6 Nov 2022

ராயல் என்பது சிறிதே!

ராயல் என்பது சிறிதே!

தெருவெங்கும் ராயல் என்பீல்டுகளாகச் சுற்றுகின்றன. ஆண்கள் மட்டுமல்லாது பெண்களும் ஓட்டுகிறார்கள். பெண்களின் கம்பீரம் புலப்படுகிறது. ஆணுக்குப் பெண் இளைப்பில்லை என்பதை அடைய ராயல் என்பீல்ட் காலம் வரை காத்திருக்க வேண்டியதாகி விட்டது.

சினிமாக்காரர்களின் பணியும் மகத்தானது. புல்லட்டுக்காகப் பாடல் வடித்தார்கள். மக்கள் அந்தப் பாடலைப் பாடித் துடித்ததைப் பார்த்த போது அநேகமாகத் தமிழ்நாட்டில் புல்லட்டூக்கு ஒரு கோயில் நிச்சயம் என்று நினைத்திருந்தேன். அந்தப் பாடல் இடம்பெற்ற படத்தைத் தோல்வியடையச் செய்து விட்டார்கள், புல்லட்டை நம்பிப் போகிறவர்களின் கதை கடைசியில் இப்படித்தான் ஆகும் என்பது போல.

எனக்குப் புல்லட் ஓட்டத் தெரியாததால் தப்பித்துக் கொண்டிருக்கிறேன். இல்லையென்றால் நானும் ஒரு ராயல் என்பீல்ட் வாங்க வேண்டிய நெருக்கடிக்கு வந்திருக்க வேண்டியிருக்கும்.

இருந்தாலும் புல்லட் வாங்கச் சொல்லி மனைவியின் நெருக்கடி இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. வாங்கினால் நீதான் ஓட்ட வேண்டும் என்று சொல்லி அதிலும் தப்பித்துக் கொண்டிருக்கிறேன்.

இப்படியாக இரண்டு லட்சம் ரூபாயை இருபது மாதங்களாகக் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறேன். லட்சங்களை விட புல்லட்டில் போகும் லட்சியம் பெரிதாகி விட்ட சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதால் லட்சங்களைக் காப்பாற்ற போராட வேண்டியிருக்கிறது.

இப்படித்தான் அப்பாச்சி வந்த போது நடந்தது. பல்சர் வந்த போது நடந்தது. இப்போது புல்லட்டுக்கு நடக்கிறது. அடுத்து ஆடி, பென்ஸ் என்று கடக்க வேண்டிய பாதைகள் நிறைய இருக்கின்றன. ஒவ்வொன்றையும் கடந்தாக வேண்டும்.

வாகனங்களின் பின்னிருக்கும் உளவியல் பயங்கரமானது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியாது. அந்தப் பயங்கரத்தைத் தாங்க முடியாமல்தான் மக்கள் புல்லட் வாங்கத் துடிக்கிறார்கள்.

புல்லட் வாங்காதவர்களைச் சின்ன மனுஷன்களாக மதிப்பிடுகிறார்கள். புல்லட் வாங்கியவர்களைப் பெரிய மனுஷன்களாகப் பார்க்கிறார்கள்.

என்னதான் பெரிய மனுஷன் என்றாலும் புல்லட்டின் சின்ன சீட்டில்தான் உட்கார வேண்டும் என்ற ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்கள் பாருங்கள் ராயல் என்பீல்ட். இந்தப் பூமியையே விலைக்கு வாங்கிப் போட்டாலும் கடைசியில் ஆறடி நிலம்தான் சொந்தம் போல இருக்கிறது அந்த டிசைன். ராயல் என்பீல்டில் எனக்குப் பிடித்ததே அதுதான்.

என் நண்பர் ஒருவர் ராயல் என்பீல்ட் வாங்கிய போது பின்னால் உட்கார்ந்து வருகிறாயா என்றார். அந்தச் சின்ன சீட்டில் உட்கார்ந்து சிரமப்பட விருப்பம் இல்லாததால் வர முடியாது என்று அடித்துச் சொல்லி விட்டேன்.

பாவம் என் நண்பர், நான் வர முடியாது என்று சொல்லி விட்டதால் ஓர் அழகான இளம் பெண்ணை அந்தச் சின்ன சீட்டில் உட்காரச் சொல்லி அழைத்துக் கொண்டு போனார்.

நண்பரின் மனைவியைச் சந்தித்தால் ஓர் அழகான இளம் பெண்ணைச் சின்ன சீட்டில் உட்கார வைத்து அழைத்துச் சென்று கொடுமைப்படுத்திய நிகழ்வைச் சொல்ல வேண்டும் என்று இருக்கிறேன். பாதகம் செய்வோரைக் கண்டால் பயம் கொள்ளல் ஆகாது பாப்பா என்று பாரதியே சொல்லியிருக்கிறார்.

‘கமான் பேபி லெட்ஸ் கோ ஆன் தி புல்லட்’ என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற திரைப்படம் தோல்வியடைந்ததற்கு பின்னால் இது போன்ற காரணங்கள் ஏதும் இருக்குமோ?!

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...