பற்றிக் கொண்டு வரும் பிரியம்
ஒரு நாள் ரத்தம் வடியும்
காயங்களோடு வந்தேன்
தெருநாய் என்னைப் பார்த்ததும்
ஓடி விட்டது
பிறிதொரு நாள் அழுத்தும்
அலுவலகச் சுமையோடு வந்தேன்
என் வீட்டுப் பூனை என்னைக்
கண்டும் காணாமல் போய் விட்டது
எனக்கு எது நடந்தாலும் வாசலில்
நிற்கும் வேப்ப மரம்
அசைந்து கொண்டோ அசையாமலோ
நின்று கொண்டிருக்கிறது
அவ்வபோது வந்துப் போகும்
பறவைகள்
அவைப் போக்கில் போவதோடு சரி
ஒருமுறை வீட்டிற்குள் நுழையப்
பார்த்த பாம்பு
என்னைக் கண்டு பயந்தோடியது
போலத் தோன்றியது
இவை ஏன் என்னைச் சுற்றி இருக்கின்றன
எது நடந்தாலும் அதற்கேற்றாற்
போல
எப்படியோ நடந்து கொள் என்பதைச்
சொல்வதற்காகவா
யாருக்கு எது நடந்தாலும்
யாரும் எதுவும் செய்ய முடியாது
என்பதைச் சொல்வதற்காகவா
அது சரி எனக்கு நடப்பதை அவை
கவனிக்க வேண்டும் என்று நினைக்கிறேனே
அவற்றுக்கு நடப்பவைப் பற்றி
என்றாவது கவனித்திருக்கிறேனா
என்று நினைக்கும் போது
என்னை அறியாமல் ஒரு பிரியம்
பற்றிக் கொண்டு வருகிறது அவை மேல்
*****
No comments:
Post a Comment