19 Feb 2023

மாதாந்திர வருமான வரி பிடித்தத்தைத் திட்டமிடுங்கள்!

மாதாந்திர வருமான வரி பிடித்தத்தைத் திட்டமிடுங்கள்!

மாதாந்திர வருமான வரி பிடித்தத்தை இப்போதே திட்டமிடுங்கள். அவ்வாறு திட்டமிட்டு மாதந்தோறும் வரி பிடித்தத்தைச் சம்பளத் தொகையிலிருந்து செலுத்தி விட்டால் பிப்ரவரி மாதம் சம்பளத் தொகையில் குறைவு ஏற்படாது. அவ்வாறு திட்டமிடாமல் போனால் பிப்ரவரி மாத சம்பளம் முழுவதையுமே வரி செலுத்துவதற்குச் செலவிட வேண்டிய நிலையும் ஏற்படும்.

மாதாந்திர வருமான வரி பிடித்தத் தொகையைக் கணக்கிடுவதில் ஆண்டு வருமானத்தை உத்தேசமாகக் கணக்கிடுவதும் அத்தொகைக்கு எவ்வளவு வருமான வரி பழைய மற்றும் புதிய வரி செலுத்தும் முறையில் செலுத்த வேண்டி வரும் என்பதைக் கணக்கிடுவது அவசியமாகும்.

வருமான வரிக்கான தொகை 7 லட்சத்துக்குள் வரும் போது புதிய முறையில் வரி செலுத்துவது கூடுதல் வரிச்சலுகையைப் பெற உதவும். 7 லட்சத்தைத் தாண்டும் போது பழைய முறையில் வரி செலுத்துவது கூடுதல் வரிச்சலுகையைப் பெற உதவும். இந்தக் கூடுதல் வரிச்சலுகையைப் பழைய முறையில் பெற வேண்டுமானால் வருமான வரி சேமிப்புக்கான சலுகைத் தொகை 1.5 லட்சத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் நிலையில் நீங்கள் வரி சேமிப்பு செய்திருக்க வேண்டும்.

1.5 லட்ச வரி சேமிப்பைச் செய்யவில்லை என்றால் புதிய முறையில் வருமான வரி செலுத்துவதே கூடுதல் வரிச்சலுகையைப் பெற ஏற்றதாக இருக்கும். ஒன்றரை லட்ச ரூபாய் வரி சேமிப்பு செய்வதை விட பத்தாயிரத்திலிருந்து இருபதாயிரம் வரை கூடுதலாக வரி செலுத்தும் வகையில்தான் புதிய வரி செலுத்தும் முறை உள்ளது. இதனால் ஒன்றரை லட்சத்தைச் சேமிக்காமல் பத்தாயிரத்திலிருந்து இருபதாயிரம் வரை கூடுதலாக வரி செலுத்தி விடலாம். இவ்வாறு செய்வதால் நீங்கள் வரி சேமிப்பிற்காகச் சேமிக்கும் தொகை 1.3 லட்சத்திலிருந்து 1.4 லட்சம் வரை உங்கள் கையிருப்பில் வைத்துக் கொள்ளலாம். அல்லது நல்ல லாபம் தரும் வேறு முதலீட்டில் உங்கள் தொகையை முதலீடு செய்யலாம்.

தோராயமாகத் தயாரிக்கப்பட்ட ஒரு பட்டியலின் படி பழைய வரி செலுத்தும் முறைக்கும் புதிய வரி செலுத்தும் முறைக்கும் இருக்கும் வரித்தொகை உத்தேசமாகக் கீழே அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.

பழைய வரி செலுத்தும் முறைக்கு 1.5 லட்சம் வரி சேமிப்பு தொகையை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்தியிருக்கும் வகையில் இந்தத் தோராய அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

வரித்தொகையும் உத்தேசமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. பழைய முறையில் வரி செலுத்துவதா, புதிய முறையில் வரி செலுத்துவதா என்ற அனுமானத்திற்கு வர இந்த அட்டவணை உங்களுக்கு உதவும். எனினும் உங்களின் வருமானத் தொகையை முழுமையாகக் கணக்கிட்டு அதன் அடிப்படையில் நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்வதே பொருத்தமானதாகும்.

மேலும் பழைய வரி செலுத்தும் முறையில் மருத்துதுவச் செலவினங்கள், நன்கொடை, வீட்டுக்கடன் போன்ற இன்ன பிற வரிச் சலுகைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. அச்சலுகைககள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அமையும் என்பதால் அதை இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. பொதுவான 1.5 லட்ச வரி சேமிப்பு மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டடுள்ளது. இன்ன பிற வரிச் சலுகைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் பழைய முறை வரி செலுத்துவதில் மேலும் கூடுதல் வரிச்சலுகை அனுகூலங்கள் இருக்கின்றன என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.

தொகை

பழைய முறை

(உத்தேசமாக)

புதிய முறை

(உத்தேசமாக)

7 லட்சம்

8300

இல்லை

8 லட்சம்

14900

36400

9 லட்சம்

35700

46800

10 லட்சம்

56500

62400

11 லட்சம்

77300

78000

12 லட்சம்

98100

93600

13 லட்சம்

119900

130000

14 லட்சம்

151100

166400

15 லட்சம்

182300

202800

மேற்படி அட்டவணையிலிருந்து  உங்களது வருமானம்  7 லட்சத்திற்குள் என்றால் நீங்கள் புதிய முறையில் வரி செலுத்துவதே கூடுதல் வரிச்சலுகையைப் பெற உதவும். அத்துடன் அட்டவணையைக் கவனித்தால் உங்களது வருமானம் 11 லட்சத்திலிருந்து 12 லட்சம் வரை அமையும் பட்சத்தில் நீங்கள் புதிய முறையில் வருமான வரி செலுத்துவது கூடுதல் வரிச்சலுகையைப் பெற உபயோகமாக இருக்கும். மற்றபடி 1.5 லட்ச வரி சேமிப்பைச் செய்ய முடியுமானால் பழைய வரி செலுத்தும் முறையே கூடுதல் வரிச்சலுகையைப் பெற உபயோகமாக இருக்கும். உங்களுக்கு இதனால் உங்களது வருமானத்தைப் பொருத்து பழைய முறை புதிய முறையை விட பத்தாயிரத்திலிருந்து இருபதாயிரம் வரை கூடுதல் வரிச்சலுகையைப் பெற உதவும்.

உங்கள் ஆண்டு வருமானத்திற்கு ஏற்ப வருமான வரி எவ்வளவு வரும் என்பதை அனுமானித்துக் கொள்ளவும் அதன் அடிப்படையில் மாதந்தோறும் வருமான வரிப் பிடித்தம் செய்து கொள்ள வேண்டிய தொகையை உத்தேசமாகத் தீர்மானித்துக் கொள்ளவும் மேலே உள்ள அட்டவணை உங்களுக்கு நிச்சயம் உதவக் கூடும்.

இந்த அட்டவணையிலிருந்து நீங்கள் புதிய முறையில் வரி செலுத்தப் போகிறீர்களா? பழைய முறையில் தொடரப் போகிறீர்களா? என்பதைத் தீர்மானித்து விடலாம். மேலும் உங்களது வருமான வரி எவ்வளவு என்பதையும் உத்தேசமாகக் கணித்து விடலாம். அத்தொகையை பதினோரு மாதங்களுக்குப் பிரித்து ஒவ்வொரு மாதமும் அந்தந்த மாதச் சம்பளத் தொகையிலிருந்து பிடித்தம் செய்து கொள்ளும் படி செய்து விட்டால் பிப்ரவரி மாதச் சம்பளத்தைக் குறைவின்றி பெற்று பிப்ரவரி மாத குடும்ப பொருளாதாரத் திட்டமிடலைப் பற்றாக்குறை இன்றிச் செவ்வனே செய்யலாம்.

இது குறித்து உங்களது மேலான கருத்துகளைத் தெரிவியுங்கள். இந்தத் தகவல் திட்டமிடல் உங்களுக்குப் பிடித்திருந்தாலும் உங்களுக்குப் பயனுடையதாக இருந்தாலும் அது குறித்த கருத்துகளையும் தெரிவியுங்கள்.

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...