2 Apr 2023

வருங்காலத்தில் என்ஜினியரிங்கைப் போலாகும் எம்.பி.பி.எஸ்.

வருங்காலத்தில் என்ஜினியரிங்கைப் போலாகும் எம்.பி.பி.எஸ்.

குழந்தைகளை விருப்பம் போல படிக்க வையுங்கள். அவர்களின் விருப்பம் போல அவர்களின் ஆர்வத்திற்கேற்ப படிக்க வையுங்கள்.

மருத்துவராகத்தான் ஆக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். அதற்காகக் குழந்தைகளுடன் போராடாதீர்கள். நீட் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்று நீட்டி முழங்கி அவர்களைக் கட்டாயப்படுத்தாதீர்கள்.

குழந்தைகள் விருப்பம் போலப் படிக்கட்டும். எல்லா படிப்பிலும் வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

பெற்றோர்கள் ஒரு விசயத்தை மறந்து விடல் ஆகாது. இனிவரும் காலங்களில் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காது. படித்த படிப்பை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு ஏற்பதான் வேலை வாய்ப்புகள் உருவாகப் போகின்றன.

நான் நான் கடந்து வந்த அனுபவப் பாதையை வைத்து சிலவற்றைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.

நான் சிறுபிராயத்தில் படித்துக் கொண்டிருந்த போது பொறியியல் படிப்பு ரொம்ப பிரமாதமாகப் பேசப்பட்டது. அதிலும் பல்தொழில்நுட்பம் எனும் பாலிடெக்னிக் படித்து விட்டால் போதும் எப்படியும் வேலை வாய்ப்பு கிடைத்து விடும் என்று உறுதியாக நம்பப்பட்டு வந்தது.

படிப்படியாக நான் படித்துக் கொண்டு வந்த போது பல்தொழில்நுட்பம் எனும் பாலிடெக்னிக் படிப்பு சாதாரணப் படிப்பாகி விட்டது. பொறியியல் படிப்புக்கு மட்டும் கொஞ்சம் மவுசு இருந்தது. அதுவும் அடுத்தடுத்த ஆண்டுகளில் காலாவதியாகி விட்டது.

இப்போது பார்க்கையில் பொறியியல் எடுத்து படிப்பதை விட கலைக்கல்லூரியில் ஒரு பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்து படிப்பதை விரும்புபவர்கள் அதிகரித்து விட்டார்கள். பொறியியல் படிப்பை விட கலைக்கல்லூரி படிப்புக்கு இப்படி ஒரு மவுசு வரும் என்று என் காலத்தில் சொல்லியிருந்தால் யாரும் நம்பி இருக்க மாட்டார்கள். ஆனால் வந்து விட்டது. நிலைமை அப்படித்தான் ஆகிக் கொண்டிருக்கிறது.

என் கணிப்பு சரியாக இருந்தால் மருத்துவப் படிப்புகளுக்கான கதியும் இன்னும் சில பத்தாண்டுகளில் அப்படித்தான் ஆகும். அதாவது பொறியியல் படிப்புகளைப் போல மதிப்பிழந்து போகும். அப்படித்தான் நடந்தாக வேண்டும். அப்படி வருங்காலத்தில் மதிப்பிழக்கப் போகும் ஒரு படிப்பிற்காக உங்கள் குழந்தைகளின் ஆர்வத்தை நசுக்கி விடாதீர்கள். இதனால் நான் மருத்துவப் படிப்பைக் குறைத்து மதிப்பிட்டு விடுவதாக நினைத்து விட வேண்டாம். குழந்தைகளின் ஆர்வத்திற்கு முன்பு அவர்களின் ஆர்வத்திற்கு ஒத்து வராத எந்தப் படிப்பம் மதிப்பு குறைந்ததுதான் என்பதைத்தான் சொல்ல விரும்புகிறேன்.

உங்கள் குழந்தைகளுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதில் படிக்கட்டும், அதையே தனக்குரிய துறையாக அவர்கள் தேர்ந்தெடுக்கட்டும். அது ஓவியமாக இருந்தாலும் அதை ஒரு படிப்பாக எடுத்துப் படிக்க கவின் கலைக்கல்லூரிகள் இருக்கின்றன. நடிப்புக் கலை என்றாலும் அதையும் ஒரு படிப்பாக எடுத்துப் படிப்பதற்கான கல்லூரிகள் உருவாகி விட்டன.

வருங்காலத்தில் உங்கள் குழந்தைகள் தாங்கள் படித்த படிப்பை எப்படிப் பயன்படுத்தப் போகிறார்கள் என்பதைப் பொருத்தே அவர்கள் வேலைவாய்ப்பைப் பெற முடியும் என்பதையே மீண்டும் வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன். எல்லா காலகட்டத்திலும் இந்த அடிப்படை மாறாது.

படித்தவர்கள் குறைவாக இருந்த காலகட்டத்தில் எதைப் படித்தாலும் வேலை கிடைத்தது. படித்தவர்களின் எண்ணிக்கை மிகும் போது படிக்கின்ற படிப்பைப் பயன்படுத்தும் திறனைப் பொருத்துதான் வேலை வாய்ப்பு கிடைக்கும் மற்றும் அமையும்.

வருங்காலத்தில் மருத்துவ படிப்புக்கான கல்லூரிகள் அதிகமாகவே செய்யும். மருத்துவம் படித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கவே செய்யும். மருத்துவர்களுக்கும் வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படவும் செய்யும். இதை மிகையான கற்பனையாகக் கருத வேண்டும். அப்படி நீங்கள் நினைத்தாலும் இந்த மிகைக் கற்பனை சில பத்தாண்டுகளுக்குள் நிஜமாவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாகவே இருக்கிறது.

மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் போதுதான் மருத்துவர்களின் திறனைப் பார்க்காமல் மக்கள் எந்த மருத்துவராக இருந்தாலும் பரவாயில்லை என்று மருத்துவம் பார்க்க தயாராக இருப்பார்கள். மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது திறன் மிகுந்த மருத்துவர்களை நாடித்தான் மக்கள் போவார்கள்.

இது நான் சொல்லும் அடிப்படைக் கொள்கையோடு அப்படியே ஒத்துப் போவதைப் பாருங்கள். அதாவது தான் படித்த மருத்துவப் படிப்பை யார் திறமையாகப் பயன்படுத்தத் தெரிந்திருக்கிறார்களோ அவர்களே மக்கள் நாடும் மருத்துவராக இருப்பார்.

தன்னுடைய படிப்பைத் திறமையாகப் பயன்படுத்தும் திறனும் ஆற்றலும் யாருக்குக் கிட்டும் என்றால் அந்தப் படிப்பை ஆர்வமாக எடுத்துப் படிப்பவர்களுக்குத்தான் கிட்டும்.

நாம் ஒரு படிப்பைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்து அதில் குழந்தைகளிடம் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுமாறு கூறுவதை விட குழந்தைகளே ஆர்வமாக இருக்கும் படிப்பைப் படிக்க அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதே அவர்களுக்குச் செய்யும் மிகச் சிறந்த கடமையாக இருக்கும்.

நம்முடைய ஆசை நமக்கு. குழந்தைகளின் ஆர்வம் அவர்களுக்கு. நம்முடைய ஆசைகளுக்காகக் குழந்தைகளின் ஆர்வத்தைப் பலி கொடுக்க நினைத்தால் வருங்காலத்தில் அவர்கள் வேலைவாய்ப்பற்று அலைவார்கள். அந்த வகையில் குழந்தைகள் வருங்காலத்தில் வேலைவாய்ப்பற்று அலைவதற்குப் பெற்றோர்களாகிய நம்முடைய மருத்துவக் கனவுகள் காரணமாக அமைந்து விடக் கூடாது.

வருங்காலத்தில் பொறியியல் படிப்புகள் போல ஆகப் போகும் மருத்துவப் படிப்புகளுக்காக நாம் ஏன் நம் குழந்தைகளின் விலைமதிப்பற்ற ஆர்வத்தை மதிப்பிழக்கச் செய்ய வேண்டும்?

அதாவது வருங்காலத்தில் பி.இ.க்கு நேர்ந்த கதிதான் எம்.பி.பி.எஸ்.க்கும் ஆகப் போகிறது. அப்படிப்பட்ட எம்.பி.பி.எஸ்க்காகக் குழந்தைகளின் கழுத்துகளை நீட் எனும் கயிறு கொண்டு இறுக்க வேண்டியதில்லை. அவர்களாக விரும்பி நீட் தேர்வை எழுதினால் எழுதட்டும்.

நம்முடைய ஆசைகளுக்காகத் தங்களைக் கட்டாயப்படுத்திக் கொண்டும் வருத்திக் கொண்டும் அவர்கள் நீட் தேர்வை எழுத வேண்டியதில்லை. பெற்றோர்களின் ஆசைகளுக்காக நீட்டை எதிர்கொண்டு மருத்துவராகும் ஒருவர் வருங்காலத்தில் வேலைவாய்ப்பற்ற மருத்துவராக ஆவதற்கான நிகழ்தகவு அதிகமாக இருக்கிறது.

குழந்தைகள் அவர்களின் ஆர்வத்திற்கேற்ப படிக்கட்டும். அதற்கு வழிகாட்டுவதும் துணை செய்வதும் மட்டுமே பெற்றோர்களாகிய நம்முடைய கடமையாக இருக்கட்டும்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...