18 Nov 2022

ராணுவ வாகனங்களை நிறுத்தி வேலை வாய்ப்பை உருவாக்கித் தாருங்கள்

ராணுவ வாகனங்களை நிறுத்தி வேலை வாய்ப்பை உருவாக்கித் தாருங்கள்

கார்லோனா நாட்டில் இப்படி நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அங்கிருந்து வரும் செய்திகள் அச்சமூட்டுகின்றன. தலைநகர் லாரிகிங்கில் 800 கிலோ மீட்டர் தூரம் வரை ராணுவ வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. கூடிய விரைவில் அங்கு ராணுவ ஆட்சி ஏற்பட்டு விடும் என்கிறார்கள்.

கார்லோனா நாட்டின் பெயர் வித்தியாசமாக இருக்கலாம். காருக்கு என்றால் கேட்ட உடனே லோன் தந்து விடுவார்கள். அதனால்தான் அந்தப் பெயர். தமிழில் இப்படி அமைந்தால் அதற்குக் காரணப் பெயர் என்று காரணம் சொல்வதுண்டு. அந்தப் பெயர் கார் மற்றும் லோன் எனும் ஆங்கிலப் பெயர்களை இணைத்து ஆகார விகுதி பெறுவதால் அப்படிச் சொல்லலாமா என்ற ஐயப்பாடு இருந்தாலும் அப்படிச் சொல்வதில் தவறொன்றுமில்லை என்றே தோன்றுகிறது.

அந்த நாட்டின் தலைநகர் லாரிகள் உற்பத்திச் செய்வதில் பெயர் போனது. அதனால் லாரிகிங் என்ற பெயரும் பொருத்தமானதே. இதுவும் காரணப் பெயரைச் சார்ந்ததுதான். லாரி உற்பத்தி செய்வதில் கிங் போன்ற நகரம் என்பதால்.

அந்நாட்டின் அதிபர் சங்கிபிங்கி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட சமயத்தில் இந்தக் கலவரம் நடந்தேறி இருக்கிறது. விவரம் தெரிந்து தாயகம் திரும்பிய சங்கிபிங்கியை ராணுவம் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்திருக்கிறது. இது உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

திடீர் திடீர் என்று இப்படி ராணுவ ஆட்சிகள் முளைத்தால் மக்களாட்சிக்கு என்னதான் மரியாதை? கார்லோனா நாட்டில் மக்களாட்சியும் இல்லை என்பது வேறு விசயம். ஆனால் அங்கு ஒரு கட்சி இருக்கிறது. ஒரே ஒரு கட்சிதான் இருக்கிறது. அந்த ஒரே ஒரு கட்சிக்குத்தான் மக்கள் வாக்களிக்க முடியும். இன்னொரு கட்சி இருந்தால்தானே இன்னொரு கட்சிக்கு வாக்களிப்பது பற்றி மக்கள் யோசிக்க முடியும்? அப்படி ஒரு யோசனைக் குழப்பம் மக்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் அந்த நாட்டில் இப்படி ஒரு ஏற்பாடு.

இப்போது ராணுவ ஆட்சி வந்தாலும் மக்களாட்சிக்கு எந்தக் குந்தகமும் ஏற்பட்டு விடாதபடி ஏற்கனவே இருந்த ஒரு கட்சியை அழித்து அதற்கு மாற்றாக இன்னொரு ஒரே ஒரு கட்சியை ஏற்படுத்தி அதற்கு வாக்களிக்கும்படி மக்களைச் செய்துதான் ஆட்சியை அமைப்பார்கள் என்பதால் ஜனநாயகம் குறித்த கவலை நமக்கு இல்லாமல் போகிறது.

அதை விட முக்கியமாக எதற்காக இந்தப் பத்தி என்றால் இங்கிருந்து கார்லோனா நாட்டில் வேலை தேடிப் போன குப்புசாமி நாகரத்தினத்தின் நிலை என்ன என்பதற்காகத்தான்.

ராணுவ ஆட்சி நடைபெறும் இடைப்பட்ட காலத்தில் அவர் பாதிக்கப்பட்டு விடக் கூடாது. தொடர்புடைய நிர்வாக அமைப்புகள் அவரை மீட்டுத் தாயகம் கொண்டு வர உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற பதற்றம்தான் என்னை இந்தப் பத்தியை எழுத வைத்தது.

நல்ல வேளையாக அதிகாலை 4.30 மணி வாக்கில் குப்புசாமி நாகரத்தினம் தன்னுடைய அலைபேசியிலிருந்து அழைத்து என்னிடம் பேசினார். தான் நலமாக இருப்பதாகவும் வரிசையாக லாரிகிங்கை நோக்கி நின்றிருக்கும் இராணுவ வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு டீ விற்று தற்போது தன்னுடைய பிழைப்பைப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

துஷ்ட காலத்திலும் அவருக்குப் பிழைப்பதற்கான வாய்ப்பை வழங்கிய ராணுவ அரசுக்குத் தற்சமயம் நன்றி தெரிவிப்பதுடன் தொடர்ந்து அவர் டீ விற்பதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் ராணுவ வாகனங்களை நிறுத்தி அவருக்கு நல்ல தொழில் வாய்ப்பையும் ஏற்படுத்தித் தர வேண்டுமென்று இந்த நேரத்தில் நான் கார்லோனா அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.

மற்றவைக் குறித்து அடுத்தப் பதிவில் பார்த்துக் கொள்வோம்.

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...