தி.ஜா.வின் ‘அமிர்தம்’ ஒரு பார்வை
தி. ஜானகிராமன் எனும் தி.ஜா.வைப்
படித்தவர்களுக்கு அவர் மேல் இருக்கும் கவர்ச்சி விநோதமானது. பெரும்பாலான வாசகர்களுக்குத்
தி.ஜா. அறிமுகாவது ‘மோகமுள்’ என்ற புதினத்தின் வாயிலாகவோ அல்லது ‘அம்மா வந்தாள்’ புதினத்தின்
வாயிலாகவோ இருக்கலாம். இந்த இரு புதினங்களையும் படித்தவர்களுக்கு அவர் ஒரு சிறுகதை
ஆசிரியரும் கூட என்று சொல்லும் போது நம்ப முடியாதது போல இருக்கும். மற்றவர்களுக்கு
எப்படியோ எனக்கு அப்படித்தான் இருந்தது.
புதினத்தினும் தி.ஜா.வின்
சிறுகதை வீச்சு ஆழமானது. செறிவானது என்றும் சொல்லலாம். அவரது புதினங்களைப் படிப்பதற்கு
முன் சிறுகதைகளைப் படித்தவர்கள் அவரது புதினங்களை நீளமான சிறுகதைகள் என்று உள்வாங்கிக்
கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.
தொடர்ச்சியாகத் தி.ஜா.வை
வாசிப்பவர்களுக்கு அவரது அடி – முடி பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் இயல்பாக உண்டாகி
விடும். அதனால் தி.ஜா.வைப் படிப்பவர்கள் அவரது மோகமுள், அம்மா வந்தாள் மற்றும் அவரது
சிறுகதைகளோடு நிறுத்தி விட முடியாது. அவரது அனைத்து எழுத்துகளையும் வாசிக்க வேண்டும்
என்ற இயல்புணர்வில் அவரது முதல் சிறுகதையை, அவரது முதல் புதினத்தை என்று அவரது முதல்
வரிசை குறித்து மனம் தானாகவே தேடத் தொடங்கி விடும். நானும் அப்படித்தான் அவரது ‘அமிர்த’த்தைத்
தேடிப் போனேன். அதுதான் அவரது முதல் புதினம். ‘கிராம ஊழியன்’ இதழில் தொடராக வந்தப் புதினம் அது.
தி.ஜா.வின் பிற்கால எழுத்துகளுக்கான
பல தொடக்கங்களை ‘அமிர்தம்’ புதினம் தொடங்கி வைத்திருப்பதை வாசிக்க வாசிக்கப் புரிந்து
கொள்ள முடியும். ஒரு தேர்ந்த புதின வாசிப்பாளரால் நாவலைக் கடக்கும் ஒரு சில அத்தியாயங்களிலேயே
புதினத்தின் போக்கை ஊகித்து விட முடிகிற அளவிலான புதினம்தான் ‘அமிர்தம்’. தி.ஜா.வின்
எழுத்து வசீகரமானது அப்புதினத்தை நீங்கள் யூகிக்க முடிந்தாலும் தொடர்ந்து உங்களை இழுத்துக்
கொண்டு செல்லும்.
கணிகையர் குறித்த எழுத்து
முதல் காப்பியத்தைப் படைத்த இளங்கோவடிகளிடமிருந்தே தொடங்கி விடுகிறது. சீத்தலைச் சாத்தனார்
கணிகையை மையப்படுத்தி மணிமேகலை எனும் ஒரு காப்பியத்தைப் படைத்து விடுகிறார். தி.ஜா.வின்
முதல் புதினமும் ‘அமிர்தம்’ எனும் கணிகையை மையப்படுத்திய எழுத்துதான். புதினத்தின்
போக்கு யூகிக்கக் கூடியதுதான் என்று முன்பே சொல்லி விட்டாலும் தொடர்ந்து வாசிக்கத்
தூண்டும் கவர்ச்சிதான் தி.ஜா.வின் எழுத்து ஜாலம் என்பதை மீண்டும் ஒரு முறை சொல்ல வேண்டியிருப்பதுதான்
தி.ஜா.வின் அப்புதினத்திற்குக் கிடைக்கும் வெற்றி எனலாம்.
காவிரியின் வண்டல் மண்ணில்
புரண்டவர்களுக்கு ஒருபோதும் தி.ஜா.வின் எழுத்தை விட முடியாது. அப்படியே மண்ணையும் அதன்
மணத்தையும் அந்த இரண்டையும் கவர்ந்து கலந்து பிறந்த சங்கீதத்தையும் தி.ஜா. அளவுக்கு
உருக்கி அப்படியே அதில் உருகி ஊற்றியவர்கள் குறைவு.
‘அமிர்தம்’ என்ற புதினம்
ஒரு முக்கோணக் காதலின் எழுத்துதான். ஆண் – பெண் – ஆண் என்ற முக்கோணத்தில் அந்த இரண்டு
ஆண்களின் பாத்திரத்தை தந்தை, மகன் என்று பொருத்திக் கொண்டு பெண் பாத்திரத்தில் ஒரு
கணிகையைப் பொருத்திக் கொண்டால் அமிர்தத்தின் கதை உங்களுக்கே புரிந்து விடும்.
இளங்கோவடிகள் மாதவியைப் படைத்தது
போலும், சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையை வார்த்தது போலும் தி.ஜா. அமிர்தத்தை வார்க்கிறார்.
அதில் மீறல் என்று பார்த்தால் தந்தை – மகன் என்ற உறவைக் கொணர்ந்து அவர் புதினத்தை முன்னகர்த்துவதுதான்.
‘அமிர்தம்’ என்ற இப்புதினத்தில்
ஆகப்பெரும் மற்றொரு சிறப்பு தி.ஜா. எழுதிச் செல்லும் உரையாடல்கள்தான். பாதி புதினத்தைக்
கடந்து விட்டால் வாசிப்பவர்களின் மனதில் வந்து உரையாடலைப் பேசுவது போல மயக்கத்தை உண்டு
பண்ணி விடும் மகோன்னதத்தைத் தி.ஜா. உண்டு பண்ணி விடுகிறார்.
வெகு இயல்பாகச் செல்லும்
நாவலில் அவர் காட்சிப்படுத்தும் நிலவியலும் பாத்திர உரையாடல்களும் வாசித்து முடித்த
பின்பும் மனதோடு ஒட்டிக் கொள்ளக் கூடியவை. ஜென்ம ஜென்மமாக அந்தப் பாத்திரங்களோடு வாழ்ந்தது
போன்ற ஒரு பிரேமையைத் தரக் கூடியவை.
தி.ஜா.வின் எழுத்தை மோகமுள்ளில்
தொடங்கியிருந்தாலும் அம்மா வந்தாளில் தொடங்கியிருந்தாலும் அமிர்தத்தில் தொடரும் போதும்
அதே கவர்ந்து கொள்ளும் ஈர்ப்பைக் கொண்டதாக இருக்கிறது தி.ஜா.வின் வசீகரம். அதுதான்
தி.ஜா. என்று சொல்வதா தி.ஜா. என்றால் அப்படித்தான் என்று சொல்வதா என்பதை புதினத்தை
வாசித்து முடித்ததும் நீங்களே உணர்வீர்கள்.
*****
No comments:
Post a Comment