மனக்கணக்கு
சொல்வதில் ஒரு தவறு முளைக்கிறது
செய்வதில் ஒரு தவறு முளைக்கிறது
ஒவ்வொரு தவறும் முடக்கிக் கொள்வதில் முடிகிறது
முடங்கிக் கொள்வதினும்
புதுப்புது தவறுகள் புரிவது
தவறில்லை என்று தோன்றுகையில்
தவறுகளுக்கு மத்தியில்
சரியெனப்படுவது முளைத்து எழுகிறது
ஆயிரம் களைகளுக்கு மத்தியில்
ஒரு பயிர் முளைத்து வரும் போது
ஒரு பயிர் வளர்க்க
ஆயிரம் களைகளை அகற்ற
அலுப்புக் கொள்ளக் கூடாது என்கிறது நிலம்
ஒரு வெற்றிக்காக
ஆயிரம் தோல்விகளை எதிர்கொள்ள
பின்வாங்கக் கூடாது என்கிறது மனம்
எத்தனைக் களைகளை அகற்றினோம்
என்பது கணக்கில்லை
ஒரு பயிரையேனும் வளர்த்தோமா
என்பதே கணக்கு என்கிறது நிலமும்
கூடவே சேர்ந்து கொள்ளும் மனமும்
ஒரு வெற்றியாக இருக்கலாம்
அது ஆயிரம் தோல்விகளை அழித்ததன் கணக்கு
*****
No comments:
Post a Comment