4 Apr 2023

மார்கழி மாதத்து அதிகாலைகள்

மார்கழி மாதத்து அதிகாலைகள்

மார்கழி மாதத்துக் குளிரைத் தெறிக்க விட வேண்டும் என்பதற்காகவே கோலம் போடுவதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அது பெண்களுக்கு என்றால் ஆண்களும் தூங்க முடியாமல் தவிக்க வேண்டும் என்று கோயிலுக்குக் கோயில் ஒலிப்பெருக்கிகளை வைத்து பாடல்களை ஒலிபரப்புவதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அவரவர்களுக்குப் பிடித்த பாடல்களைக் கேட்க தொலைகாட்சி இருக்கிறது. பாடல் கேட்பதற்கென்றும் படம் பார்ப்பதற்கு என்று கணிப்பொறிகளும் இருக்கின்றன. இதெல்லாம் மாறி கையடக்கமாகக் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் கைபேசிகளும் வந்து விட்டன. இருந்தும் மார்கழி மாதத்தில் ஒலிபெருக்கியில் பாடல் கேட்டாக வேண்டும். இதற்கென்றே சந்து பொந்துகளில் எல்லாம் கோயில் கட்டுபவர்கள் இருக்கிறார்கள். ஒரு தெருவுக்கே நான்கு கோயில்கள் இருந்தாலும் அத்தனைக்கும் ஒலிப்பெருக்கி வாங்கித் தர உபயதாரர்களும் இருக்கிறார்கள். அவர்களின் உபயத்தில் மார்கழி மாதத்தின் அதிகாலைகளில் காற்று மண்டலம் கலங்கிக் கொண்டிருக்கிறது.

அதிகாலை நான்கு மணிக்கே காலம் தவறாமல் கோயில்கள் மார்கழி மாதத்துப் பாடல்களை ஒலிபரப்ப தொடங்கி விடுகின்றன. எப்படியும் மூன்று மணி நேரத்திலிருந்து நான்கு மணி நேரம் வரை பாடல்களை நான் – ஸ்டாப்பாக ஒலிபரப்புகின்றன. அதற்குள் காது ஜவ்வு கிழிந்து தொங்கி விடுகிறது. அதுவும் எல்.ஆர். ஈஸ்வரியின் பாடல்கள் என்றால் காதே கிழிந்து தொங்கி விடும். இப்படிப் பாடல் பெற்ற பல கோயில்கள் உள்ள தெருவில் நாமெல்லாம் வசித்துக் கொண்டிருப்பது நமக்கெல்லாம் பெருமை தருவதுதான்.

ஒலிப்பெருக்கிகள் வராத காலத்தில் மக்கள் மார்கழி மாதத்து அதிகாலைப் பொழுதுகளில் திருப்பாவை, திருவெம்பாவை மற்றும் பஜனைப் பாடல்களைப் பாடிக் கொண்டு தெரு தெருவாகப் போய்க் கொண்டிருந்திருக்கிறார்கள். தொழில்நுட்ப வளர்ச்சி பலரும் பாடிக் கொண்டிருக்கும் கஷ்டத்தைக் குறைத்து எல்லாருக்கும் சேர்த்தாற்போல் ஒலிப்பெருக்கியைப் பாட வைத்துக் கொண்டிருக்கிறது. மார்கழி மாதத்துப் பாடல்களை இப்படி ஒரு பாரம்பரிய மரபின் தொடர்ச்சியாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

மார்கழி மாதத்துப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே பெண்கள் கோலம் போடுகிறார்கள். யார் வீட்டில் பரங்கிப் போட்டிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு பரங்கிப்பூக்களை சாயுங்காலமே வாங்கி வைத்து காலையில் கோலமிட்டு அதன் மையத்தில் வைத்து அத்துடன் சாயுங்காலமே பறித்துத் தயாராக வைத்திருந்த அருகம் புல்லையும் வைத்து விடுகிறார்கள்.

இவற்றை அட்சரம் பிசகாமல் கவனித்துக் கொண்டிருக்கும் ஆடுகள் கோலமிட்ட கோதையர்கள் நகரும் நேரத்தைப் பார்த்துக் கொண்டே இருந்து மஞ்சள் பூவையும் பச்சைப் புல்லையும் தின்று விட்டு ஹாயாகப் போய்க் கொண்டிருக்கிறது. பெண்களுக்கு அடுத்தடுத்து இருக்கும் வேலைகளில் பூவும் புல்லும் ஆட்டின் வயிற்றுக்குள் போய் விட்டதைக் கவனிக்க நேரம் இருப்பதில்லை.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...