்தான் செய்ய முடியும். அதுக்கு மேல அதுகிட்டே எதிர்பார்த்தீங்கன்னா எப்படிண்ணே?” என்றேன்.

“வாஸ்தவம்தாம்பா! என்னதான் விளைச்சல் கண்டாலும் உழுதவன் கணக்குப் பார்த்தா ஒண்ணும் தேறாதுப்பா!” என்றார்.

“அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை ஒவ்வொரு விதையும் விதைச்சா எவ்வளவு விளைவித்துக் கொடுக்க முடியுமோ அதை விளைவித்துக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கு. உங்களோட எதிர்பார்ப்புகளும் ஆசைகளும் அதைப் பணங்காய்ச்சி மரங்களா மாத்த நினைக்குது. அதுதான் பிரச்சனை.” என்றேன்.

“விவசாயத்துக்குன்னு செலவு இருக்கா? இல்லியா? நீ என்னப்பா கோட்டித்தனமா பேசுறே?” என்றார்.

“களைக்கொல்லியையும் உரங்களையும் வாங்கி நீங்க அதை உற்பத்தி பண்றவனையும் விற்கிறவனையும் பணக்காரனாக்கி விட்டு கட்டுபடி ஆகலன்னு சொன்னா எப்படிண்ணே?”  என்றேன்.

“அப்படிதானப்பா விவசாயம் பண்ண முடியுது.” என்றார்.

“தயவு செய்து இந்த முறையை மாத்துங்க. விவசாயத்துக்காக அநாவசியமா செலவு பண்றதை முதல்ல நிறுத்துங்க. உழவு பண்றதுக்கு, கிடை கட்டுறதுக்கு, அப்படி இல்லன்னா சாண எரு அடிக்கிறதுக்கு அத்தோட களை பறிக்கிறதுக்கு, அறுவடை பண்றதுக்குன்னு பண்ணுற செலவோடு நிறுத்திக்குங்க. அதுல வர்ற வரும்படி போதும்ன்னு இருந்துக்குங்க.

விதை நெல்லை எவங்கிட்டேயோ வாங்குறதை நிறுத்துங்க. அந்த விதை நெல்லோட வயல்ல முளைக்க வேண்டிய களைகளைத் தயார் பண்ணி அனுப்புறவனே அவன்தான். அவங்கிட்டே வாங்குற நெல்லாலத்தான் களைக மண்டுது வயல்ல. அந்த களையைக் அழிக்கிறோம்ன்னு களைக்கொல்லிய வாங்கி அடிக்க வேண்டியிருக்கு. மாவுக்கு நான்கோ அஞ்சோ நடவாளுகள எறக்கி விட்டு களை பறிக்கிறதே போதும்.

வருஷா வருஷம் கிடை கட்டுற கீதாரிங்க வர்றாங்க. அவங்கள வெச்சு கிடை கட்டுறதோட நிறுத்திக்குங்க. மாடு வெச்சிருக்கிறவங்ககிட்டே பேசி சாண எரு அடிக்கிறதோடு நிப்பாட்டிக்குங்க.  கண்ட மேனிக்கு உரத்தை வாங்கி வயல்ல வீசுறதை நிப்பாட்டுங்க. இப்படி வாங்கி நாம்ம வீசிகிட்டே இருந்தா வருஷா வருஷம் அவன் உர விலையை ஏத்திகிட்டே போவான். அவன் விலையை ஏத்துறான்னு நாம்ம நெல்லு மூட்டையோட விலையை உயர்த்த முடியுமா சொல்லுங்க?

பூச்சித் தாக்குதல்ன்னு பூச்சி மருந்தை அடிக்கிறதையும் நிறுத்துங்க. வேப்ப எண்ணெய், வேப்பம் புண்ணாக்கு இதைத் தவிர வேற எதையும் பயன்படுத்த வேணாம். மாடுகள வெச்சிருந்தா பஞ்ச கவ்வியம் மாதிரியான ஊட்டத்தைப் பயன்படுத்துறதோட நிறுத்திக்கணும். முக்கியமா விவசாயத் துறையிலேந்து வர்ற ஆளுங்க சொல்ற எந்த யோசனையும் கேட்காம இருங்க. விவசாயம் நல்லாவே இருக்கும்.

நெல்லை விளைவிச்சு வியாபாரிகிட்டே போடுறதையும் நிப்பாட்டணும்ண்ணே. நாமளே நல்ல விதமா கை அவியலா அவித்து ஆவாட்டி அரிசியா அரைச்சுக் கொடுத்தா நகரப்புறத்துல அதை நல்ல கொடுத்து வாங்கிக்கிறதுக்கு ஆளுங்க இருக்காங்க. அவங்களோட எதிர்பார்ப்பு எல்லாம் நாம்ம இயற்கையா நெல்லை விளைவிக்கிறோமாங்றதுதான். அவங்களோட திருப்திக்கு அவங்கள அழைத்துக் கொண்டு வந்து நம்ம வயலைப் பார்க்க சொல்லிக் காட்டிட்டா போதும். அவங்களோட நம்பிக்கை கெடாம நேர்மையா நாம்ம விவசாயம் பண்ணிக் கொடுத்தா அதுல வர்ற வருமானமே போதும்ண்ணே.

ஒரு நெல்லால எத்தனை நெல்மணிகளை உருவாக்க முடியுமோ அத்தனைய அது உருவாக்கிக் கொடுத்துடும். இது இயற்கை. அதுல உங்க எதிர்பார்ப்புகளையும் ஆசையையும் வெச்சு எந்தக் கணக்கையும் போடாதீங்க. அதிகமா விளையணும்ன்னு காசைச் செலவு பண்ண ரசாயன மருந்துகள வாங்கித் தெளிக்காதீங்க.

களைக்கொல்லியோ, உரமோ போடாம இயற்கையா விவசாயம் பண்ற ஒரு வயல்லத்தான் உளுந்தும் பயிறும் நல்ல விளையும். அந்த விளைச்சல்லயும் நீங்க நல்லா காசு பார்க்கலாம்.

களைக்கொல்லியைப் போட்டு களை பறிக்கிற செலவைக் குறைச்சிடலான்னு நெனைச்சோ, உரத்தை அதிகமா போட்டு அதிகமான நெல்லை விளைவிச்சிட்லாம்ன்னு நெனைச்சோ நீங்க விவசாயத்துல எதைப் பண்ணாலும் அதை விளைச்சலைக் குறைக்கத்தான் செய்யும். அத்தோட உளுந்து பயிறோட விளைச்சலையும் காலிப் பண்ணிடும்.” என்றேன்.

சண்முகத்தண்ணன் ஒரு மாதிரியாக என்னைப் பார்த்தார். உலகம் போற போக்குல போக வேண்டும் என்பது போல இருந்தது அவரது பார்வை. நான் சொல்வதைக் கேட்க முடியாத நிலைக்குச் சென்று விட்டார் எனக்குப் புரிகிறது. இருந்தாலும் சொல்வதைச் சொல்லத்தான் வேண்டும் என்பதற்காக நான் சந்திக்கும் போதெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். சண்முகத்தண்ணனும் சில நேரங்களில் அதை ஆமோதிப்பது போலத் தலையசைத்து விட்டு வழக்கம் போல களைக்கொல்லியும் ரசாயனத்தையும் கலந்த விவசாயத்தைத்தான் செய்து கொண்டிருக்கிறார்.

விவசாயத்தை நடைமுறையில் செய்து பார்க்காமல் பட்டப் படிப்பாகப் படித்து விட்டு விவசாயம் பற்றி வியாக்கியானம் செய்யும் கூட்டம் இருக்கும் வரை விவசாயத்தை மாற்றுவது என்பது சுலபமில்லை. பாரம்பரியமாகப் பல ஆண்டுகளாகச் செய்து வந்த இயற்கையோடு இயைந்த எளிமையான விவசாய முறையை இவர்கள் சில ஆண்டு காலத்திற்குள் பேராசையையும் பெரும் எதிர்பார்ப்புகளையும் விவசாயிகளிடம் உருவாக்கி மாற்றி விட்டார்கள். விவசாயத்தில் வாயில் நுழையாத எவ்வளவு வார்த்தைகளை நுழைத்து விட்டார்கள். அவ்வளவு களைக்கொல்லியின் பெயர்களையும் உரங்களின் பெயர்களையும் விவசாயிகள் சொல்கிறார்கள்.

எந்த விதையாக இருந்தாலும் மண்ணில் விதைத்தால் விளையும். இதற்கு ஒன்றும் பெரிய தொழில்நுட்பங்களோ, ரசாயன அறிவோ தேவையில்லை. அப்படி தேவையென்றால் மனிதன் இயற்கையை மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம். இயற்கையை மதிக்காத எந்த மனிதனாலும் லாபமாகவோ வளமாகவோ வாழ முடியாது.

களைக்கொல்லியாலோ, ரசாயனத்தாலோ விவசாயம் செய்து விளைவித்துக் கொடுப்பவன் தன்னுடைய சுபிட்சத்தை அழித்துக் கொள்வதுடன் அதை வாங்கி உண்போரின் உடல் நலத்தையும் செல்வ வளத்தையும் ஒரே நேரத்தில் அழிக்கிறான். வாங்கி உண்பவன் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் அவனுடைய செல்வம் அத்தனையையும் ஆரோக்கியக் கேட்டைச் சரி பண்ணத்தான் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...