24 Dec 2022

இரண்டாம் உலகின் நடிப்பின் கால கட்டம்

இரண்டாம் உலகின் நடிப்பின் கால கட்டம்

நான் அப்படியல்ல

அப்படித்தான் நடிக்க வேண்டியிருந்தது

நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது

நிஜத்திற்கு விமர்சனம்தான் மிஞ்சுகிறது

என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும்

நான் சரியாக நடிக்கவில்லை என்பதற்கான பிரதிவினைகள்

என் முகமூடிக்கு இருக்கும் மதிப்பு

எனக்கில்லை என்பதால்

எந்நேரமும் முகமூடி அணிந்து திரிகிறேன்

என்னை நான் பார்க்க வேண்டும் என்று நினைக்கும் போது

யாரும் அறியாமல் வெகு ரகசியமாய்

என் அலங்காரம் கலைத்து வேடம் கலைத்து

என்னை நானே பார்த்துக் கொள்கிறேன்

என்னை நான் பார்த்துக் கொள்ளும்

அந்தச் சில நிமிடங்களில்

என்னையும் அறியாமல் விசும்புகிறேன்

என்னைத் தொலைத்து விட்டு

எனக்காக நான் எதைத் தேடிக் கொண்டிருக்கிறேன்

நீங்கள் சந்தோசமாய் இருப்பதற்காக

நான் நடித்துக் கொண்டிருக்கும் வாழ்க்கையில்

நான் சந்தோசமாக இல்லை என்று உரக்கச் சொல்ல விரும்புகிறேன் 

அதனாலென்ன

உங்களுக்காக நீங்கள் ஆனந்தமாக இருப்பதைப்

பொறாமையோடு பார்ப்பதுதான் இந்த உலகம் என்கிறீர்கள்

நான் என் சந்தோஷத்தைச் சுருட்டிக் கொண்டு

உங்களுக்காகச் சந்தோசமாக இருப்பதாக நடிக்கத் தொடங்குகிறேன்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...