10 Feb 2023

அன்றாடம் தோற்கும் வார்த்தைக் களம்

அன்றாடம் தோற்கும் வார்த்தைக் களம்

அவரவர்க்கான வார்த்தை தேடி அலைகிறது ஆழ்மனம்

ஒருவருக்குப் பிடித்த வார்த்தை

இன்னொருவருக்குப் பிடித்தமானதாக இல்லை

பணிந்து குழையும் வார்த்தைகளை

மேலாளருக்குப் பரிமாறி விட்டு

அதிகாரம் தொனிக்கும் வார்த்தைகளை

சேவகர்கள் மீது வீசியெறிய வேண்டியிருக்கிறது

பிச்சைக்காரர்கள் மீது எறியும் வார்த்தைகள் படுமோசமானவை

பிள்ளைகளுக்குத் தனி வார்த்தைகள்

உறவுகளுக்கு வேறு வார்த்தைகள்

விரோதிகளுக்குக் கடும் வார்த்தைகள்

எதிர்வீட்டுக்காரருக்கு வெறும் வார்த்தைகள்

கூனிக் குறுகி நிற்கும் போது முனகும் வார்த்தைகள்

வசமாய்ச் சிக்கிக் கொள்கையில் மௌனமே வார்த்தைகள்

ஒரு நொடி தனித்திருக்கும் போது

தனக்கு தானே பேசிக் கொள்ளும் புதிர் வார்த்தைகள்

கழிவிரக்கத்தின் கடைமடியில் கிடக்கும் போது

ஆறுதல் தேடி ஏங்கித் தவிக்கும் வார்த்தைகள்

அன்றாட வாழ்க்கை நெரிசலில் சிக்கிப் பிதுங்கி

கனவுகளில் எதிரொலிக்கும் வார்த்தைகள்

தாட்சண்யம் அற்று சில நேரங்களில்

முகபிம்பத்தைச் சிதறடிக்கும் வார்த்தைகள்

அன்றாடம் வார்த்தைகளைத் தேடித் தோற்கிறது

வார்த்தைகளின் விளையாட்டுக் களமாகி விட்ட வாழ்க்கை

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...