நைந்த பொம்மையின் பெயர்
காலம் ஒரு குழந்தையைப் போல
நடந்து கொள்வதாகக் குற்றம்
சாட்டிக் கொண்டிருந்தார்கள்
ஒரு குழந்தை எதைப் பொறுக்கி
எடுத்துக் கொள்ளும்
எதை வீசி எறியும் என்பது
யாருக்குத் தெரியும்
காலத்தின் கையிலொன்றில் வழங்கப்பட்ட
விலை உயர்ந்த பரிசைத் தூக்கி
எறிந்து விட்டதாகவும்
குப்பையில் கிடந்த நைந்த
பொம்மையொன்றை
அணைத்துக் கொண்டிருப்பதாகவும்
குற்றம் சாட்டியவர்கள் விளக்கிக்
கொண்டிருந்தார்கள்
காலம் ஒரு குழந்தையாகவே இருந்து
விட்டுப் போகட்டும்
பிடித்தமானதை எடுத்துக் கொள்ளும்
சுதந்திரம் அதற்கில்லையா
என்ற போது
கையிலேந்திய நைந்த பொம்மையில்
கலை நுணுக்கம் ஏதுமில்லை
என்றார்கள்
காலக் குழந்தைக்குத் தெரியாத
கலைநுணுக்கமா என்று
உற்றுநோக்கிய போது
அது கையிலேந்திய நைந்த பொம்மையின்
பெயர்
கவிஞன் என்றார்கள்
*****
No comments:
Post a Comment