11 Jan 2023

கனக்கச்சிதமற்ற அன்புக்கான ஏற்பாடுகள்

கனக்கச்சிதமற்ற அன்புக்கான ஏற்பாடுகள்

நீங்கள் கனக்கச்சிதத்தை எதிர்பார்ப்பவர்கள்

உங்களுக்கு நான் கனக்கச்சிதம் அல்ல

எனக்கு நீங்கள் கனக்கச்சிதம் அல்ல

மேலும் உங்களுக்கும் எனக்கும்

அவரவர் துணைவரோ

அவரவர் நண்பர்களோ

அவரவர் உறவினர்களோ

கொஞ்சம் கூட கனக்கச்சிதம் அல்ல

யாருக்கும் யாரும் கனக்கச்சிதம் அல்ல

அவ்வளவு ஏன்

கையின் விரல்களோ கால்களின் விரல்களோ

ஒன்றுக்கொன்று கனக்கச்சிதம் அல்ல

மரங்கள் ஒன்றுக்கொன்று கனக்கச்சிதம் அல்ல

விலங்குகள் ஒன்றுக்கொன்று கனக்கச்சிதம் அல்ல

பறவைகள் ஒன்றுக்கொன்று கனக்கச்சிதம் அல்ல

யாதும் யாதொன்றுக்கும் கனக்கச்சிதம் அல்ல

கனக்கச்சிதம் என்பதில் என்ன இருக்கிறது

ஒரே மாதிரியாக நகலெடுப்பதில் என்ன இருக்கிறது

கனக்கச்சிதமற்ற ஒவ்வொன்றிடமும்

கனக்கச்சிதமற்று அன்பு செய்ய

எவ்வளவோ வாய்ப்புகளிருக்கிறது

எத்தனையோ வழிகளிருக்கிறது

கனக்கச்சிதமற்றதாய் இந்த இயற்கை ஒவ்வொன்றையும்

கனக்கச்சிதம் என்பதைக் கடந்து அன்பு செய்ய

எவ்வளவு கனக்கச்சிதமாக படைத்து வைத்திருக்கிறது

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...