மறத்தலும் நினைத்தலும் இலமே
இன்று பல் துலக்க மறந்து
விட்டது
நேற்று குளிக்க மறந்து விட்டேன்
முந்தை நாள் உள்ளாடை அணியாமல்
வெளியே சென்று வந்திருக்கிறேன்
இப்படி ஒவ்வொரு நாளும்
ஏதோ ஒன்று மறந்து போகிறது
மறதியின் மிச்சத்தில் எஞ்சி
நிற்பதை
வைத்துக் கொண்டு வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்
எதாவது நினைவுக்கு வருவதென்றால்
அதுவாக நினைவுக்கு வருகிறது
மறந்து போவதும் அதுவாக மறந்து
போகிறது
வாழ்க்கை ஓடிக் கொண்டுதான்
இருக்கிறது
நினைவில் நிறுத்தி மனதில்
வைத்திருந்ததெல்லாம்
பள்ளிக்கூட நாட்களோடு முடிந்து
போயிருந்தன
எப்போதாவது எழுத்துகளைக்
கற்ற நாட்களை
அசை போடுகையில்
அட்சரம் பிசகாமல் நினைவில்
தெறிந்து விழுகின்றன
மறத்தலோ நினைத்தலோ
ஒரு கணத்தில் நிகழ்கிறது
அல்லது நிகழாமல் போகிறது
மற்றபடி உள்ளது உள்ளபடி
சுவாசித்தலை மறக்காத படி
உயிர் ஓடிக் கொண்டிருக்கிறது
சுவாசத்தை மறந்து போகும்
நாளில்
எல்லாம் மறந்து போகும்
ஓடிக் கொண்டிருக்கும் வேறொரு
சுவாசம்
மறந்து போக வேண்டியதை
நினைவில் வைத்துக் கொள்ளும்
*****
No comments:
Post a Comment