தாய்மையின் பெருங்கூத்து
கவலைகள் மரத்துப் போய் விட்டிருந்தன
எது நடந்தாலும் எனக்கென்ன
என்பது போல
கடக்கத் தொடங்கினாள்
கட்டிய புருஷன் குடிகாரன்
என்ற போது
துடித்துப் போனவளின் துடிப்பு
அடிகளைத் தாங்கித் தாங்கி
ஒரு நாள் அடங்கிப் போனது
பெற்ற பிள்ளை உதவாக்கரை ஆனதில்
வருந்திக் கிடந்தவளின் வருத்தம்
சூன்யத்தில் நிலை கொண்டதைப்
போல
ஒரு நாள் வற்றிப் போனது
இனி வாழ்க்கை இப்படித்தான்
போகும் என்ற
ஞானம் கிட்டியவளைப் போல
நடந்து கொள்ள ஆரம்பித்தவள்
பேரப் பிள்ளைகள் பிறப்பெடுத்த
போது
வற்றிய மார்பில் பால் சுரப்பதை
உணர்ந்தாள்
வறண்டு கிடந்த தாய்மையில்
சூல் கொண்ட நிறைசூலியானாள்
யாரோ பறித்துக் கொண்ட வாழ்க்கையை
யாரோ திருப்பிக் கொண்டு வந்து
கொடுத்ததைப் போல
குடிகார புருஷன் குடல் வெந்து
செத்த போதும்
உதவாக்கரை மகன் விபத்தில்
அடிபட்டு மாண்ட போதும்
பேரப் பிள்ளைகளைச் சுமக்கும்
பொழுதுகளில்
இழந்த காலம் ஒவ்வொன்றாகத்
திரும்பிக் கொண்டிருப்பதாகக்
காலப் பெருவெளியில் தாய்மையின்
கூத்தை
சலிப்பின்றி ஆடத் தொடங்கியவள்
இழப்பதற்கு எதுவுமில்லை
கொடுப்பதற்கு எவ்வளவோ இருக்கிறது
என்ற
பாசப் பெருமுலையை ஊட்டுபவளாய்
ஆகிப் போனாள்
*****
No comments:
Post a Comment