11 Apr 2023

கடன் வாங்கி விவசாயம் செய்ய வேண்டாம்!

கடன் வாங்கி விவசாயம் செய்ய வேண்டாம்!

நீங்கள் அந்தக் காலத்து ஆளென்றால்,

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

என்ற உலகநீதியைப் படித்திருப்பீர்கள். உலகநீதியில் பல ‘வேண்டாம்’ வகையறாக்கள் இருக்கின்றன. அது அந்தக் காலத்தில் எழுதப்பட்டதால் அதில் ஒரு ‘வேண்டாம்’ விடுபட்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அது என்ன ‘வேண்டாம்’ என்றால் ‘கடன் வாங்கி விவசாயம் செய்ய வேண்டாம்’ என்ற வேண்டாம்தான்.

ஏன் இப்படி என்றால், அதற்கான காரண காரியங்களைத்தான் இதில் எழுதப் போகிறேன்.

கடன் வாங்கி வீடு வாங்குவோரையும் பொருட்கள் வாங்குவோரையும் முதலீடு செய்வோரையும் அண்மைக் காலமாக அதிகமாகப் பார்க்கிறேன். எனக்கென்னவோ அப்படிச் செய்ய வேண்டாம் என்று தோன்றுகிறது.

ஒரு வணிகவியலாளர் (Businessman / Businesswoman) வாங்கும் கடனுக்கும் தனிநபர் தனது தேவைகளுக்காக வாங்கும் கடனுக்கும் வித்தியாசம் இருக்கிறது. வணிகவியலாளர் கடனுக்கான வட்டியை வாடிக்கையாளர்களிடம் வசூலித்து விடுவார். தனிநபர் வாங்கும் கடனுக்கான வட்டிக்கான தொகையை யாரிடம் சென்று வசூலிக்க முடியும்? அவரிடம் வட்டியை வசூலிக்கத்தானே வங்கிகள் கடனே கொடுக்கின்றன என்பதால் வட்டி எனும் தண்டத்தை அவர்தான் கட்டி அழ வேண்டும்.

இதை விட இன்னும் மோசமானது கடன் வாங்கி விவசாயம் செய்வது. அதனால்தான் பெரும்பாலான வங்கிகள் விவசாயக் கடனை நகையின் பேரில் தருகின்றன. விவசாயம் செய்தெல்லாம் கடனுக்கு வாங்கிய தொகையைக் கட்ட முடியாது என்பது வங்கிகளுக்கு நன்றாகவே தெரியும். அதுவே நகையின் பேரில் விவசாயக் கடன் என்று கொடுத்து விட்டால் எப்படியாவது நகையை மீட்க விவசாயிகள் முயன்றுதானே ஆக வேண்டும். செய்த விவசாயத்தில் நட்டம் வந்தாலும், முதலே மோசம் போனாலும் நகையை விட்டுக் கொடுத்து விட முடியாது. அப்படியே விட்டுக் கொடுத்து விட்டாலும் அதனால் வங்கிகள் ஒன்றும் மோசம் போய் விடாது. நகையை விற்று முதலை வட்டியோடு தேற்றிக் கொள்ளும்.

கடன் வாங்கி விவசாயம் செய்ய வேண்டாம் என்பதற்கு நான் கூறும் முக்கிய காரணம் யோசிக்க வேண்டிய ஒன்று. விவசாயம் என்றில்லை எதற்குக் கடன் வாங்கினாலும் வாங்கிய கடனுக்கான வட்டி ஏறப் போவது சர்வ நிச்சயம். வாங்கிய கடனில் விவசாயம் செய்து விளைவித்த நெல் மூட்டைகள் விலை ஏறும் என்பது நிச்சயமில்லாதது. சொல்லப் போனால் சென்ற வருட விலையை விட விலை இறங்கவும் வாய்ப்பு இருக்கிறது. நெல் மூட்டை விலை இறங்குகிறது என்பதற்காக விவசாயக் கூலி, விதை நெல்லின் விலை, களைக்கொல்லியின் விலை, உர மூட்டைகளின் விலை, பூச்சிக்கொல்லிகளின் விலை என்று எதுவும் குறைந்து விடப் போவதில்லை.

நிச்சயமாக உரிய விலை கிடைக்கும் என்று தெரியாத ஒரு விளைபொருளை விவசாயிகள் விலை ஏறும் கடனையும் கூலியையும் மற்றும் விவசாயத்திற்கான இடுபொருள்களையும் நம்பி செயல்படுவது அபாயகரமான சூதாட்டம் என்றே சொல்லலாம்.

பொதுவாகவே கடன் வாங்க வேண்டாம். அது வங்கிக் கடன் என்றாலும்தான். வங்கிக் கடனே வேண்டாம் என்றால் கந்து வட்டி, மீட்டர் வட்டி என்ற வகையறாக்கள் எல்லாம் அறவே வேண்டாம். அதிலும் கடன் வாங்கி விவசாயம் என்பது வேண்டவே வேண்டாம் வகையறா. ஏனென்றால் பெருங்கடன் என்பது கொடுத்தவர்களைக் கொழிக்கச் செய்யும், வாங்கியவர்களை அழிக்கச் செய்யும்.

 இதற்கு மேலும் கடன் வாங்கி விவசாயம் செய்வேன் என்றால் நீங்கள் இந்த நாட்டின் வணங்கப்பட வேண்டிய தெய்வங்கள். தெய்வங்களைச் சாகடித்துப் புனிதப்படுத்தி வழிபடுவதுதான் இந்தத் தேசத்தின் பண்பாடு என்பதை மறந்து விடாதீர்கள்.

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...