ஏதுமற்ற வீடு
தாத்தா கட்டிய வீடும்
பார்த்துப் பார்த்துக் கட்டிய
வீடுதான்
ஓட்டு வீடென்றாலும்
வீட்டுக்கென்ற லட்சணம் பொருந்திய
வீடு
வீட்டின் ஒவ்வொரு மூலையிலும்
ஒவ்வொருவரோடு ஓயாது பேசிக்
கொண்டிருந்தார் தாத்தா
வீட்டின் முன் நிற்கும் வேப்பமரம்
வேப்பமரத்திலிருக்கும் குருவிகளோடும்
பேசிக் கொண்டிருந்தார்
யாருமற்ற நேரத்திலும் சுவரோடும்
சன்னல்களோடும்
சன்னல்கள் வழி வரும் காற்றோடும்
பேசிக் கொண்டிருந்தார்
எல்லாருடன் பேசுவதற்கான வார்த்தைகள்
இருந்து கொண்டேயிருந்தன அவர்
கட்டிய வீட்டில்
தாத்தா கட்டிய வீட்டை இடித்து
அப்பா கட்டிய வீடும்
பார்த்துப் பார்த்துக் கட்டிய
வீடுதான்
டைல்சும் மார்பிள்சும் பதித்து
இழைத்துத் தேய்த்து வண்ணம்
பூசி
வீட்டுக்கடன் கைக்கடன் எனக்
கடன்கள் பல வாங்கி
கட்டிய வீடுதான் என்றாலும்
நெடுந்தொடர்களும் அலைபேசிகளும்
பேசுவது தவிர
யாரும் யாருடனும் பேசுவதற்கு
இந்த வீட்டில் ஏதுமில்லாமல்
போனது
*****
No comments:
Post a Comment