விருது கொடுப்போர் கவனத்திற்கு…
நாட்டில் விருது கொடுக்கும்
அமைப்புகள் பல்கிப் பெருகி விட்டன என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன். ஓர் அமைப்பை
உருவாக்கி விட்டால் ஒரு விருதைக் கொடுத்தாக வேண்டும் என்ற நிலைமை இருக்கிறது.
இது உண்மையா என்று கேட்டால்
உண்மைதான். என்னையே விருது வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூப்பிடுகிறார்கள் என்றால் பார்த்துக்
கொள்ளுங்கள்.
நான் என்ன செய்து கிழித்து
விட்டேன்? எனக்கெதற்கு விருது? என்று நேரடியாகவே கேட்டு விடுகிறேன். அதெல்லாம் அப்படித்தான்,
ஒன்றும் செய்து கிழிக்காமல் இருந்ததற்காகத்தான் விருது என்கிறார்கள்.
இதிலுள்ள கொடுமை என்னவென்றால்
விருது தருவதற்கு ஓர் ஆள் தேவைப்படுகிறது. இதில் விருது வாங்குபவருக்கு நிகழும் கொடுமை
என்னவென்றால் அவர் அந்த விழாவுக்குச் சென்று ஐந்து மணி நேரம், ஆறு மணி நேரம் தேவுடு
காத்து அந்த விருதை வாங்கிக் கொள்ள வேண்டும். அதற்குள் அமைப்பைப் பற்றியும் அதன் செயன்முறைகள்
பற்றியும் சொல்லி அறுத்து எடுத்து விடுவார்கள்.
இந்தக் கூட்டங்களில் பேசுவதற்கென்றே
சில பெரிய மனிதர்கள் தயாராகி இருக்கிறார்கள். அவர்கள் பேசுகிறார்கள், பேசுகிறார்கள்,
மைக் கொஞ்ச நேரத்தில் வெந்து தணிந்த காடாகி விடுகிறது. கேட்பவர்கள் காய்ந்து ஓய்ந்த
கிழடாகி விடுகிறார்கள்.
ஒரு வழியாக விருதை வாங்கி
வீடு வருவதற்குள் கடைசிப் பேருந்து பல்லை இளித்துக் கொண்டு போய் விடுகிறது. பிறகென்ன
ஓர் ஆட்டோவுக்கு ஆயிரமோ, ஐநூறோ நேரத்தைப் பொருத்துப் போட்டுக் கொடுத்து வீடு வந்து
சேர வேண்டியதாயிருக்கிறது. அகாலத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்ப
வேண்டியதாய் இருக்கிறது.
வாங்கி வந்த விருது ஷீல்டை
வைப்பதற்கு வீட்டில் இடம் இருப்பதில்லை. அதை விளையாடுவதற்குக் குழந்தைகள் எடுத்துக்
கொள்கிறார்கள். இப்படியாகப் போய் விடுகின்றன நான் வாங்கும் விருதுகள்.
ஆகவே சொல்கிறேன், எனக்கு விருது கொடுக்க நினைப்பவர்கள் தயவு செய்து
அப்படி ஓர் எண்ணம் உங்கள் உள்ளத்தில் எழுவதை ஒழித்துக் கட்டி விடுங்கள் என்று கேட்டுக்
கொள்கிறேன்.
*****
No comments:
Post a Comment