15 Feb 2023

நிரம்ப யோசிக்காதவனின் ஒரு நாள்

நிரம்ப யோசிக்காதவனின் ஒரு நாள்

நிரம்ப யோசித்து தவறவிட

நான் தயாராக இல்லை

யோசிப்பது குறைவு

மன்னார்குடிக்கு ஒரு பயணச் சீட்டு

திருவாரூருக்கு ஒரு பயணச் சீட்டு

இடையில் இறங்குவதென்றால்

அந்த ஊர் பெயரைச் சொல்லி ஒரு பயணச் சீட்டு

ஊர் வந்தால் விசில் ஊதி இறங்கு என்கிறார்கள்

இறங்கிக் கொள்கிறேன்

தேநீர்க் கடையில் தேவைக்கேற்ப

ஒரு விரலோ இரு விரலோ நீட்டினால் போதும்

கண்ணாடிக் குவளையில்

கொதிக்க கொதிக்க வந்து விடுகிறது

பத்து ரூபாயோ இருபது ரூபாயோ

இருக்கிற தாளை எடுத்து நீட்டினால்

சில்லரை எடுத்து வைக்கப்பட்டு விடுகிறது

அதற்கு மேல் முத்துப்பாட்டன் வீடு

எங்கிருக்கிறது என்று விசாரித்தால்

அவர் வீட்டுப் பக்கம் செல்லும்

ஒருவரின் வண்டியில் ஏற்றிச் செல்லப்படுகிறேன்

அதற்கு மேல் யோசிக்க என்ன இருக்கிறது

முத்துப்பாட்டன் வீட்டுக்குச் சென்றால்

அவர் பேசிக் கொண்டே இருப்பார்

கேட்டுக் கொண்டே இருக்க வேண்டியது

நேரமாகி விட்டால் அவரே அழைத்து வந்து

வண்டியேற்றி விட்டு விடுவார்

என் ஊர் பெயர் சொல்லி

ஒரு பயணச் சீட்டு வாங்கிக் கொண்டால்

ஊர் வந்து சேரலாம்

நிரம்ப யோசிக்காததால்

நிம்மதியாக உறங்க முடிகிறது

இந்த இரவில் முத்துப்பாட்டன் உறங்கியிருப்பாரா

என்பதை யோசித்தாலும்

உறக்கத்தினின்று விழித்து விடுவேன் என்பது

எனக்குத் தெரியும்

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...