15 Dec 2022

மரியாதை தெரிந்த மேசை

மரியாதை தெரிந்த மேசை

ரொம்ப நாளாகத் தேடிக் கொண்டிருந்த மேசை

தமிழின் ஆஸ்தான எழுத்தாளர்

இதோ இங்கே நின்று கொண்டிருக்கும் மேசையில்

பற்பல எழுதியிருக்கிறார்

எழுதியதற்கான வெகுமானங்களை

மேசை டிராயரில் வைத்துப் பூட்டியிருக்கிறார்

எழுத்தாளர் மரித்த பின் மதிப்பிழந்த மேசை

கடை முதலாளி ஒருவருக்குக்

கணக்கெழுதும் மேசையாகவும் போயிருக்கிறது

அதி நவீன அலங்கார மேசைகள் வந்த பிறகு

ஓரங்கட்டப்பட்ட மேசை

பேரத்திற்கு விற்கப்பட்டு ஏலத்திற்கு வந்த போது

என் வீட்டிற்கு வந்தது

வருத்தம் ஏதுமில்லாமல்

எண்ணையும் எழுத்தையும் பார்த்த மேசை

அத்தனை பழைய பொருட்களைச் சுமந்தபடி

மரியாதை நிமித்தம் நின்று கொண்டிருக்கிறது

எனக்குப் பாவமாய்த் தோன்றும் பொழுதுகளில்

உட்கார் என்கிறேன்

மரியாதை தெரிந்த மேசை

உட்காராமல் நின்று கொண்டே இருக்கிறது

*****

No comments:

Post a Comment