16 Nov 2022

உங்களை எளிமையாக்கிக் கொள்ளும், கடினமாக்கிக் கொள்ளும் முறைகள்

உங்களை எளிமையாக்கிக் கொள்ளும், கடினமாக்கிக் கொள்ளும் முறைகள்

வாழ்க்கை எளிமையாகத்தான் இருக்கிறது. அது கடினமாக்கப்படுகிறது.

அது எப்படி கடினமாக்கப்படுகிறது என்பது தெரிந்தால்தான் அதை எளிமையாக்க முடியும்.

அதைக் கடினமாக்குவது யார் என்று தெரிந்தால்தான் அவரிடமிருந்து அதை எளிமையாக்க முடியும்.

அது எப்படிக் கடினமாக்கப்படுகிறது என்றால் மனதால்கடினமாக்கப்படுகிறது.

அதை கடினமாக்குவது யார் என்று கேட்டால் அந்த மனதைக் கொண்ட மனிதர்தான்.

வாழ்க்கையின் கடினம் மனதால் உருவாக்கப்படுவதுதான். மனதால் கடினத்தை உருவாக்க முடியும் என்றால் எளிமையையும் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கைதான் தத்துவாதிகளையும் சிந்தனையாளர்களையும் ஓயாது இயங்கச் செய்கிறது.

உங்கள் கடினத்தை உருவாக்குவது சாட்சாத் நீங்கள்தான். அதை உங்கள் மனதின் மூலமாக நீங்களே நிகழ்த்திக் கொள்கிறீர்கள்.

மனம் என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மனதால் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளும் நீங்கள் மனதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் இதில் இருக்கின்ற விசயம்.

மனம் என்பது இதுவரை நீங்கள் அனுபவித்து வந்த நினைவுகளின் தொகுப்பாக, இதுவரை நீங்கள் அறிந்து வந்துள்ள அனைத்தின் மையமாக இருக்கிறது. உங்கள் அனுபவங்களின் தொகுப்பும் அறிந்திருப்பதன் மையமும் உங்களுக்கான மன வடிவத்தைத் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்க, உங்களது விறுப்பு, வெறுப்பு, சுயத்திற்கேற்ப நீங்கள் உங்கள் மனக் கட்டுமானத்தை நீங்கள் உருவாக்கிக் கொண்டே போகிறீர்கள்.

உங்கள் மனக்கட்டுமான முறையின் பழக்கத்தால் ஒவ்வொரு நிகழ்வுக்கும், ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினையாற்றும் தன்மையையும் நீங்கள் உருவாக்கிக் கொண்டு இதுதான் நான் என்று காட்டவும் விழைகிறீர்கள். உங்களுக்கான அடையாளம் உருவாகிறது. பிறகு அந்த அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில் உங்கள் மனக்கட்டுமானத்தைத் தொடர்ந்து கொண்டே செல்கிறீர்கள்.

ஒரு நிலையில் உங்கள் மனக்கட்டுமானமும் உங்கள் இருப்பும் உங்கள் சூழ்நிலையும் ஒன்றுக்கொன்று முரணாகப் போகலாம் அல்லது இயைந்துப் போக முடியாமல் போகலாம். உங்கள் கடினம் அங்கிருந்துதான் ஆரம்பமாகிறது.

நீங்கள் உங்கள் மனக்கட்டுமானத்தை விட்டுத் தர மாட்டீர்கள். நீங்கள் உங்களையும் அறியாமலும் அறிந்தும் உருவாக்கிய ஒன்றை நீங்கள் ஏன் விட்டுத் தர வேண்டும் என்று நினைக்கலாம்.

அது நீங்கள் உருவாக்கியதுதான் என்பதால் தற்போதை இருப்பிற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப மீண்டும் இயைபான ஒரு மனக்கட்டுமானத்தை ஏன் உருவாக்கிக் கொள்ளக் கூடாது என்று நீங்கள் யோசிக்க மாட்டீர்கள். அதை விட்டுத் தராமல் எப்படி இருப்பையும் சூழ்நிலையையும் சமன்படுத்தி ஒரு இயைபுக்குக் கொண்டு வருவது என்றுதான் யோசிப்பீர்கள்.

ஒரு சில நிலைமைகளில் நீங்கள் இதில் வெற்றி பெறவும் முடியும். ஒரு சில நிலைமைகளில் நீங்கள் இதில் தோல்வியைத் தழுவவும் நேரிடும். தோல்வியைத் தழுவும் நிலைமைகளை உங்களால் ஏற்க முடியாது. அது போன்ற நிலைமைகளில் நிச்சயம் நீங்கள் கடினமாகி விடுவீர்கள். அதுவரை எளிமையாகத் தோன்றிய எல்லாம் அப்போதுதான் உங்களுக்குக் கடினமாகத் தோன்றும்.

கடினம் என்பது அங்கே இருப்பிலும் இல்லை, சூழ்நிலையிலும் இல்லை. அது அப்போது உங்களது மனக்கட்டுமானத்தில்தான் இருக்கும்.

உண்மையில் மிக கடினமான இருப்பு நிலைகளையும் சூழ்நிலைகளையும் பலர் மிக எளமையாகக் கடந்திருக்கிறார்கள். அப்படி எளிமையாகக் கடப்பதற்குக் காரணமாக அமைந்தது அவர்கள் தங்கள் மனக்கட்டுமானத்தில் செய்து கொண்ட இயைபுத் தன்மைதான்.

இருப்பிலும் சரி, சூழ்நிலைகளிலும் இக்கட்டான நிலைகள் ஏற்படத்தான் செய்யும். அது கடக்க கடினமாவதும், எளிமையாகக் கடக்கப்படுவதும் அவரவர் கொண்ட மனக்கட்டுமானத்தால் நிகழ்கின்றன.

நீங்கள் நினைத்தால் உங்களது மனக்கட்டுமானத்தைப் புரிந்து கொண்டு அதை எளிமையாக்கிக் கொள்ள முடியும். அல்லது அதை புரிந்து கொள்ள விரும்பாது மென்மேலும் அதில் மனக்கட்டுமானங்களை உருவாக்கிக் கொண்டு கடினமாக்கிக் கொள்ளவும் முடியும்.

உண்மையில் இங்கு எளிமையும் கடினமும் என்பது மனக்கட்டுமானத்தைப் பொருத்த விசயங்கள்தான். அது ஒவ்வொருவரும் அறிந்தும் அறியாமலும் அவரவர்களே உருவாக்கிக் கொள்பவைதான்.

உங்களது இருப்பு, சூழ்நிலைகளைக் கடந்து ஒரு நிலைமைக்கு மேல் நீங்கள் உருவாக்கிக் கொள்ளும் மனக்கட்டுமானம் முக்கியமானது. அதை அவ்வபோது இருப்பு நிலைக்கும் சூழ்நிலைக்கும் இயைந்து போகும் வகையில் கட்டமைத்துக் கொள்பவர்கள் எளிமையாகனவர்களாகவும் உற்சாகமானவர்களாகவும் உலகுடன் உவப்புடன் கலந்து நிற்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...