17 Nov 2022

விவசாயிகளின் கையறு நிலை

விவசாயிகளின் கையறு நிலை

ஆற்றில் தண்ணீர் வந்தால் நாட்டில் எதற்கும் பஞ்சம் இருக்காது. டெல்டா மாவட்டங்களில் காவிரியில் தண்ணீர் வந்தால் குறுவைக்குப் பஞ்சம் இருக்காது. இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் வந்தும் குறுவைக்குப் பஞ்சம் வந்தது போல எங்கள் ஊர் விவசாய நிலங்கள் கிடக்கின்றன.

நெல் விவசாயத்தின் மீதான ஈடுபாடு எங்கள் பகுதி விவசாயிகளுக்குக் குறைந்து வருகிறதோ என்று தோன்றுகிறது. விவசாயத்தை ஓர் உப தொழிலாக வைத்துள்ள உபரிப் பணம் நிறைந்தவர்கள் மட்டுமே குறுவை போட்டுள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் விவசாயத்தில் பணத்தைப் போட்டு பணத்தை எடுப்பது என்பது சூதாட்டத்தைப் போல மாறி வருகின்றது. சூதாட்டத்தில் கூட எப்போதாவது சில முறைகள் குருட்டு அதிர்ஷ்டம் போல விட்ட பணத்தைப் பிடித்து விடுவதுண்டு. ஆனால் இந்த விவசாயம் இருப்பதிலேயே மிக மோசமான சூதாட்டம் போல மாறிக் கொண்டிருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக விவசாயம் சம்பந்தமான அனைத்தும் விலையேறி விட்டன. விதை நெல், உரம், பூச்சிக்கொல்லி, ஆள் கூலி, இதர செலவினங்கள் என்று எல்லாம் விலைவாசியைக் காரணம் காட்டி விலையேறி விட்டன. விலை ஏறாதது ஒன்றே ஒன்று என்னவென்றால் விவசாயிகள் விளைவிக்கும் நெல் மூட்டைகள்தான்.

ஓர் ஆறுதலுக்காக நெல் மூட்டைக்கான ஆதரவு விலையை இருபதும் முப்பதும் உயர்த்துகிறார்கள். ஆனால் உயர்த்தப்பட்ட உர மூட்டைகளின் விலையைக் கேட்டால் மலைத்துப் போய் விடுவீர்கள்.

பயிர் காப்பீடுகள் கிடைப்பதிலும் ஒவ்வொரு பகுதிக்கேற்றாற் போல பாரபட்சம் நிலவுகிறது. பயிர்க் காப்பீட்டைச் செய்து முடிப்பதற்குள் விவசாயிகள் அலைந்தலைந்து கால் தேய்ந்து கட்டெறும்புகள் போலாகி விடுகிறார்கள்.

இப்பிரச்சனையின் மிக முக்கியமான நேரடிப் பாதிப்பைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் அரிசியின் விலை கூட கிலோவுக்கு 5 லிருந்து 10 வரை ஏறி விட்டது. ஆனால் நெல் மூட்டைகள் இன்னும் அதே விலையில் நீடிக்கின்றன. நெல் மூட்டைகள் விலையேறாத போது அரிசி மூட்டைகள் எப்படி விலையேற முடியும் என்பதற்கு யாரிடம் என்ன பதில் இருக்கிறது சொல்லுங்கள்.

விவசாயிகள் விளைவித்தால் அதை விற்றுதானே தீர வேண்டும் என்ற துர்பாக்கிய நிலையில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். ஒரு மாறுதலுக்கு ஒவ்வொரு விவசாயியும் விதை நெல்லையும் தமது வீட்டுக்கான நெல்லையும் இருப்பு வைத்துக் கொண்டால் கூட போதும், நெல்லின் மகத்துவம் இந்த உலகிற்குப் புரிந்து விடும்.

விவசாயிகளை விளைவித்ததை அடிமாட்டு விலைக்கு விற்கும் கூலிகளைப் போல மாற்றி விட்டதன் விளைவு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையைக் கூட அவர்களால் உரிமையோடு கேட்டுப் பெற முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...