இப்படியா பெய்யும் மழை?
மழை ரொம்ப வித்தியாசமாகத்தான்
பெய்கிறது. சீனாவில் பல ஆறுகள் வறண்டு விட்டன என்று அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
மும்பையிலும், டெல்லியிலும்,
பெங்களூருவிலும், இத்தாலியிலும் பெய்யும் மழை சொல்லும் தரமன்று.
கொட்டித் தீர்க்கிறது அல்லது
தீர்த்துக் கொட்டுகிறது என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.
நன்றாக இருக்கலாம் என்று
கோடிக்கணக்கில் காசைக் கொடுத்து வாங்கியோரின் வீடுகளில் எல்லாம் வெள்ளம் புகுந்து விட்டதாகச்
செய்திகள் வருகின்றன. கோடி கொடுத்து வாங்கியது குறித்த பிரக்ஞையின்றி இந்த வெள்ள நீர்
நடந்து கொள்வது ஏற்புடையது இல்லைதான். அது அங்கெல்லாம் போகக் கூடாது என்ற தெளிவுணர்வை
வருங்காலத்தில் யாராவது உருவாக்க வேண்டும்.
சுற்றிலும் வெள்ள நீர், ஆனால் குடிப்பதற்குக் குடிநீர் இல்லை என்பது ஒரு வகை நகைமுரண்.
என்ன செய்வது? ஒவ்வொரு வெள்ளத்தின் போதும் அப்படித்தான் நடக்கிறது?
கர்நாடக வெள்ளம் மேட்டூர்
அணையை நன்றாக நிரப்பியிருக்கிறது. பல நாட்கள் காவிரி கரை புரண்டு ஓடியிருக்கிறது. கரையோர
மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையையும் விட வைத்திருக்கிறது.
போன வருடம் குறுவையில் வாங்கிய
அடியில் இந்த வருடம் குறுவை வேண்டாம் என்று முடிவெடுத்தவர்கள் ஏமாந்து விட்டார்கள்
என்றுதான் சொல்ல வேண்டும்.
போன வருடம் என்ன நடந்ததென்றால்
பயிர் விளையும் நேரத்தில் தண்ணீர் கிடைக்கவில்லை. அதாவது காவிரியில் தண்ணீர் போதிய
அளவு விடவில்லை. பயிர்களை அறுவடை செய்யும் நேரத்தில் மழை விடவில்லை. எக்குதப்பாகப்
புரட்டிப் போட்டது மழை. இதைப் பார்த்து வெறுத்துப் போன விவசாய பெருமக்கள் பலர் இந்த
ஆண்டு குறுவை வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டார்கள்.
ஆனால் பாருங்கள் நடந்ததோ
வேறு மாதிரி. பயிர் விளையும் காலத்தில் ஆற்றில் நன்றாக தண்ணீர் வந்தது. இப்போது அறுவடை
செய்யும் நேரத்திலும் வெயில் பல்லை இளித்துக் கொண்டு அடிக்கிறது.
ஆகா ஏமாந்து விட்டோம் விவசாயிகள்
சிலருக்கு வருத்தம் இருக்கிறது. அதே நேரத்தில் நல்லவேளை குறுவைப் போடுகிறோம் என்று
கடன் வாங்காமல் தப்பித்தோம் என்ற மகிழ்ச்சியும் இருக்கிறது. இப்படி இரண்டு விதமாகக்
கருதிக் கொள்ள விவசாயிகளால்தான் முடியும். அதுவும் குறிப்பாகத் தமிழக விவசாயிகள்.
*****
No comments:
Post a Comment