3 Apr 2023

வங்கிச் சேவைகள் எனும் வங்கி வதைகள்

வங்கிச் சேவைகள் எனும் வங்கி வதைகள்

நான் சேமிப்புக் கணக்கைத் துவங்க அல்லல்பட்ட பல்வேறு வங்கிகளுள் கரூர் வைஸ்யா வங்கியும் ஒன்று. அதிகம் என்னை அல்லல்படுத்திய வங்கி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி என்றால் அதற்கடுத்து அதிகம் அல்லல்படுத்திய வங்கி இதுதான்.

பொதுத்துறை வங்கிகளுக்கு இணையாக ஒரு தனியார் வங்கியும் கொடுமைப்படுத்தாவிட்டால் நன்றாக இராது என்பதற்காகக் கரூர் வைஸ்யா வங்கியும் இந்தப் பட்டியலில் இணைந்திருக்கலாம்.

தங்க நகைக்கடன் கொடுப்பதில் காட்டும் ஆர்வத்தை அந்த வங்கி வேறு எதிலும் காட்டி நான் பார்த்ததில்லை. கிட்டதட்ட ஓர் அடகுக்கடையின் மாதிரியில் செயல்படும் வங்கியாக அது இருக்கிறது.

ஏதோ இருக்க வேண்டும் என்பதற்காகச் சில சேமிப்புக் கணக்குகள் அந்த வங்கியில் இருக்கலாம். அந்த வங்கியின் பெரும்பான்மையான வங்கிக் கணக்குகள் நடப்புக் கணக்குகளாகவோ அல்லது கடன் கணக்குகளாகவோத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஒரு சாதாரண நிரூபணத்துக்கும் கூட அதற்கான உரிய ஆவணங்களையும் சான்றையும் கொடுத்து விட்டு இந்த வங்கியில் நாள் பூராவும் தேவுடு காக்க வேண்டும். அந்தத் தேவுடுவையும் வங்கிக்குள் இருந்து காக்க முடியாது. வங்கிக்கு வெளியே எங்கோ ஒரு சாக்கடைக் கால்வாயின் அருகிலோ, வெப்பமும் புகையும் பெருகும் போக்குவரத்து மிகுந்த சாலையோரத்தில் கிடைத்த ஏதோ ஓர் இடத்திலோதான் காத்திருக்க முடியும். ஏனென்றால் அவர்கள் வங்கியில் யாரையும் காக்க வைக்க மாட்டார்களாம். அதாவது வங்கிக்குள். வெளியே நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்திருக்கலாம்.

இந்த நாட்டில் அனைவரும் சமம் என்பதால் அனைவரையும் வங்கிக் கணக்கைத் துவங்கச் சொல்லி சமமாக யாருக்கும் எந்த விதமான பாரபட்சமும் இல்லாமல் கொடுமைப்படுத்தல் சமமாகப் பாவிக்கப்படுகிறதா என்ன?

வங்கிகள் இப்படி எளியோர் வதைபடும் முகாம்களாக மாறிக் கொண்டு இருக்கின்றன. வங்கிச் சேவைகள் மாறி வங்கி வதைகள் தொடங்கி விட்டன.

இந்திய அரசின் மத்திய வங்கி ஒவ்வொரு வங்கியிலும் இவ்வளவு சேமிப்புக் கணக்குகள் இருக்க வேண்டும் என்ற புதிய நிபந்தனைகள் எதையாவது ஒன்றைக் கொண்டு வர வேண்டும். அப்படிக் கொண்டு வந்தால் சேமிப்புக் கணக்கு துவங்க ஆசைப்பட்டவர்கள் பிழைத்துக் கொள்வார்கள். இல்லையென்றால் கஷ்டம்தான். லேமன் பிரதர் போன்ற பிரதர்கள் வந்தால் இந்திய வங்கிகள் அனைத்தும் சீட்டுக்கட்டுகளைப் போலச் சரிந்து விடும். அவர்கள் ஏற்கனவே வந்து விட்டார்கள் என்பது வெளிப்படையாகச் சொல்ல முடியாத விசயம்.

சாமான்ய மக்களுக்கு வங்கிச் சேவை என்பது சமத்காரமான சாதிக்கப்பட்ட சாதனையாகத்தான் இருக்கிறது. சாமான்ய மக்களை நோக்கி வங்கிகள் பயணிக்க வேண்டிய பாதை என்பது பல ஒளியாண்டு தூரம் நீண்டு கிடக்கிறது.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...