1 Apr 2023

குழந்தைகளைத் தொட்டு விட்ட போதைப் பொருட்கள்

குழந்தைகளைத் தொட்டு விட்ட போதைப் பொருட்கள்

குழந்தைகள் போதைப் பொருட்களைத் தொடுகிறார்கள் என்பதை விட போதைப் பொருட்கள் குழந்தைகளைத் தொடுகின்றன என்பதுதான் பொருட்ககுற்றம் இல்லாத சரியான வாக்கியமாக இருக்கும். ஒரு பொறுப்பான சமுதாயம் குழந்தைகளின் கைகளில் போதைப் பொருட்கள் தவழாத வண்ணம் அக்கறையுடன் செயல்பட வேண்டும்.

உலகின் அக்கறையற்ற சமூகங்களின் பட்டியல் எடுத்தால் தமிழ்ச் சமூகம் முதலிடத்தில் இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்தச் சமூகத்தை டாஸ்மாக் சீரழிப்பதைப் போல வேறெந்த சமூகத்தையும் சீரழிக்காது. விவரம் அறிந்த வயதில் உள்ள பலரும் இன்று டாஸ்மாக் அடிமைகள். விவரம் அறியாத வயதில் இருக்கும் குழந்தைகளோ போதை அடிமைகள். எப்படி நடந்தது இந்த மாற்றம்?

சமூக அக்கறையின்மை பல்கிப் பெருகி விட்ட தமிழ்ச் சமூகத்தில் அளவுக்கதிகமாக மது அருந்துவதோ, சிறார்கள் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதோ கண்டிப்பிற்குள்ளோ தண்டனைக்குள்ளோ வராத சமூக அங்கீகாரம் பெற்ற செயல்களாக மாறி விட்டன.

சில பத்தாண்டுகளுக்கு முன்பு குடிகாரர் என்று தெரிந்தால் ஏளனமாகப் பார்ப்பார்கள். திருமணம், கருமாதி போன்ற சடங்குகளில் அவரைத் தீண்டத்தகாதவரைப் போலப் விலக்குவார்கள்.

எப்போது இந்தச் சமூகத்துக்கு சமூக நலத்தை விட எப்படியாவது சம்பாதிக்கும் சுயநலமான பணம் மட்டுமே முக்கியமாகப் போனதோ அன்றிலிருந்து மதுவும் போதையும் முக்கியமாகப் போய் விட்டது. எப்படியோ பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையில் மதுவை ஊட்டியும் போதையைக் காட்டியும் பணத்தைச் சம்பாதிப்பது தப்பே இல்லை என்ற மனோதர்மம் தமிழ்ச் சமூகத்தில் வாழும் பெரும்பாலோனார் மனதில் ஆழப் பதிந்து விட்டது.

டாஸ்மாக் இல்லாத ஊரில் குடியிருக்க மாட்டோம் என்று இடம் பெயரும் குடும்பங்கள் இப்போது அதிகமாகி விட்டன. ஆண்களோடு சேர்ந்து கொண்டு பெண்களும் குடிபோதைக்கு அடிமையாகும் நிலைகள் பெருகிக் கொண்டிருக்கின்றன. ஆண்கள், பெண்கள் என்று ஆகி விட்ட பின்பு குழந்தைகளை மட்டும் ஏன் விட்டு வைக்க வேண்டும் என்று குழந்தைகளுக்கும் மதுபோதையைப் பழக்கி விடும் குடும்பங்களும் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

மதுபோதை ஒரு பக்க பிரச்சனை என்றால் போதைப் பொருட்கள் மற்றொரு பக்க பிரச்சனை. இந்த இருபக்க பிரச்சனைகளை அலட்சியமாகக் கடந்தபடி தமிழ்ச் சமூகம் இதுவும் கடந்து போகும் என்று கடந்து போய்க் கொண்டிருக்கிறது.

புகைப்பழக்கமும் போதைப் பழக்கமும் ஏற்படும் சராசரி வயது கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு கணக்கெடுத்தால் அந்த வயது இருபதுக்கு மேல் இருக்கும். தற்போது அந்த வயது ஐந்து அல்லது ஆறை எட்டி விட்டது.

இளஞ்சிறார்கள் ‘குட்டித் தலையணை’ என்று பெயரில் போதைப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். பல்வேறு பெயர்களில் போதை மிட்டாய்கள், சாக்லெட்டுகள், பானங்களும் புழக்கத்தில் இருக்கின்றன.

சில பத்தாண்டுகளுக்கு முன்பு பான்பராக் என்ற பெயரில் இருந்த ஒற்றை போதைப் பொருள் இப்போது ஹான்ஸ் மற்றும் பல்வேறு பெயரிலான குட்கா பாக்குகளாக உருமாறிக் கொண்டே இருக்கிறது. கஞ்சா என்ற போதைப் பொருளும் பலவிதமாக பவுடர்களாக, பாக்கெட்டுகளாக, வாயில் நுழையாத பல்வேறு வேதியியல் பெயர்கள் கொண்டதாக உலவத் தொடங்கி விட்டது.

பள்ளிக் கூடங்களிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் போதைப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என்ற கட்டுபாடு எழுத்தில் மட்டும் இருக்கிறது. இன்று போதைப் பொருட்களின் கேந்திரமே பள்ளிக் கூடங்களிலிருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் இருக்கும் கடைகள்தான். பெட்டிக் கடைகளில் கூட போதைப் பொருட்கள் குழந்தைகள் உண்ணும் தின்பண்டங்களின் வடிவில் மாறுவேடமிட்டு விற்பனைக்கு வந்து விட்டன.

அரசாங்கமே தற்காலங்களில் மது போதைகளை விற்பனை செய்யும் மாபெரும் வியாபார கேந்திரங்களாக இருப்பதால் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிரான அரசாங்க சட்டங்கள் பலவீனமாக இருக்கின்றன. அரசாங்கங்கள் பெரிய அளவில் மது  போதை நிறுவனங்களாக இருப்பதால் போதை மாபியாக்கள் சிறிய அளவிலான போதை நிறுவனங்களாக மிகவும் வலுவாகச் செயல்படுகின்றன.

போதைப்பொருள் பழக்கம் எப்படி ஒருவரைச் சீரழிக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்கள் தொடர்ச்சியாக அதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் அடிமை நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். தொடர்ச்சியாகப் போதைப் பொருட்களைப் பயன்படுத்த பணம் வேண்டுமே? அந்தப் பணத்திற்காக அவர்கள் வழிப்பறி, கொலை, கொள்ளை வரை செல்ல யோசிப்பதில்லை.

முன்பெல்லாம் கொலைகாரர்களின் சராசரி வயது இருபதுக்கு மேலாக இருக்கும். தற்போது அந்த வயது பத்திலிருந்து தொடங்குகிறது. அதற்குக் காரணம் இருக்கிறது. போதைப் பொருட்கள் வாங்க பணம் கொடுக்காத போது கொலை செய்து கூட சிறார்கள் பணத்தைப் பெற முயற்சிக்கிறார்கள்.

செயின் பறிப்பு, வழிப்பறிகளில் ஈடுபடும் குற்றச் செயல்களின் குற்றவாளிகளின் பட்டியலில் அண்மைக் காலமாக குழந்தைகள் அதிகமாக இடம் பெறுகிறார்கள். தமிழ்ச் சமூகத்தின் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகள் நிரம்பி வழியக்கூடிய அளவுக்கு சிறார் குற்றங்கள் பெருகிக் கொண்டிருக்கும் கேந்திரமாக தமிழகம் மாறிக் கொண்டிருக்கிறது.

பதினெட்டு வயதுக்குக் குறைவானர்களுக்குப் போதைப் பொருட்களை விற்கக் கூடாது, பழக்கக் கூடாது என்பதற்கான வலுவான சட்டங்கள் இருக்கின்றன. இருந்தாலும் லஞ்சம், ஊழல், பணப்பேராசை மிகுந்த மனிதர்களைக் கொண்ட நம் தமிழ்ச் சமூகத்தில் அந்தச் சட்டங்களை எப்படி நாம் எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறோம்?

தொடர்ந்து போதைக்கு அடிமையாகும் குழந்தைகளை எப்படிக் காப்பாற்றப் போகிறோம்? போதையானது மனிதர்களின் நரம்பு மண்டலத்தை மட்டுமா, சமூகத்தின் நரம்பு மண்டலத்தையும் அல்லவா பாதிக்கிறது. ஒட்டுமொத்த சமூகத்தின் மனநலமும் பாதிக்கப்பட்ட பின்பு போதையின் மூலம் கிடைத்த வருவாயையும் வருமானத்தையும் வைத்து நாம் யாருக்காக வாழப் போகிறோம்?

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...