சில சம்பவங்கள்
மாமா எப்போதாவது வருவார்.
வந்தால் இரண்டு நாட்கள் தங்குவார். நன்றாகச் சாப்பிடுவார். சாப்பாடு பிரமாதாக இருக்க
வேண்டும் என்று ரொம்பவே எதிர்பார்ப்பார்.
சாப்பாட்டில் இருக்கும் உப்பு,
புளி, மிளகாய் ஒன்று பாக்கியில்லாமல் ஆய்வு நோக்கில் ஒரு விமர்சனத்தை முன் வைப்பார்.
இவர் இரண்டு நாட்கள் இருந்து
சாப்பிடுவதற்குள் வீட்டில் இருக்கும் பெண்டுகளுக்குப் பெண்டு கழன்று விடும்.
அவர் எப்போது கிளம்புவார்,
கிளம்பும் முன்னே டீ போட்டுக் கொடுக்கலாம் என்று பெண்டுகள் காத்துக் கொண்டிருப்பார்கள்.
டீயைக் குடித்து விட்டு அதில்
போடப்பட்டிருக்கும் சீனியின் அளவு, டீத்தூளின் அளவு, பாலின் அளவு, தண்ணீரின் அளவு,
கொதிநிலையின் அளவு உட்பட கறாரான விமர்சனத்தை முன் வைப்பார்.
ஒரு நூறு ரூபாயைப் பாக்கெட்டில்
திணித்து பஸ் ஏற்றி விட்டால் சந்தோஷமாகப் போய் விடுவார். மறுபடி எப்போது வருவார் என்பது
அவருக்குத்தான் தெரியும்.
இந்த முறை வந்த போதும் தன்னுடைய
கறாரான விமர்சனங்கள் குறையாமல் கருத்துகளை முன் வைத்தார். பெண்டுகள் அதைப் பற்றி எதையும்
கண்டு கொள்ளாமல் சமைத்துப் போட்டார்கள். அதைப் பற்றி அவரும் மனதில் கொள்ளாமல் கருத்துகளை
முன் வைத்துக் கொண்டிருந்தார்.
அவர் ஊருக்குக் கிளம்பும்
நேரத்தில் பெண்டுகள் யாரும் அவருக்கு டீ வைத்துத் தரவில்லை. மாமாவும் அதை எதிர்பார்க்கவில்லை.
என்னை பஸ் ஏற்றி விடு என்று
கிளம்பி விட்டார். இந்த முறை அவர் பையில் நான் ஐநூறு ரூபாயைத் திணித்தேன். எதுக்குடா
மாப்ளே என்றவர் முகத்தில் ஏக குஷி. கிளம்பும் நேரத்தில் டீ குடித்து அதற்கு விமர்சனத்தை
முன் வைக்கவில்லையே என்ற வருத்தம் அவர் முகத்தில் கொஞ்சம் கூட இல்லவே இல்லை.
எனக்குதான் மாமாவுக்குக்
கிளம்பும் நேரத்தில் டீ வைத்துக் கொடுக்கவில்லையே என்ற வருத்தம் எப்போதும் இருந்து
கொண்டிருக்கிறது.
*****
No comments:
Post a Comment