5 Mar 2023

பீலிபெய் சாகாடும் பண்டங்கள்

பீலிபெய் சாகாடும் பண்டங்கள்

என்னதான் நடக்கிறது அதானி குழுமப் பங்குகளில்? ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை ஒட்டுமொத்த அதானி குழுமப் பங்குகளை நிலைகுழையச் செய்திருக்கிறது.

அதானி எண்டர்பிரைசஸ், அதானி டோட்டல் கேஸ், அதானி போர்ட்ஸ், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி கிரீன் எனர்ஜி, அதானி வில்மர் என அதானி பெயருள்ள அத்தனைப் பங்குகளும் பெருத்த சரிவைச் சந்தித்துள்ளன. இவை தவிர அதானி பெயர் இல்லாத அதானி நிறுவனப் பங்குகளாகி விட்ட அம்புஜா, ஏசிசி, என்டிடிவி போன்ற பங்குகளும் தள்ளாட்டத்தைச் சந்தித்துள்ளன.

மேற்கூறிய பங்குகள் அனைத்தும் அவற்றின் சொத்து மதிப்பிற்கும், சம்பாதிக்கும் அளவிற்கும் சம்பந்தமில்லாமல் மிகை மதிப்பேறிய சந்தை விலையில் உச்சபட்சமாக வர்த்தமாகிக் கொண்டிருந்தவை.

ஊதிப் பெருக்கப்பட்ட விலையில் வர்த்தமாகிய பங்குகள் அனைத்தும் ஹிண்டன்பர்க் என்ற ஊசி குத்தியதும் காற்று இறங்கிக் கொண்டிருக்கின்றன என்று சொல்வதா?

“பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின்.”   (குறள், 475)

என்ற வள்ளுவர் வாய்மொழியில் சொல்வதா? எப்படிச் சொன்னாலும் இரண்டும் அதானி பங்குகளுக்குப் பொருத்திப் போகக் கூடியதே.

ஹிண்டன்பர்க் அறிக்கை 17 லட்சம் கோடி வரை அதானி குழுமப் பங்குகளில் முறைகேடு இருப்பதாகக் குற்றம் சாட்டுகிறது. விதிமுறைகளுக்குப் புறம்பாக முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகக் குற்றம் சாட்டி 88 வினாக்களைத் தொடுக்கிறது.

88 வினாக்களுக்கும் அதானி குழுமம் முறையாக விடையளிக்காமல் தனக்கு ஏற்பட்டுள்ள அழுக்கை தேச இழுக்கு எனத் தூக்கிப் பிடிக்கப் பார்ப்பது பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அதானி எண்டர்பிரைசஸ் தொடர் பங்கு விற்பனையைத் (FBO) திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிவித்திருக்கிறது. இந்த நிலைமைக்கும் திருக்குறளினின்று சான்று காட்ட முடியும்.

“வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோல் செயின்.”          (குறள், 120)

என்ற இந்த வணிக அறத்தை டாட்டா போன்ற பெருநிறுவனங்கள் பின்பற்றுவது போலப் பிற பெருநிறுவனங்கள் பின்பற்றுவது கிடையாது. அம்பானிகளும் பின்பற்றுவது கிடையாது என்பதற்கு வீழ்ந்து கிடக்கும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் இன்ப்ரா, ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் கேப்பிடல் போன்ற பங்குகள் நல்ல உதாரணங்கள். இந்த உதாரணப் பங்குகளும் ஊக வணிகர்களாலும் முதலீட்டு ஊக்குவிப்போர்களாலும் (Promoters) ஊதிப் பெருக்கப்பட்டு மிகை மதிப்பிலும் அதீத எதிர்பார்ப்பிலும் சந்தையில் வர்த்தகமானவைகளே. ரிலையன்ஸ் பவரின் பங்கு வெளியீட்டிற்குப் பின் அனில் அம்பானியின் அத்தனைப் பங்குகளும் சரிந்திருக்கின்றன என்றால் அதானியின் தொடர் பங்கு வெளியீட்டிற்கு (FBO) முன்பே அதானியின் அத்தனைப் பங்குகளும் சரிந்திருக்கின்றன.

பங்கு மதிப்பிற்குப் பொருத்தமில்லாமல் தாறுமாறாக விலையேறும் பங்குகளை மிகை மதிப்புடையவை (Over Valued) என்று ஒரு நல்ல முதலீட்டாளர் விலக்கி விடுவார். ஒரு நல்ல முதலீட்டாளர் ஒரு பங்கு மிகை மதிப்பை அடையும் போது அப்பங்கிலிருந்து வெளியேறி விடுவார் அல்லது போட்ட முதலை எடுத்துக் கொண்டு விடுவார் அது எவ்வளவு நல்ல பங்காக இருந்தாலும். பிறகு விலையேறிய பங்கு விலையிறங்கி நியாயமான மதிப்பை அடையும் போது அதனுள் நுழைவார்.

அதானி பங்குகள் அனைத்தும் பல நாட்களாக மிகை மதிப்பில் வர்த்தமாகிக் கொண்டிருந்தன. அப்படிப்பட்ட பங்குகளில் முதலீட்டாளர்கள் எனப் பெயர் போனவர்கள் எப்படி முதலீடு செய்திருக்க முடியும்? அப்படி முதலீடு செய்தால் அது நிச்சயம்

“நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்

உயிர்க்கிறுதி யாகி விடும்.”            (குறள், 476)

என்ற நிலைதான். இந்நிலை என்பது குறளைச் சான்று காட்டி மிகைபடுத்தும் நிலையன்று. பங்குச் சந்தையில் பெரு முதலீடுகளைச் செய்து விலையிறக்கத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தன்னுயிர் நீக்கத்தைச் செய்து கொண்டோரின் கதைகள் நிறைய நிரம்பிக் கிடக்கின்றன.

அதானி போன்ற தாறுமாறாக விலையேறும் பங்குகள் ஊக வணிகம் செய்வோரின் கைகளில் கை மாறிக் கொண்டே இருக்கும் அல்லது முதலீட்டு ஊக்குவிப்போர்களால் (Promoters) விலையேற்றப்பட்டுக் கொண்டே இருக்கும். முதலீட்டு ஊக்குவிப்போர்கள் நிஜமான ஊக்குவிப்போராகவும் இருக்கலாம் நிழல் உலகைச் சார்ந்தோராகவும் இருக்கலாம். அவர்கள் யார்? நிஜமானவர்களா? நிழல் உலகவாதிகளா? என்பதை நியாயமான நேர்மையான விசாரணைகளால் மட்டுமே வெளிக்கொணர முடியும். இப்படிப்பட்ட பங்குகளில் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (LIC) பல ஆயிரம் கோடிகளுக்கு மேல் முதலீடு செய்திருக்கிறது. அதன் மொத்த நிறுவன மதிப்பில் அம்முதலீட்டு மதிப்பு பொருட்படுத்ததக்க மதிப்பே அல்ல என்ற வாதம் முன் வைக்கப்பட்டாலும் பல்லாயிரம் கோடி முதலீட்டுத் தொகையை அந்நிறுவனமும் மறுக்கவில்லை. அப்படி பல்லாயிரம் கோடி ஒரு பொருட்படுத்தக்க நிலையில் இல்லாத ஆயுள் காப்பீட்டு நிறுவனப் பங்குகளின் விலையும் அதானி பங்குகளின் ஆட்டத்தால் ஆட்டம் கண்டது வேறு கதை.

இவை போன்ற பங்கு நிறுவனங்களுக்குத் தனியார் வங்கிகளே கடன் கொடுக்க யோசிக்கும். தற்போதை இந்திய வங்கிகளின் நிலையில் தனியார் வங்கிகளே தாரளமாகக் கடன் கொடுக்கின்றன என்ற உண்மையையும் இதன் பின்புலத்தில் நாம் நினைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். தனியார் வங்கிகளே யோசிக்கும் என்றால் பொதுத்துறை வங்கிகள் ரொம்ப ரொம்ப ரொம்பவே யோசிக்கும் என்று எத்தனை ரொம்ப வேண்டுமானாலும் நாம் போட்டுக் கொள்ளலாம். கடனை வழங்காது என அடித்துச் சொல்லலாம். ஆனால் அண்மைக் காலமாக பொதுத்துறை வங்கிகள் நாட்டை விட்டுத் தப்பியோடும் அதிகாரச் செல்வாக்கு மிகுந்தோருக்கும், அரசச் செல்வாக்கு சிபாரிசு பெற்றோருக்கும் கடனை வாரி வழங்கிப் பின்னடைவைச் சந்திக்கின்றன.

அரசின் நிச்சயமான மாதாந்திர ஊதியத்தைப் பெறும் அரசு ஊழியர்களுக்குக் கடன் வழங்குவதற்கே ஆயிரத்தெட்டு நொண்டிச் சாக்குகளைச் சொல்லும் பாரத மாநில வங்கி (SBI) அதானி குழுமத்திற்குப் பல்லாயிரம் கோடி கடனைக் கொடுத்திருக்கிறது. அதுவும் இந்தக் கடன்தொகை பத்து நிமிடங்களுக்குள் வழங்கப்பட்டிருப்பதாக செய்திகள் உலாவுகின்றன.

ஏற்கனவே நொடித்துப் போய் திவால் நிலையை நோக்கிச் சென்று தற்போது உயிரைக் கையில் பிடித்தபடி இருக்கும் யெஸ் வங்கியும் (Yes Bank) அதானி குழுமத்திற்குக் கடனை வாரி வழங்கியிருக்கிறது. இந்த வங்கியானது இந்தியாவின் ஸ்திரமான வங்கியாகக் கூறப்படும் நாம் மேற்சொன்ன பாரத மாநில வங்கியின் (SBI) கண்காணிப்பில் மேம்பட்டு வருவதாகச் சொல்லப்படும் நிலையில் அதே வங்கியைப் பின்பற்றியா அல்லது அந்த வங்கியின் வழிகாட்டலிலா என்று தெரியவில்லை, மிகப்பெரிய பெருமுதலாளிக் கடனை வழங்கியிருக்கிறது.

ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (LIC), பாரத மாநில வங்கி (SBI) போன்ற நிறுவனங்கள் அரசின் பொறுப்பான மற்றும் நம்பகமான நிறுவனங்களாகப் பார்க்கப்படுபவை. இந்நிறுவனங்களை நம்பி சாதாரண குடிமக்கள் முதல் அதிகாரம் படைத்த அரசு அதிகாரிகள் வரை நம்பி முதலீட்டைச் செய்துள்ளனர். அதற்குக் காரணம் மேற்படி நிறுவனங்களில் முடிவெடுக்கும் நிலையில் உள்ள உயர் அலுவலர்கள் வலுவான பின்புலம் மற்றும் அறிக்கைத் தரவுகள் இல்லாமல் முதலீட்டு முடிவை எடுக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கைதான். அங்கே என்ன நடந்ததோ? ஏது நடந்ததோ? அவர்கள் எப்படி அதானி குழுமப் பங்குகளில் பல்லாயிரம் கோடிக்கான முதலீட்டு முடிவுகளையும், கடன் வழங்கும் முடிவுகளையும் எடுத்தார்களோ? எது நடந்தாலும் காக்கும் கடவுள் போல அரசு முன் வந்து நிற்கும் என்ற நம்பிக்கையில் எடுத்தார்களோ? அல்லது அரசப் பின்புலத்தில் ஏதேனும் ஒரு வகையில் வழங்கப்பட்ட நெருக்கடிகளாலோ சமிக்ஞைகளாலோ எடுத்தார்களோ என்பதும் விசாரணை செய்து வெளிப்படுத்த வேண்டிய உண்மைகள்.

விழிப்பான பொதுத்துறை நிறுவனங்களே இப்படி இருக்குமானால் சாதாரண, நடுத்தர மற்றும் சராசரியான முதலீட்டாளரின் நிலையைப் பற்றி என்ன சொல்வது? அவர்கள் ஆசையாலும் அறியாமையாலும் தவறுகள் செய்திருக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

ஊதிப் பெருக்கப்பட்ட நிறுவன செய்திகளை நம்பி நிழல் உலக முதலீட்டு ஊக்குவிப்பாளர்கள் பற்றி அறியாது

“உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி

இடைக்கண் முறிந்தார் பலர்.”       (குறள், 473)

என்ற வள்ளுவ வாக்குக்கு உதாரணம் காட்டத் தக்க வகையில் பல சிறு மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களின் நிலைமை அமைந்து விட்டது.

அதானி குழுமங்களின் வணிகத் திட்ட அமைப்பில் (Business Model) அனைத்தும் குறைபாடு உள்ளவை என்று சொல்லி விட முடியாது. விதிமுறை மீறல், தனியார் ஏற்று நடத்தக் கூடாது என்பன போன்ற விமர்சனங்கள் இருந்தாலும் அதானி போர்ட்ஸ் நல்ல வணிகத் திட்ட அமைப்பைக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அதானி துறைமுகங்கள் வழியே கடத்தல்கள் நடைபெறுவதாகவும் செய்திகள் வரவும் செய்கின்றன. அதானி பவரின் வணிகத் திட்டமும் பொருத்தப்பாடு உடையதாகவே தெரிகிறது. அதற்காக அரசாங்கம் ஆஸ்திரேலியாவுடன் தடையற்ற வர்த்தம் மேற்கொள்ளும் வகையில் அரசின் காப்புக் கரங்கள் கொண்டதாகவும் இருக்கிறது. அரசு அப்படி ஒருதலைபட்சமான காப்புக்கரத்தை நீட்டலாமா என்பது எதிர்கொள்ளப்பட வேண்டிய கேள்வியாக நீடிக்கிறது. அதானி வில்மரின் வணிகத் திட்டம் சராசரியான தன்மையைக் கொண்டது. மற்ற பங்குகளின் வணிகத் திட்டங்கள் சொல்லிக் கொள்ளும்படியானவை என்று கூற இயலாது. அப்பங்குகளின் வணிகமும் அதனால் ஈட்டப்படும் வருவாயும் அதன் அடிப்படையில் விலையேறிய அப்பங்குகளின் மதிப்புகளும் கொஞ்சம் கூட நியாயம் செய்ய முடியாதவை.

அதானி குழுமங்களுக்கு அரச அமைப்பின் அதிகபட்ச காப்புக்கரங்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அம்பானியின் நிறுவனங்கள், டாட்டா, பிர்லா போன்ற நிறுவனங்களை விட அதிகமாக வளர்ந்ததற்கு அரச அமைப்புகளின் காப்புக் கரங்களே காரணம் என்று சொல்லப்படும் குற்றச்சாட்டும் நிலுவையில் இருக்கிறது. முன்பு டாட்டா, பிர்லாவை விட அம்பானி அதிகம் வளர்ந்தற்குப் பின்னணியில் அப்போதிருந்த அரச அமைப்புகளின் காப்புக் கரங்களைப் போல அம்பானியை விட அதானி அதிகம் வளர்வதற்கு இப்போதிருக்கும் அரச அமைப்புகளின் காப்புக் கரங்கள் துணை நிற்கின்றன என்பதாக அந்நிலுவைக் குற்றச்சாட்டின் பின்னணி அமைகிறது. அதானி உலகப் பணக்காரர்களில் இரண்டாமிடம், மூன்றாமிடம் என உலகப் பணக்காரர்களில் பத்தில் ஒருவராக இடம் பிடித்ததற்கும் ஆசியப் பணக்காரர்களில் முதலிடத்தைப் பிடித்ததற்கும் இந்தக் காப்புக் கரங்களே முதன்மையான மற்றும் துணைமையான காரணங்கள் என்றும் சொல்லப்படுகின்றன. இந்தக் காப்புக்கர சந்தேகப் பின்னணியில்தான் ஆஸ்திரேலிய நிலக்கரியை வரியில்லாமல் பெறுவதற்கான இந்திய அரசின் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தையும் பார்க்க வேண்டியிருப்பதாக அரசியல் மற்றும் பொருளாதார நோக்கர்கள் ஒரு பார்வையை முன் வைக்கின்றனர்.

மத்திய அரசின் வரவு செலவு கூட்டத்தொடரில் (பட்ஜெட்) எதிர் கட்சிகளின் அமளியை ஒத்தி வைப்பினால் எதிர்கொள்ளும் பின்னணியில் அரசின் காப்புக்கரங்கள் குறித்த ஐயப்பாடு மேலும் வலுப்படுவதாக அமைகிறது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்குமிடத்து அதானிக் குழுமங்களின் மீது செய்யப்படும் முதலீடும் அதானி குழுமத்திற்கான ஆதரவும் தமக்குத் தாமே வெட்டிக் கொள்ளப்படும் குழிகளாகப் பார்க்கப்படுகின்றன. அமெரிக்க கடன் நிறுவனங்கள், அமெரிக்க பங்குச் சந்தை அமைப்புகள் அதானியின் பங்குகளை விலக்குகின்றன. இந்தியப் பங்குச் சந்தைகளில் என்றோ ஒரு நாள் மீண்டு விடும் என்ற நம்பிக்கையோடு அப்பங்குகள் சரிவுகளோடும் எழுச்சிகளோடும் வர்த்தமாகிக் கொண்டு இருக்கின்றன. பங்குச் சந்தைகளுக்கான கட்டுபாடு அமைப்பும் (SEBI) இதுநாள் வரை அதானி பங்குகள் குறித்து மௌனம் சாதிப்பதைப் பெரிய சாதனையாகச் செய்து கொண்டிருக்கின்றன. அந்த அளவுக்கு அதானிக் குழுமப் பங்குகள் அறம் சார்ந்ததா என்றால் அதுவும் சந்தேகத்திற்கு உரியதாக இருக்கிறது.

என்டிடிவி நிறுவனத்தை அல் ஜசீரா போல ஆக்கப் போவதாகச் சொல்லி அந்நிறுவன பங்குகளைக் கையகப்படுத்திய அதானி குழுமம் பிறகு அதைப் பற்றிக் கண்டு கொள்ளாமல் அப்படியே கிடப்பில் போட்டு விட்டது. ஏன் அதானிக் குழுமம் என்டிடிவி நிறுவனத்தைக் கையகப்படுத்த நினைத்தது என்பதற்கு அந்நிறுவனத்திலிருந்து அதானிக் குழுமம் குறித்த எழுந்த விமர்சனக் குரலே என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த விமர்சனக் குரலை ஊமையாக்கி கசக்கி நெரித்து வெளியில் வீசி விட்டப் பிறகு அதானிக் குழுமம் என்டிடிவி நிறுவனத்தை அப்படியே கிடப்பில் போட்டு விட்டது. நாடு முழுவதும் மிகப் பெரிய விவசாயக் கிடங்குகளை உருவாக்கி ஒட்டுமொத்த விளைபொருள் வணிகத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வர நினைத்த அதானி சாம்ராஜ்யத்தின் முயற்சிகள் புதுதில்லியில் நடைபெற்ற விவசாய அமைப்புகளின் நீண்ட நெடிய போராட்டத்தால் கிடப்பிலோ அல்லது காத்திருப்பு நிலையிலோ இருக்கின்றன.

பொதுத்துறை நிறுவன முதலீடுகளும் அரசின் காப்புக்கரங்களும் அதானிக் குழுமத்தைக் காக்கலாம். நிலைமை கைமீறிப் போகும் போது காக்காமலும் போகலாம். விஜய் மல்லையா போன்றோ நீரவ் மோடி போன்றோ அதானிகள் நாட்டை விட்டு ஓடவும் செய்யச் செய்யலாம். எது நடக்கும் என்பதைப் பொறுத்திருந்ததுதான் பார்க்க வேண்டியிருக்கிறது. நியாயமற்றதற்கும் நேர்மையற்றதற்கும் எதிராக நமது அமைப்பினர் வேகமாக வினையாற்றக் கூடியவர்கள் அல்லர் என்பதால் காலத்தின் பொறுமையையே நாம் அதிகம் நம்பியிருக்க வேண்டியிருக்கிறது.

எது எப்படியோ ஒரு பங்கின் மதிப்பு, அது ஈட்டும் வருவாயின் மதிப்பு இவற்றை அறிந்து அது வர்த்தமாகும் சந்தையின் மதிப்பை ஆராய்ந்து முதலீட்டைச் செய்யாவிட்டால்

“அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

இல்லாகித் தோன்றாக் கெடும்.”   (குறள், 479)

என்பதாகி விடுகிறது. அத்துடன் செயற்கையான விலையேற்றங்களுக்கும் வணிக அறமற்ற செயல்களுக்கும் ஊகங்களைக் கொண்டு ஊதிப் பெருக்கும் நிலையற்ற வர்த்தகப் போக்குகளுக்கும் பெயர் போன சந்தைகளில்

“ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை

ஊக்கார் அறிவுடை யார்.”  (குறள், 463)

என்ற ஈராயிரத்திற்கு முற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பு ஒலித்த குரல் பல்லாயிரம் ஆண்டுகளைத் தாண்டித் தொடர்ந்து எச்சரிக்கவும் விழிப்புணர்வு செய்வதற்கும் முதலீட்டு அபாயங்களினின்று தற்காத்துக் கொள்வதற்கும் ஒலித்திருப்பதாகவும் இன்னும் ஒலித்துக் கொண்டிருப்பதாகவும் தோன்றுகிறது.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...