23 Jan 2023

இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது

இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது

எனக்கு உங்களால் உதவ முடியாது

சொல்லப் போனால்

என்னால் கூட எனக்கு உதவ முடியாது

என் அமைப்பு அப்படி இருக்கிறது

நீங்கள் உதவவில்லை என்று வருந்தப்பட மாட்டேன்

உங்கள் உதவிகள் என்னைச் சேரவில்லை என்று

உலகிற்குச் சொல்லவும் மாட்டேன்

உண்மையைச் சொல்லப் போனால்

எந்த உதவிகள் எனக்கு உதவக் கூடும்

யார் செய்யும் உதவிகள் எனக்குத் துணை நிற்கக் கூடும்

என்று எதுவும் எனக்குத் தெரியாது

உபத்திரவங்கள் கூட அப்படித்தான்

எது என்னை உபத்திரவம் செய்யும்

என்று எனக்கு எதுவும் தெரியாது

உதவிகள் குறித்தோ உபத்திரவங்கள் குறித்தோ

நான் எதையும் நினைத்துக் கொள்வதில்லை

வாழ்க்கையில் இரண்டும் இருக்கும் அல்லது

இல்லாமலும் இருக்கும்

இருப்பதற்கு மகிழ்வதோ

இல்லாமல் போவதற்கு வருந்துவதோ

எதுவும் இல்லை வாழ்க்கையில்

வாழ்க்கைப் பயணத்தில் எதுவும் நடக்கலாம்

அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது

உதவிக்கு நன்றி சொல்லவில்லை என்று நினைக்காதீர்கள்

உபத்திரவத்திற்காகக் கோபப்படவில்லை என்று நினைக்காதீர்கள்

ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்காக

இரண்டிலொன்றைச் செய்ய வேண்டியிருக்கிறோம்

எதைச் செய்யப் போகிறோம்

எதைச் செய்யாமல் விடப் போகிறோம் என்பது

உங்களுக்கும் தெரியாது என்பதை நான் அறிவேன்

அறியாமல்தான் செய்து கொண்டிருக்கிறோம்

அறியும் போது எல்லாம் நடந்து முடிந்திருக்கும்

வருத்தப்படுவதற்கு எதுவுமில்லை

போய் வாருங்கள் மனிதர்களே

இந்தப் பூமியில் இன்னும் நீங்கள் செய்ய வேண்டியது

நிறைய இருக்கிறது

*****

No comments:

Post a Comment

மும்மொழிக் கொள்கை – தேவையில்லாத ஆணி!

மும்மொழிக் கொள்கை – தேவையில்லாத ஆணி! இருமொழிக் கொள்கையே தேவையில்லாத ஆணி எனும் போது மும்மொழிக் கொள்கை குறித்து என்ன சொல்வது? தாய்மொழி வழி...