கொஞ்சம் பொறுத்திருந்தால் எல்லாம் அலுத்துப் போய் விடும்!
எவ்வளவு நாள்தான் பிரச்சனைகளைக்
கண்டு பயந்து கொண்டு இருப்பீர்கள்? ஒரு கட்டத்தில் பயப்படுவது உங்களுக்கே அலுத்து விடும்.
ஆகவேத்தான் பிரச்சனைகளைக்
கண்டு யாரிடமும் ஆலோசனை கேட்காதீர்கள் என்று சொல்கிறேன். அது அலுத்துப் போகும் காலம்
வரும் வரை காத்திருங்கள்.
அதற்குப் பிறகு பாருங்கள்.
யாருக்காவது பிரச்சனை என்றால் நீங்கள் ஆலோசனைகளைக் கூறத் தொடங்கி விடுவீர்கள்.
அப்போது உங்கள் ஆலோசனைகளை
யாரும் கேட்க வில்லை என்று நினைக்கக் கூடாது.
நீங்கள் பயந்த போது யாருடைய
ஆலோசனைகளையாவது கேட்டீர்களா? உங்கள் பயத்தைத்தானே பெரிதுபடுத்திக் கொண்டிருந்தீர்கள்.
இப்படித்தானே முதல் பேய்
படம் பார்க்கும் போது உங்களுக்குப் பயம் இருந்தது. அது படம்தான் என்று எவ்வளவு சொல்லியும்
நீங்கள் கேட்டீர்களா? இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது, பேய் படம் பார்த்துச் சிரித்துக்
கொண்டு இருக்கிறீர்கள்.
என் நண்பர் ஒருவன் உடம்பு
சரியில்லை என்றால் மருத்துவரிடம் ஊசிப் போட்டுக் கொள்ள பயந்து கொண்டிருந்தான். அவனுடைய
பயத்தைப் போக்குவது சாதாரணமானதாக இல்லை.
ஒருமுறை ஊசி போட வந்த டாக்டரை
உதைத்துத் தள்ளி விட்டான். சொன்னால் நம்ப மாட்டீர்கள், அவர் சினிமாவில் ஹீரோவின் அடிக்கு
வில்லன் பறந்து போய் விழுவதைப் போல விழுந்தார். மேசை இரண்டு துண்டாகப் பிளந்து போய்க்
கிடந்தது.
ஊசி பயம் தெளிய அவனுக்கு
ரொம்ப நாளானது.
இப்போது ஊசி குறித்த பயம்
அவனுக்கில்லை. உடம்புக்கு எது என்றாலும் உடனே ஊசி போட நிற்கிறான். மருத்துவர்தான் அவனுக்கு
எவ்வளவு ஊசிகள் போட்டுக் கொண்டிருப்பது என்று பயந்து கொண்டிருக்கிறார்.
காலம் அவனது ஊசி பயத்தை அலுத்துப்
போகச் செய்து விட்டது.
பொழுது போகவில்லை என்றால்
மருத்துவரிடம் போய் ஓர் ஊசிப் போட்டுக் கொள்ளலாமா என்கிற அளவுக்கு அவன் உச்சாணிக் கொம்பை
நோக்கி முன்னேறி விட்டான்.
*****
No comments:
Post a Comment