மன வாழ்க்கை
வெட்டி நறுக்காமல்
என்னதான் செய்வதற்கு இருக்கிறதாம்
கத்திரிகோல்
வெட்டியதை ஒட்டித்
தைத்துக் கொள்வார் தையற்காரர்
வாழ்க்கையைப் போலவா
அழகான துணி வெட்டுப்பட்டு
ஒட்டுப்பட்டு
அழகான ஆடை ஆவது
கத்திரிக்கோலின் நோக்கம்
வேறு
ஊசிக்கோலின் நோக்கம் வேறு
என்றாலும்
பகைவனையும் நண்பனையும்
பயன்படுத்திதான்
வெட்டியும் ஒட்டியும் ஓடிக்
கொண்டிருக்கிறது
மன வாழ்க்கை
*****
தடுமாற்றம் இல்லாத கேள்வி
வலி என்றால் மாத்திரை எழுதிக் கொடுப்பார்
கண்வலி காதுவலி என்றால்
சொட்டு மருந்து தருவார்
மனவலி என்றால்
தூக்க மாத்திரை எழுதித் தருவார்
அல்லது
ஆல்கஹாலைப் பரிந்துரை செய்வார்
அதைத் தாண்டி அறுவைச் சிகிச்சையும்
செய்வார்
கொஞ்சம் உடல்வலி மனவலி தாங்கி
போனால் போகட்டும் உயிர் என்றால்
காணாமல் போய் விடுவார்
நிரம்ப நிரம்ப வலிகளை ஆற்றி
ஆற்றி
படுக்கைகளையும் சித்திரவதைகளையும்
தவிர
பொட்டென்று போகும் பாக்கியம்
கிடைத்ததா என்னவென்று
அடிக்கடி கேட்டுக் கொண்டே
இருப்பார்
நூற்று இரண்டில் தடுமாறாமல்
நடந்து கொண்டிருக்கும் தாத்தா
*****
No comments:
Post a Comment