18 Feb 2023

வரி மாற்றமா? பொருளாதார ஏமாற்றமா?

வரி மாற்றமா? பொருளாதார ஏமாற்றமா?

வருமான வரி செலுத்துவோருக்குத் தற்போது இரண்டு விதமான வாய்ப்புகள் இருக்கின்றன. 1. பழைய முறையில் வரி செலுத்துவது (Old Regime), 2. புதிய முறையில் வரி செலுத்துவது (New Regime)

சேமிப்புகளைச் செய்பவர்களுக்கும் நன்கொடைகளை வழங்குபவர்களுக்கும் பழைய முறையில் வரி செலுத்துவது லாபகரமாக இருக்கும். இவற்றைச் செய்யாதவர்களுக்கும் இது குறித்த திட்டமிடாதவர்களுக்கும் புதிய முறையில் வரி செலுத்துவது லாபகரமாக இருக்கும்.

ஆனால் வரக்கூடிய ஆண்டுகளில் சேமிப்பைச் செய்பவர்களாக இருந்தாலும் சரி, சேமிப்பே செய்யாதவர்களாக இருந்தாலும் சரி புதிய முறையில் வரி செலுத்துவதுதான் லாபமாக இருக்கக் கூடும். அல்லது பழைய முறையில் வரி சேமிப்பைச் செய்பவர்களுக்குக் கிடைக்கும் லாபம் என்பது பத்தாயிரத்திலிருந்து இருபதாயிரம் வரை இருக்கக் கூடும்.

இந்த ஆண்டு அரசின் வரவு – செலவு கணக்குத் தாக்கலில் (பட்ஜெட்டில்) புதிய முறையில் வருமான வரி செலுத்துவோருக்குத்தான் சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. பழைய முறை அதே பழையை முறைப்படித்தான் தொடரும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதனால் அது நிஜமாகவே பழைய முறையாகி நடைமுறைக்கு வர முடியாத ஒரு முறையாகப் போகிறது.

வருமான வரிக்காகப் பணத்தைச் சேமிப்போரும் நன்கொடைகள் வழங்குவோரும் இருக்கிறார்கள். புதிய முறை வருமான வரியில் அதற்கான சலுகைகள் ஏதுமில்லாததால் இனிமேல் அவற்றை ஏன் செய்ய வேண்டும் என்ற மனப்போக்கு வரலாம்.

பழைய வருமான வரி முறை சேமிப்புக்கான வாய்ப்புகளைக் கொடுத்தது. சேமித்தால் வரிச் சலுகை என்ற முறையில் சேமிப்பதற்கான நெருக்கடியை அல்லது நிர்பந்த பொறுப்புணர்வைக் கொடுத்தது என்றும் சொல்லலாம்.

முறையாகத் திட்டமிட்டு வருமான வரிக்காகப் பணத்தைச் சேமிப்பவர்களைப் பழைய வருமான வரி முறை உருவாக்கியது. அந்த நேரத்திலாவது அதாவது வருமான வரி செலுத்தும் பிப்ரவரி – மார்ச் மாதத்திலாவது வருமான வரிச் சலுகைக்காகச் சேமிப்பவர்களையும் உருவாக்கியது.

புதிய முறையில் வருமான வரி செலுத்துவதற்கான மறைமுகமான நெருக்கடிகளும் வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு விட்ட வேளையில் வருமான வரிக்காகச் சேமிப்பவர்களும், காப்பீடு எடுப்பவர்களும், நன்கொடை வழங்குபவர்களும் குறையக் கூடிய வாய்ப்போடு இல்லாமல் போவதற்கும் இருக்கிறது.

வரிச்சலுகைக்காகச் சேமிப்பதாகச் சொன்னாலும் அப்படிச் சேமிக்கும் தொகையும் அரசாங்கத்திற்குத்தான் செல்கிறது. அரசின் நலத்திட்டங்களையும் நீண்ட கால தொலைநோக்குத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் பொதுமக்களின் இச்சேமிப்புத்தொகை அரசாங்கத்திற்கு எப்போதும் உதவியாக இருந்திருக்கிறது. இனி அதற்கான வாய்ப்புகள் இருக்கப் போவதில்லை.

புதிய வரி செலுத்தும் முறை மற்றும் அதற்கான சலுகைகளால் சேமிப்பைச் செய்யும் கணிசமானோர் அதாவது சேமிப்பால் வரிச்சலுகை என்ற காரணத்தினால் செய்த பலர் சேமிப்பிலிருந்து தடம் புரளக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. இன்னும் தெளிவாக இதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் பின்வரும் கேள்விகளை எழுப்பிப் பார்க்கலாம். வரிச்சலுகைக்காக ஐந்து வருட வங்கி வைப்புகளைச் செய்பவர்கள் இனி இருப்பார்களா? வரிச்சலுகைக்காக ஆயிரத்திலிருந்து ஒன்றரை லட்சம் வரை பி.பி.எப்.பில் செலுத்துபவர்கள் இருப்பார்களா? வரிச்சலுகைக்காகக் காப்பீடுகள் எடுப்போர்கள் இருப்பார்களா? வரிச்சலுகைக்காக நன்கொடைகள் வழங்குவோர்கள் இருப்பார்களா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பொதுவாகப் பணவீக்கத்தோடு ஒப்பிடுகையில் அஞ்சலகச் சேமிப்புகளோ, வங்கிச் சேமிப்புகளோ லாபம் தரக்கூடியவை இல்லை. ஆனால் வரிச்சலுகையோடு சேர்த்துப் பார்த்தால் லாபம் தரக்கூடியவை. வரிச்சலுகைக்காகத் திட்டமிட்டுச் சேமிப்பவர்கள் வரிச்சலுகை இல்லையென்றால் ஐந்து வருட அல்லது மூன்று வருட சேமிப்புகளைச் செய்ய தயங்குவார்கள். இத்தயக்கம் நாட்டின் ஒட்டுமொத்த சேமிப்பில் கணிசமான பாதிப்பை உண்டு பண்ணக் கூடும். வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களின் நிரந்த வைப்பு இருப்பிலும் பின்னடைவை உண்டாக்கக் கூடும்.

அமெரிக்க மாதிரியைப் பிரதியெடுப்பது போல புதிய முறை வருமான வரி அமைகிறது. இந்தியர்களின் சேமிப்பு மற்றும் வருங்காலத் திட்டமிடல் குறித்த மனநிலையோடு பழைய முறை வருமான வரி இயைந்து போகிறது. இந்த இயைபு புதிய முறையில் இல்லாததாலும் புதிய முறையே வரும் காலங்களில் லாபம் தரக்கூடியதாக இருப்பதாலும் இந்தியர்களும் சேமிப்பை விட்டு செலவழிக்கும் மனோபாவத்துக்கு மாற வாய்ப்புகள் இருக்கின்றன.

சேமிப்பதை விட செலவழிக்கும் போது பொருளாதாரம் வேகமாக வளரும் என்கிற பொருளாதார மாதிரியே தற்காலத்தில் உலகெங்கும் விதந்தோதப்படுகிறது. அவ்விதந்தோதலுக்கு வலு சேர்க்கும் வகையில் நாடுகள் பொருளாதார வரவு – செலவு கணக்குகளை மக்கள் மன்றத்தில் நிறைவேற்றுகின்றன.

செலவழிக்கும் பொருளாதார மாதிரிகளை ஊக்குவிக்கும் நாடுகள் பொருளாதார மந்தநிலை ஏற்படும் காலங்களில் தள்ளாடுகின்றன. வங்கிகள் திவால் நிலையை நோக்கிச் செல்கின்றன. பணப்புழக்கத்தை உருவாக்க நினைத்து பணவீக்கத்தை அதிகம் பண்ணி விடுகின்றன.

புதிய வருமான வரி முறையில் ஏழு லட்சம் வரை வருமான வரிக்கு விலக்கு என்பது நல்ல வாய்ப்பை வழங்கியது போலத் தோன்றலாம். மாதம் அறுபதாயிரத்திற்குள் (சரியாக ரூ. 58,333/-) வருமானம் பெறுவோருக்கு வருமான வரி செலுத்துவதிலிருந்து இம்முறை வரிவிலக்குத் தருகிறது. இவ்வருமானம் பெறுபவர் பழைய முறையில் வரி விலக்கு பெற வேண்டுமென்றால் ஒன்றரை லட்ச வருமான வரிச் சேமிப்பைக் கட்டாயமாகச் செய்ய வேண்டும். ஆனால் அப்படிச் செய்யாமலேயே புதிய முறையில் வரி விலக்குக் கிடைக்குமென்றால் யார்தான் புதிய முறையை விரும்ப மாட்டார்கள்?

இனிவரும் காலங்களில் பழைய வருமான வரி முறையை விட புதிய முறையே மக்களை அதிகம் ஈர்க்க வாய்ப்பு இருக்கிறது. இந்தியர்களில் சரிபாதி ஏற்கனவே நுகர்வு கலாச்சார மனநிலைக்கு மாறி சில தசாப்தங்கள் ஆகி விட்டன. அதை மேலும் இப்புதிய வருமான வரி முறை வளர்த்து விடும் என்றே எண்ணத் தோன்றுகிறது.

சேமிப்புக்குச்  சேமிப்பாகவும் வரிச்சலுகைக்கு வரிச்சலுகையாகவும் ஆகி விடும் என்ற மனநிலையோடு சேமித்துக் கொண்டிருந்தவர்கள் சேமிப்பை விடுவதன் மூலமும் வரிச்சலுகையைப் பெற முடியும் என்றால் அதை நோக்கி நகர்வதைத்தான் விரும்புவார்கள். இந்நகர்வு இந்தியப் பொருளாதாரத்தில் வருங்காலத்தில் எத்தகைய பாதிப்புகளை உண்டு பண்ணும் என்பதை வரக்கூடிய புள்ளிவிவரத் தரவுகளைக் கொண்டுதான் முடிவு செய்து கூற வேண்டும்.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...