எங்கள் ஆசிரியர்பிரான்கள்
இப்போது நினைத்துப் பார்க்கும்
போது எங்கள் ஆசிரியர்கள் எங்களுக்கு அறிவுச் சுரங்கங்களை வழங்கியிருக்கிறார்கள் என்பது
புரிகிறது.
அவர்கள் மிகவும் எளிமையானவர்களாக
இருந்தார்கள். அதே நேரத்தில் அந்த எளிமையால் மிகவும் வலிமையானவர்களாகவும் இருந்தார்கள்.
அடிப்படையான விசயங்களை மிகவும்
ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் எப்போதும் வலியுறுத்தினார்கள்.
இப்போதிருக்கும் அறிவு சூழ்
உலகுடன் ஒப்பிடும் போது அவர்கள் அவ்வளவு அறிவுடன் திகழ்ந்தார்களா என்பதை நீங்கள் கேள்விக்கு
உட்படுத்த முடியும். ஆனால் அவர்கள் தங்களுக்கிருந்து ஆழமான அடிப்படை அறிவால் எத்தகைய
அறிவையும் விளக்கும் தன்மை பெற்றவர்களாக இருந்தார்கள்.
எவ்வளவு அறிவைப் பெற்றிருந்தோம்
என்பதை விட வாழ்க்கையின் சிக்கல்களுக்கும் பிரச்சனைகளுக்கும் எப்படிப்பட்ட அறிவு விளக்கத்தைப்
பெறுகிறோம் என்பது முக்கியம். அதில் எங்கள் ஆசிரியர்கள் தன்னிகரற்று விளங்கினார்கள்
என்றுதான் சொல்ல வேண்டும்.
நாங்கள் கடந்து வந்த ஆசிரியர்கள்
பெருமபாலானோர் இருவேளை உணவு உண்ணும் ஆசிரியர்கள். மூன்று வேளை உணவு என்பதை அபூர்வமாக
உண்டவர்கள். ஏதேனும் விசேஷ நாட்களில் அது அவர்களுக்குச் சாத்தியமாகும். அதனாலேயே அவர்கள்
மிகவும் ஆரோக்கியமாக இருந்தார்கள்.
காலையில் சாப்பிட்டு வந்தால்
மாலைக்கும் இரவுக்கும் இடையிலான பொழுதில் மற்றொரு வேளை சாப்பாடு சாப்பிடுவார்கள்.
மதிய உணவு என்பது அவர்களுக்குக்
கல்யாணம், கருமாதி போன்ற நாட்களில்தான். அது போன்ற நாட்களில் மட்டும்தான் அவர்கள் உணவை
ரசித்து ருசித்து அதிகம் உண்டிருக்கிறார்கள். பட்சணங்களையும் பலகாரங்களையும் பாயசத்தையும்
கேட்டுக் கேட்டு வாங்கிச் சாப்பிடுவார்கள்.
கட்டுக்கோப்பான உணவு முறையை
அவர்கள் எங்களுக்கு எப்போதும் வலியுறுத்தியிருக்கிறார்கள். எல்லாருடனும் சேர்ந்து உணவு
உண்ணும் போது மட்டும் அந்தக் கட்டுபாட்டைத் தளர்த்திக் கொள்ளலாம் என்ற விலக்கிற்கான
நிலைமைகளையும் அவர்கள் வழங்கியிருக்கிறார்கள்.
சர்க்கரை நோயோ, கொழுப்பெடுத்த
வியாதிகளோ எங்கள் ஆசிரியர்களுக்கு இல்லை. அவர்கள் நிறைவாழ்வு வாழ்ந்தவர்கள்.
எண்பது வயதிற்கு முன் எந்த
ஆசிரியரும் இறக்கவில்லை. அவர்களின் இறப்பும் கூட உறக்கத்தில் உயிர் பிரிந்த சம்பவங்களாகத்தான்
இருந்தன.
பெரும்பாலான ஆசிரியர்கள்
ஒடிசலான தேகம் அல்லது மத்திமமான உடல்வாகைக் கொண்டவர்களாகத்தான் இருந்தார்கள். ஆனால்
குரலின் கம்பீரம் அலாதியானது. வகுப்பறையில் பேசினால் எட்டு ஊருக்குக் கேட்கும். தனித்துப்
பேசினால் அப்படிப் பேசும் ஆசிரியரா இப்படி தணிந்து பேசுகிறார் என்று எண்ணத் தோன்றும்.
அவர்கள் வழங்கிய ஒவ்வொன்றும்
எவ்வளவோ விசயங்களில் வழிகாட்டிக் கொண்டே இருக்கின்றன.
அவர்கள் சிறுதீனி தின்பதை
எப்போதும் வலியுறுத்தியதில்லை. தேநீர் அருந்துவதைப் போதைப்பொருள் அருந்துவதைப் போலப்
பார்த்த ஆசிரியர்கள் இருந்திருக்கிறார்கள்.
மிகையான உணவு உண்பதையும்
அவர்கள் ஏற்றதில்லை. யாருடைய வீடுகளிலாவது சாப்பிட வேண்டிய நிலைமை வந்த போதில் சோறும்
ரசமும் ஒரு தொடுகறியும் போதும் என்று சொன்னவர்கள்.
அவர்கள் அடிக்கடி இரண்டு
வாசங்களைச் சொல்லியிருக்கிறார்கள். இரண்டும் உணவைப் பற்றியது.
1. நுண்மை நுகரேல்.
2. மீதூண் விரும்பேல்.
இரண்டும் ஆத்திசூடியின் வரிகள்
என்றாலும் எங்கள் ஆசிரியர்கள் சூடிக் கொடுத்த வரிகள்.
ஒரு சில நிலைமைகளில் நுண்மையை
நுகர்ந்தாலும் பல பத்துப் பொழுதுகளில் அதைத் தவிர்ப்பதற்கு அந்த வரியே எனக்குத் துணையாக
இருக்கிறது.
அது போலவே ஒரு சில பொழுதுகளில்
மீதூணை விரும்பினாலும் பல பத்துப் பொழுதுகளில் அதைத் தவிர்ப்பதற்கும் அந்த வரியே எனக்குத்
துணையாக இருக்கின்றது.
*****
No comments:
Post a Comment