16 Mar 2023

ஓடு நதி

ஓடு நதி

அங்கு இங்கு என

எவ்வளவு வளைந்து நெளிந்து ஓடியென்ன

உங்களுக்கும் கொடுத்து

கடலுக்கும் கொஞ்சம் கொடுத்து விடும்

அணைக்கட்டில் தேங்கினாலும்

வறட்சியில் பாளம் பாளமாய் ஆனாலும்

நீங்கள் உறிஞ்சியெடுத்தது போக

ஊற்றில் கொஞ்சம் நீர் வைத்திருக்கும்

எல்லாருக்குமாய் ஓடும் நதி

*****

எப்போதிருக்கும் சம்பிரதாய சடங்குகள்

எப்போதும் கடமைகள் குறைந்தபாடில்லை

அண்ணனுக்குப் பாகம்

தம்பிக்கு ஜவாப்தாரி

அக்காவுக்குச் சீர்வரிசை

தங்கைக்குக் கல்யாணம்

பிள்ளைகளுக்குக் காதுகுத்தல்

பேரப் பிள்ளைகள் பிறந்தால்

பள்ளிக்கு அழைத்துச் சென்று

அழைத்து வர வேண்டும்

முதியோர் இல்லாம் போ என்றாலும்

போய் விட வேண்டும்

கடைசியில் சாவு

பிறகு கருமாதி

சடங்குகள் சம்பிரதாயங்கள் நிறைய இருக்கின்றன

செத்து முடிந்த பின்னும்

கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் திதி

*****

பாவனை இல்லங்கள்

என்னவோ வீடு கட்டி விட்டேன்

என்று பெருமை பட்டுக் கொண்டார்

அந்த வீட்டில்

சாகும் பாக்கியம் இல்லாதவர்

கடைசியில் சென்று சேர

முதியோர் இல்லம் என்று ஒன்றிருக்க

இடையிலோர் இல்லத்தைக் கட்டிக் கொள்வானேன்

வாடகை இல்லங்கள் வசதியானவை

எந்தப் பற்றுக்கும் இடம் கொடுக்காது

முதியோர் இல்லத்தையும்

இன்னோர் வாடகை இல்லமாய்ப் பாவிக்கச் செய்து விடும்

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...