19 Mar 2023

தெலுங்கு ‘நாட்டு’க்கும் தமிழ் நாட்டுக்கும் கிடைத்த ஆஸ்கர் விருதுகள்

தெலுங்கு ‘நாட்டு’க்கும் தமிழ் நாட்டுக்கும் கிடைத்த ஆஸ்கர் விருதுகள்

சுந்தரத் தெலுங்கில் பாட்டிசைப்போம் என்றார் மகாகவி பாரதியார்.

அவரது தீர்க்க தரிசனத்தை என்னவென்று சொல்வது?

இன்று சுந்தரத் தெலுங்கில் இசைக்கப்பட்ட பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது.

‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு இசையமைத்தவர் கீரவாணி. பாடலை எழுதியவர் சந்திரபோஸ். இருவருக்கும் இந்த 2023 ஆம் ஆண்டில் ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது. ‘நாட்டு நாட்டு’ பாடலுக்குக் கிடைத்த இவ்விருதை தெலுங்கு ‘நாட்டு’க்குக் கிடைத்த ஆஸ்கர் விருது என்று சொல்லலாம்தானே.

இதுவரை இந்தியாவிலிருந்து

1)      பானு அத்தையா

2)      ஏ.ஆர்.ரகுமான்,

3)      ரசூல் பூக்குட்டி,

4)      சத்தியஜித்ரே

போன்றோர் ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கின்றனர்.

ஆனாலும் கீரவாணியும், சந்திரபோசும் பெற்ற ஆஸ்கருக்குச் சில சிறப்புகள் இருக்கின்றன. ஆசியாவில் முதல் முறையாகத் தங்கள் மொழிப் பாடலுக்காக விருது பெற்றவர்கள் இவர்கள்தான். இந்தியப் பாடலுக்குக் கிடைத்த முதல் ஆஸ்கர் விருதும் இதுதான்.

யார் இந்த கீரவாணி என்றால் அவர் இந்திய திரையுலகைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் ராஜமௌலியின் ஆஸ்தான இசையமைப்பாளர். தமிழில் இயக்குநர் சிகரம் பாலசந்தரின் ஆஸ்தான இசையமைப்பளாராகவும் இருந்தவர். பாலசந்தரின் ‘அழகன்’ திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இவர்தான். தமிழில் இவரை ‘மரகதமணி’ என அறிமுகம் செய்திருந்தார் பாலசந்தர். பாலசந்தரின் அறிமுகங்கள் சோடை போகாது என்பதற்கு ரஜினி, கமல் தொடங்கி கீரவாணியும் இப்போது சாட்சியாகி இருக்கிறார்.

தெலுங்கு தேசத்துக்கு மட்டுமல்லாது தமிழ்நாட்டுக்கும் இந்த ஆண்டு ஆஸ்கர் சிறப்பு கிட்டியுள்ளது.

முதுமலைப் பகுதியில் ரகு மற்றும் அம்மு என்ற இரு யானைக் குட்டிகளைத் தங்களது குழந்தைகள் போல பார்த்துக் கொண்ட பொம்மன் – பெள்ளி தம்பதியினர் பற்றி எடுக்கப்பட்ட ‘தி எலிபெண்ட் விஸ்பரர்’ என்ற ஆவணப் படத்திற்குச் சிறந்த ஆவணக் குறும்பட பிரிவிற்கான ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது. இப்படத்திற்காகப் படத்தை இயக்கிய கார்த்திகியும் தயாரிப்பாளர் குனித் மோங்காவும் ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளனர். இந்த ஆஸ்கரைத் தமிழ் நாட்டுக்குக் கிடைத்த ஆஸ்கர் விருது என்று சொல்லலாம்தானே.

இந்த ஆவணப் படத்தைத் தாங்கிப் பிடித்த பொம்மன் – பெள்ளி தம்பதியர் இருவரையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்துக்கு அழைத்துப் பாராட்டுத் தெரிவித்ததுடன் தலா ஒரு லட்சம் பாராட்டுத் தொகையையும் வழங்கியுள்ளார்.

இப்போது சொல்லுங்கள்! இவ்விரு ஆஸ்கர் விருதுகளும் தெலுங்கு ‘நாட்டு’க்கும் தமிழ் நாட்டுக்கும் கிடைத்த ஆஸ்கர் விருதுகள்தானே. அதாவது இவ்விரு விருதுகளும் தமிழுக்கும் தெலுங்கிற்கும் கிடைத்த ஆஸ்கர் விருதுகள் என்று சொல்லலாம்தானே!

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...