பசியை விநியோகிக்கும் தெய்வம்
ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கிறேன்
என்கிறாய்
பத்தாயிரம் பேரின் உணவைப்
பறித்த
உண்மையை வாக்கிய வெற்றிலையில்
வைத்து மறைத்தபடி
எத்தனையோ குடும்பங்கள்
இதை நம்பியன்றோ பிழைக்கிறது
என்ற
எச்சில் கறையை எங்களை நோக்கி
உமிழ்கிறாய்
உன் குடும்பம் அதை நம்பி
கோடி கோடியாய்ச் சம்பாதிப்பதை
சொக்க வைக்கும் வார்த்தை
பிம்பங்களில் சிதறடித்தபடி
உன் பேராசை உன் பண ஆசைக்கு
உண்மையை ஜால வித்தையில் வைத்து
வாழ்க்கை என்பது அவ்வளவுதானென்று
தத்துவ மாய வித்தைகளில் விளையாடுகிறாய்
நீ வீசும் சல்லிக்காசில்
வாங்கிய ரொட்டித் துண்டுக்கு
மனித நாய்கள் எவ்வளவு விசுவாசமாய்
இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்
உன் சொகுசு உன் வசதியில்
லட்சத்திலொரு பங்கு கோடியிலொரு
பங்கு பெறுமா
எங்களின் வயிற்றுப் பசி
வயிற்று நெருப்பின் உக்கிரத்தை
உன் யாகத் தீயின் நாக்குகளால்
நக்கியபடி
எங்கள் எல்லாரையும் உன்னைத்
தெய்வமாய்
வணங்கச் சொல்கிறாய்
வணங்குகிறோம் வணங்குகிறோம்
எங்கள் படையல் முழுவதும்
உனக்கே
என்பது புரியாமல்
எங்கள் பசியை எங்களுக்கு
எப்படி
விநியோகிப்பது என்பது தெரிந்த
தெய்வம் நீயே
*****
No comments:
Post a Comment