6 Apr 2023

மகிழ்வுந்து வாங்காமைக்கான மகிழ்ச்சியான காரணங்கள்

மகிழ்வுந்து வாங்காமைக்கான மகிழ்ச்சியான காரணங்கள்

ஏனய்யா இன்னும் மகிழ்வுந்து (கார்) வாங்காமல் இருக்கிறீர் என்று என்னைக் கேட்டவர்களை எண்ணிச் சொல்ல வேண்டும் என்றால் மக்கள்தொகைக் கணக்கெடுப்புதான் நடத்த வேண்டும். அவ்வளவு பேர் கேட்டு விட்டார்கள். இது குறித்து நான் முன்பே சில பதிவுகள் எழுதியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். அந்த எண்ணிக்கை கணக்கும் சரியாக ஞாபகம் இல்லை. என் பதிவுகளைத் தொடர்ச்சியாகப் படித்து வருபவர்கள் யாரேனும் இருப்பின் அந்த எண்ணிக்கையைச் சொல்லுங்கள்.

ஒவ்வொரு முறையும் ஏன் மகிழ்வுந்து வாங்கவில்லை என்பதற்கு வெவ்வேறு விதமான காரணங்கள் தோன்றுகின்றன. அதனால் அதுபற்றி இப்படிப் பல பதிவுகள் எழுத வேண்டியிருக்கிறது.

காரில் கால் வைத்து ஏறுவது பெரிதில்லை, நிலைமை தலைகீழாக மாறி காரை விற்று காரிலிருந்து கால் இறங்காமல் போவதுதான் பெரிது என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். இப்போது நிலைமை அப்படியில்லை. ஒரு ரூபாயைக் கட்டி விட்டு மாதா மாதம் தவணைத்தொகைச் செலுத்திக் கொண்டும் அல்லது செலுத்தாமல் இருந்து கொண்டும் காரை விட்டு இறங்காமல் ஓட்டிக் கொண்டு போவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இப்போது கேள்வி என்னவென்றால், காரை வாங்கி விட்டீர்கள், காரை எங்கே நிறுத்துவீர்கள்? குடியிருக்க வாங்கிய அறுநூறு சதுர அடி வீடு முப்பது லட்சத்தை முழுங்கி விடுகிறது. தவணை முறையில் வாங்கிய காரைப் பத்துக்குப் பத்து சதுர அடி எனக் கணக்கு வைத்து நூறு சதுர அடி வேண்டும் என்றாலும் அதற்கு ஐந்து லட்சம் வேண்டும். அதற்கு ஏன் ஐந்து லட்சத்தைச் செலவு செய்ய வேண்டும் என்று பலர் தெருவோரத்தில் நிறுத்தி விடுகிறார்கள்.

சாலையோரத்தைப் பார்த்துக் கொண்டு போனால் மரங்கள் இருந்த ஓரங்கள் எல்லாம் மகிழ்வுந்துகளாக நிற்கின்றன.

ஐந்து லட்சமோ, பத்து லட்சமோ அல்லது அதை விட கூடுதல் லட்சமோ இப்படி மகிழ்வுந்தை வாங்கி தெருவோரம் நிறுத்த ரொம்பவே மன தைரியம் வேண்டும். நம் மக்களுக்கு இந்த மன தைரியம் நிறைய இருக்கிறது. எனக்கு இல்லை. அப்படி ஒரு மன தைரியம் வரும் காலத்தில் மகிழ்வுந்தை வாங்கிக் கொள்ளலாம் என்று இருக்கிறேன்.

இதை விட அடுத்த சிரமம் அந்த மகிழ்வுந்தை வெளியே எடுத்துச் சென்றால் நிறுத்தும் இடம் கிடைக்காமல் அல்லாடுவது. எவ்வளவு அல்லாட்டம் என்றாலும் மகிழ்வுந்தில் சென்று வரும் கௌரவத்தை விட்டு விட முடியாது, அதை ஆனந்த அவஸ்தையாக எடுத்துக் கொள்பவர்களால்தான் மகிழ்வுந்தை வைத்துக் கொள்ள முடியும். அப்படி ஆனந்த அவஸ்தைக்கு மனம் இன்னும் பக்குவப்படவில்லை எனக்கு.

இரு சக்கர வாகனத்தில் செல்லும் போதே பல நேரங்களில் வண்டியை நிறுத்த இடம் கிடைக்காமல் அல்லாடுவதை நினைக்கும் போது நான்கு சக்கரங்களைக் கொண்ட மகிழ்வுந்தை வாங்கி வைத்துக் கொண்டு அதை நிறுத்தவும் முடியாமல் செலுத்தவும் முடியாமல் படப்போகும் அவஸ்தையை நினைத்துப் பார்த்தாலே எனக்கு மகிழ்வுந்து வாங்கும் ஆசை போய் விடுகிறது.

இரு சக்கர வாகனத்தை விட நான்கு சக்கர வாகனத்தில் வேகமாகச் செல்லலாம் என்பது உண்மைதான் என்றாலும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டால் நான்கு சக்கர வாகனத்தை விட இரு சக்கர வாகனம் செல்லும் வேகத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். மிதிவண்டி செல்லும் இடைவெளியில் முச்சக்கர வாகனத்தைச் செலுத்த முடியும் என்று அனுபவஸ்தர்கள் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். அப்படியானால் எறும்பு நுழையும் இடைவெளியில் இரு சக்கர வாகனத்தைச் செலுத்தலாம். நான்கு சக்கர வாகனத்தைச் செலுத்த முடியுமோ?

இவை அனைத்தும்தான் நான் மகிழ்வுந்து வாங்காமல் இருப்பதற்குக் காரணம் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறேன். ஒருவேளை மகிழ்வுந்து வாங்கி விட்டால் அதற்கான பெருமிதமான காரணங்களை வேறு விதமாகத்தான் சொல்ல வேண்டும்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...