கடலைக் குடித்த வானம்
இந்தக் கடல் உறிஞ்சிக் குடிப்பதற்கேற்றது
அதன் நீலம் மயக்கக் கூடியது
அலைகள் எச்சில் ஊற வைப்பவை
பூமிப் பாத்திரத்தில் ருசியான
திரவம் போல
ஊற்றி வைக்கப்பட்டிருக்கும்
கடலைக் குடிக்க நினைப்பதற்குள்
ஒரு சிறுவன் ஓடி வந்து கை
தட்டுகிறான்
ஒரு சிறுமி துள்ளிக் குதித்து
ஆர்பரிக்கிறாள்
ஒரு காதலனும் காதலியும் பார்த்த
மாத்திரத்தில் தழுவிக் கொள்கிறார்கள்
ஒரு முதியவர் தன்னை மறந்து
பரவசம் ஆகிறார்
சோகம் சுமந்த வந்த ஒருவனும்
ஏக்கம் சுமந்து வந்த ஒருத்தியும்
எல்லாம் தொலைத்து ஏகாந்தத்தில்
திளைக்கிறார்கள்
கடலைக் குடிக்கும் முடிவிலிருந்து
பின்வாங்குவதைத் தவிர வேறு
வழியில்லாது
அண்ணாந்து பார்க்கிறேன்
என்னை எவ்வளவு வேண்டுமானாலும்
குடித்துக் கொள் என்று
கடலைக் குடித்தது போலக் கடலின்
பிரதியாய்
மேலே விரிகிறது வானம்
*****
No comments:
Post a Comment