18 Jan 2023

துணிந்துப் பார்க்க வேண்டிய ‘துணிவு’

துணிந்துப் பார்க்க வேண்டிய ‘துணிவு’

            பொதுவாக அஜித், விஜய் போன்றோரின் படங்களைப் பார்க்க நான் பரிந்துரைப்பதில்லை. நம்பகமற்ற சாகசங்கள் நிறைந்ததாக அப்படங்கள் அமைகின்றன.

            அண்மையில் வெளிவந்திருக்கும் (ஜனவரி, 2023) அஜித்தின் ‘துணிவு’ என்ற திரைப்படம் அப்படிப்பட்ட திரைப்படம்தான். இத்திரைப்படத்தைப் பார்க்கப் போகும் உற்சாகத்திலும் ஆர்வகோளாறிலும் வாகனம் மீதேறிக் கட்டுக்கடங்காத மகிழ்வை வெளிப்படுத்த நினைத்த அஜித் ரசிகர்களில் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்திருக்கிறார்.

            நள்ளிரவில் நாம் சுதந்திரத்தைப் பெற்றதைக் கொண்டாடியது போலவோ அல்லது புத்தாண்டை நள்ளிரவில் கொண்டாடுவது போலவோ இப்படத்தையும் நள்ளிரவு 1 மணி அளவில் வெளியிட்டிருக்கிறார்கள். நன்றாக உறங்கிக் கழிக்க வேண்டிய அந்த இரவுப் பொழுதை அஜித்துக்காக உறங்காமல் இருந்து ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள். ‘துணிவு’ திரைப்படத்தின் துணிச்சல்கார ரசிர்கள் அவர்கள்.

            ‘துணிவு’ திரைப்படத்தில் அஜித்தின் சாகசங்களையும் நம்பகமற்ற சண்டைக் காட்சிகள் மற்றும் துப்பாக்கிச் சுடும் காட்சிகளையும் தவிர்த்து விட்டால் படம் பேசும் பேசுபொருள் முக்கியமானது.

            நாமெல்லாம்சேமிப்புக் கணக்குகள் அல்லது நடப்புக் கணக்குகள் அல்லது கடன் கணக்குகள் வைத்திருக்கும் வங்கிகள் அல்லது நமக்கெல்லாம் பண அட்டைகள் (கிரடிட் கார்டுகள் அல்லது டெபிட் கார்டுகள்) கொடுத்திருக்கும் வங்கிகள் நம்மைக் கொள்ளையடித்துக் கொண்டு இருக்கின்றன என்ற சந்தேகம் எனக்கு ரொம்ப நாட்களாகவே உண்டு. என்னுடைய அந்தச் சந்தேகத்தை அப்படியே படமாக எடுத்திருப்பது போல இந்தப் படம் வந்திருக்கிறது. முதல் பாதி முழுவதும் அஜித்தின் சாகசங்களால் படம் நிறைந்திருந்தாலும் இரண்டாம் பாதியில் வங்கிகளின் ஜகஞ்ஜால வித்தைகளை மிக நன்றாகவே பேசுகிறார்கள். அஜித்தின் சாகசங்கள் குறைந்ததும் அதற்குக் காரணமாக இருக்கலாம். இரண்டாம் பாதியில்தான் உயிர்ப்பான கதையும் வந்து சேர்க்கிறது. முதல் பாதிக் கதை முழுவதும் அஜித்துக்காக செய்யப்பட்டிருக்கும் ஜிகினாக்களும் பம்மாத்துகளும்தான்.

            குறைந்தபட்ச வங்கி இருப்பைப் பராமரிக்காதற்காகத் தண்டத்தொகை, குறுஞ்செய்தி சேவைக்கான கட்டணம், பண அட்டைகளுக்கான (கிரடிட் அல்லது டெபிட் கார்டுகள்) பராமரிப்புக் கட்டணம், ஐந்து முறைகளுக்கு மேல் பணம் எடுக்கும் எந்திரத்தின் (ஏ.டி.எம். எந்திரம்) மூலமாகப் பணம் எடுத்தால் (இதில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற எண்ணிக்கைக வேறுபாடுகள் உண்டு) கட்டணம், வங்கி கணக்கு விவரத்தை அச்சிட்டுக் கேட்டால் அதற்குக் கட்டணம், இணையவழி வங்கியைப் பயன்படுத்தாமல் வங்கிக் கிளைக்குச் சென்று சேவைகளைப் (கட்டணம் வசூலித்தால் அதை எப்படி சேவை என்று சொல்வது? வங்கிகள் சேவைக்கட்டணம் என்று சொல்லிதான் அந்தக் கட்டணத்தை வசூலிக்கின்றன) பயன்படுத்தினால் கட்டணம் என்று கந்துவட்டியின் அனைத்து அம்சங்களையும் கலப்பின மாற்றம் செய்து வங்கிகள் வசூல் வேட்டைகளில் இறங்கியுள்ளன.

            மத்திய வங்கி (ரிசர்வ் வங்கி) வட்டி விகிதத்தை உயர்த்தினால் உடனடியாக வட்டி விகிதத்தை உயர்த்தும் வங்கிகள், மத்திய வங்கி வட்டி விகிதத்தை இறக்கினால் வட்டி விகிதத்தை இறக்காமல் கால தாமதம் செய்கின்றன. கடனைக் குறைக்கப்பட்ட வட்டி விகிதத்திற்குக் கொண்டு வர உங்களிடம் விண்ணப்ப வேண்டுகோளை வேறு எதிர்பார்க்கின்றன. இதே விண்ணப்ப வேண்டுகோளை வட்டி விகிதத்தை உயர்த்த உங்களிடம் எதிர்பார்க்காது. இப்படி வங்கிகளின் அத்துமீறல்களைப் பட்டியல் போட்டால் ஆயும் முழுவதும் போட்டுக் கொண்டே இருக்கலாம்.

            தரமான வங்கிச் சேவை என்பது தேய்ந்து கொண்டே போகிறது. வங்கிச் சேவைக்குச் சம்பந்தம் இல்லாத பரஸ்பர நிதி முதலீடுகள், காப்பீடுகள் போன்றவற்றில் வங்கிகளின் கவனம் அதிகரித்துக் கொண்டே போகின்றன. வங்கிக் கடனை வாங்க குறிப்பிட்ட சில காப்பீடுகளை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் செய்யும் வங்கிகள் இருக்கின்றன. சேமிப்புக் கணக்குத் துவங்கினால் பரஸ்பர நிதியத்தில் பணம் செலுத்தச் சொல்லிக் கட்டாயப்படுத்தும் வங்கிகள் இருக்கின்றன. முன்பெல்லாம் இவற்றைத் தனியார் பணம் பறிக்கும் சில நிறுவனங்கள் செய்து கொண்டிருந்தன. இவற்றை இப்போது வங்கிகளே செய்ய ஆரம்பித்து விட்டன.

            வங்கிகள் தங்கள் கவனத்தை பரஸ்பர முதலீடுகள், காப்பீடுகள் என்று கொண்டு போய் இறங்கியதைப் பார்க்கும் போது நிரந்தர வைப்பு (பிக்சட் டெபாசிட்), தொடர் வைப்பு (ரெகரன்ஸ் டெபாசிட்) போன்ற வங்கி தரும் வாய்ப்புகள் எல்லாம் என்னவாகி விட்டன என்ற கேள்விகள் எழுகின்றன. அந்தக் கேள்விகளைப் பரஸ்பர நிதி முதலீடுகளும் காப்பீடுகளும் தரும் அதிகப்படியான பண வாய்ப்பு (ரிட்டர்ன்) என்ற வார்த்தை ஜாலங்களும் நம்பகமற்ற வாக்குறுதிகளும் விழுங்கிக் கொண்டிருக்கின்றன.

            தொடர் வைப்பு (ரெகரன்ஸ் டெபாசிட்), நிரந்தர வைப்பு (பிக்சட் டெபாசிட்) போன்ற பாதுகாப்பான வங்கி வழிமுறைகளை அழித்தொழித்து அநாமதேய தரகுக் கட்டணத்தால் பணப்புழக்கத்தை அதிகரிப்பதிலும் மக்களை ஊசலாடும் பங்குச் சந்தையின் முதலீட்டாளர்களாக ஆக்குவதிலும் வங்கிகள் அதிக கவனம் செலுத்துகின்றன.

            ‘துணிவு’ திரைப்படத்தில் அஜித் பொருளாதாரக் குற்றவாளிகளை விசாரணை செய்கிறார், மக்கள் ரசிக்கும்படி கேள்விகளைக் கேட்டுக் குடைந்தெடுக்கிறார், முடிவில் பாதுகாப்பு அறைக்குள் போட்டுத் தள்ளுகிறார் அல்லது சமாதி வைக்கிறார், கமாண்டோ, ராணுவ தாக்குதல்களிலிருந்தும் தப்புகிறார். இவை எதுவும் நடைமுறைச் சாத்தியமில்லை என்றாலும் இந்த நடைமுறைச் சாத்தியமற்றவற்றைக் கொண்டு பொருளாதாரக் குற்றவாளிகளை அடையாளம் காட்டுவதில் வெற்றி பெறுகிறார். தற்கால பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டங்களின் ஓட்டைகளில் புகுந்து எப்படியெல்லாம் அரசாங்கம் மற்றும் காவல்துறையின் பாதுகாப்புகளோடு குற்றம் புரிந்த குற்றவுணர்ச்சி ஏதுமின்றி சொகுசாகவும் சாகசகக்காரர்களாகவும் வாழ்கிறார்கள் என்பதைத் தோலுரித்துக் காட்டிய விதத்தல் ‘துணிவு’ கவனம் ஈர்க்கும் திரைப்படமாகிறது. ஒரு பெரிய அபிமான நட்சத்திரத்தை வைத்துத் தற்காலத்தில் சமூகத்திற்குத் தேவையான விழிப்புணர்வைத் தந்த வகையில் இயக்குநர் ஹெச். வினோத்தும் பாரட்டிற்கு  உரியவராகிறார்.

            வங்கி முறைகேடுகள், பண முதலீட்டுத்  தகிடுதித்தங்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவர்கள் மட்டுமல்லாது அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் இது. ஏனென்றால் எல்லாரும் நடைமுறையில் ஏதோ ஒரு வகையில் வங்கிகளிள் முறைகேடுகளாலும், பணமுதலீட்டுத் தகிடுதித்தங்களாலும் பாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். இந்தத் திரைப்படம் பொருளாதார குற்ற இருட்டுக்குள் துணிவாக ஒரு வெளிச்ச விளக்கை (டார்ச் லைட்) அடித்துப் பார்த்திருக்கிறது. அதனாலே அனைவரும் பார்க்க வேண்டியதாகவும் இருக்கிறது

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...