5 Jan 2023

சுமந்தலையும் வாழ்க்கை

சுமந்தலையும் வாழ்க்கை

கசியும் வியர்வையில்

சூரிய ஒளியின் பளபளப்பு பிரதிபலிக்கிறது

வியர்வை அரும்பாத நதிகள்

வேர்க்குரு மேனியைப் போன்ற

மணல் வெளிகளால் நிரம்பிக் கிடக்கிறது

வெம்மை பொறுக்காத மரங்கள்

ஆடைகளை விசிறி எறிந்து விட்டதைப் போல

நிர்வாண கோலங்களில் நிற்கின்றன

எந்தக் கோடைக்கும் வற்றாத

சாக்கடைப் பெருக்குப் பாதாளத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது

குறைந்தபாடில்லாத கொசுக்கள்

பகலுக்கும் இரவுக்கும் பேதமில்லாமல்

தெருநாய்களைப் போலக் கடித்துக் குதறுகின்றன

மழையைப் போல அறைகளில் அடைத்து விடாத

வெம்மையைச் சுமந்தலையும் வெயில்

எங்கு வேண்டுமானாலும் சென்று வர அனுமதிக்கிறது

என் வீட்டுக் குளிர்சாதனப் பெட்டியில்

இரண்டு புட்டி குளிர்பானம்

வெந்து தணிந்த சூட்டை ஆற்றுவிக்க

எப்போதும் குளிர் நிலையில் காத்திருக்கிறது

கொளுத்தும் கோடைக்கு

அக்கினிக் குஞ்சுகளைப் பெற்றுக் கொடுத்ததில்

குளிர் பதன அறைகளுக்குக்

கொஞ்சம் பங்கு இருக்கக் கூடும் என்றாலும்

எது குறித்தும் அலட்டிக் கொள்ளலாம்

அது எப்போதும் குளிர்வாயிருக்கிறது

வருவதை வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்ற வேட்கையோடு

உள்ளே குளுமையையும் வெளியே வெம்மையையும்

சுமந்தலையும் வாழ்க்கை சுழன்று கொண்டிருக்கிறது

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...