22 Nov 2022

கண்டிப்பவர்கள் மாறி விட்டார்கள்

கண்டிப்பவர்கள் மாறி விட்டார்கள்

முன்பெல்லாம் கண்டிப்பதற்குப் பெரியவர்கள் இருந்தார்கள். இப்போது அவர்கள் முதியோர் இல்லத்தில் இருக்கிறார்கள்.

ஆசிரியர்கள் கண்டிப்போர் பட்டியலில் இருந்தார்கள். பிள்ளைகள் கத்திகளையும் துப்பாக்கிகளையும் தூக்குவதைப் பார்த்து விட்டு அவர்கள் அடக்கமாக இருக்கிறார்கள்.

தொடர்ந்து தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டித்தால் உனக்கு இந்தத் தொலைக்காட்சியின் தானியங்கிக் கருவியைக் (ரிமோட்டை அப்படிச் சொல்லலாமா?) கூட இயக்கத் தெரியாது, நீயெல்லாம் கண்டிக்க வந்து விட்டாயா என்கிறார்கள்.

நிலைமை அப்படித்தான் இருக்கிறது. தொலைக்காட்சியைப் போட்டு ஒரு குறிப்பிட்ட அலைவரிசை அதில் பார்க்கத் தெரிய மாட்டேன்கிறது. பிள்ளைகளைக் கூப்பிட்டுத்தான் அந்தப் பழைய பட அலைவரிசையை வைத்துக் கொடு என்று கெஞ்ச வேண்டியிருக்கிறது.

எந்நேரமும் அலைபேசியில் அமிழ்ந்து கிடப்பதையாவது கண்டிக்க முடிகிறதா என்றால் அதுவும் ஊகூம் வகைதான். அந்த அலைபேசியின் பூட்டை (லாக்கை) நீக்கிப் பேசுவதற்கு அந்தப் பிள்ளைகள் துணைதான் தேவைப்படுகிறது.

அவர்கள் என்னவோ ஆட்காட்டி விரலால் நோண்டி என்னென்னவோ எடுக்கிறார்கள். நாம் தொட்டால் என்னென்னவோ வருகிறது, என்னென்ன வருகிறது என்பது புரியவும் மாட்டேன்கிறது, அதிலிருந்து எப்படி வெளியே வருவது என்பதும் தெரிய மாட்டேன்கிறது.

என்னவோ புலனத்தில் (வாட்ஸ் ஆப்பில்) செய்தி வந்திருக்கிறதாம், அதைக் கொஞ்சம் கண்ணில் காட்டப்பா என்று பிள்ளைகளைத்தான் கெஞ்ச வேண்டியிருக்கிறது. யூடியூப்பில் (இதற்கு தமிழில் என்ன? தெரிந்தவர்கள் சொல்லவும்) ஏதோ படம் வந்திருக்கிறதாமோ, அதைக் கொஞ்சம் காட்டி விட்டுப் போப்பா என்று மீண்டும் அவர்களைத்தான் கெஞ்ச வேண்டியிருக்கிறது.

நான் பிள்ளையாக இருந்த போதெல்லாம் இப்படி இல்லை. என் அப்பாவுக்கு நிறைய தெரிந்திருந்தது. நான் அவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டிய நிலையில் இருந்தேன். நான் அப்பா ஆகும் போது நிலைமை இப்படி ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை. எனக்கு எதுவும் தெரியவில்லை. பிள்ளைகளிடம் கேட்டுக் கொள்ளும் நிலையில் இருக்கிறேன்.

இதில் கண்டிப்பாவது மண்ணாங்கட்டியாவது? அவர்களை அனுசரித்துக் கொண்டு எப்படி காலத்தை ஓட்டுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

அவர்களுக்குத்தான் அட்டையைச் செருகி பணம் எடுக்கத் தெரிகிறது. சில நொடிகளுக்குள் மின்சாரக் கட்டணம், குடிநீர்க் கட்டணம், சொத்து வரி, சேவை வரி என்று எல்லாவற்றையும் அலைபேசியில் கட்டத் தெரிகிறது.

அவர்களை அனுசரித்துக் கொள்ளா விட்டால் வரிசையில் கால் கடுக்க வியர்வை வழிய நின்று நான்தான் கட்டி வர வேண்டும்.

மேற்படி சௌகரியங்கள் பல இருப்பதால் பல நேரங்களில் அவர்கள் என்னைக் கண்டித்தாலும் நான் கண்டு கொள்வதில்லை.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...