10 Jan 2023

இரவை உறிஞ்சியெடுக்கும் வன்மங்கள்

இரவை உறிஞ்சியெடுக்கும் வன்மங்கள்

பகல் பொழுதெங்கும் சேர்ந்த சம்பவங்களின்

கோர்வைகளின் வேகம்

ஏதோ செய்ய சொல்கிறது

உறக்கம் வ ருவதாயில்லை

செயலும் பிடிபடுவதாயில்லை

உறக்கத் திராவகத்தின் கடைசித் துளி

அணைந்து போன விளக்கில் பட்டு எரிகிறது

பிரேக்கிழந்த வாகனத்தின் மீதேறி

சாகசக்காரனாய் இருந்து கோமாளியாய் மாறி விட்ட

மனம் யோசித்துக் கொண்டு செல்கிறது

பாதை இரு மருங்கிலும்

பயத்தில் பூத்த மலர்கள்

தூரத்தில் முன்னோக்கிப் பாயும் காலம்

நிகழ்வுகள் அத்தனையும்

சாலை முழுதும் சிதறிக் கிடக்கின்றன

ஒரு விபத்து தடுத்து நிறுத்தினாலும்

முன்னேறிச் செல்லும் பயணம்

மற்றொரு விபத்திலும்

பயணித்துக் கொண்டே இருக்கிறது

பயங்கரங்கள் அச்சுறுத்த

நினைவிலிருந்து கனவில் தவறி

விழுந்த நொடி அறியாது

வானில் நிலா பிரகாசிக்கிறது

கண் மூடிக் கிடக்கும் பிரக்ஞைகளை

கண் விழித்துக் கொண்டிருக்கும்

நட்சத்திரங்கள் பரிகசிக்கின்றன

எப்போது கண் மூடி

கண் விழித்தேன் என்று தெரியவில்லை

இரவை உறிஞ்சி எடுத்த வன்மத்தோடு

பகல் வெளிச்சத்தைக் கக்கியபடி இருக்கிறது

இமைகளை இறுக்கி முடியபடி

விழிப்பின் குருட்டுத்தானத்தில் அலைகின்றன கண்கள்

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...