5 Nov 2022

உலகெங்கும் ஓர் அம்மன் மாரியம்மன்

உலகெங்கும் ஓர் அம்மன் மாரியம்மன்

உலகத்தில் யார் மேல் அதிகப்பாடல்கள் பாடப்பட்டிருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன்.  

எனக்குத் தெரிந்து மாரியம்மனாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

தாயின் தாலாட்டுக் கேட்காத தமிழ்நாட்டுக் குழந்தைகள் இருக்க முடியாது என்று நாட்டுப்புற ஆய்வாளர் ஏறுமுகச்சாமி என்னிடம் ஒரு முறை சொல்லியிருப்பதை நினைத்துப் பார்க்கிறேன்.

தமிழ்நாட்டு மக்களில் அம்மை வராத ஆட்களும் இருக்க முடியாது என்று சித்தராம சிருங்காதகர் கூறியதையும் நினைத்துப் பார்க்கிறேன்.

மாரியம்மன் தாலாட்டுப் பாடாமல் அம்மை இறங்காது என்று எங்கள் அம்மச்சிக் கிழவி நங்கையம்மாள் அடிக்கடி சொல்லும். சொன்னதோடு அல்லாமல் அதைப் பாடி அம்மையை இறக்கிய சம்பவங்கள் இப்போது நாட்டுப்புற இலக்கியத்தில் பதிவு செய்யப்பட வேண்டியவைகளாக இருக்கின்றன.

அம்மை நோய்தான் மாரியம்மனை ஊர் ஊராகக் கொண்டு சேர்த்ததாக பண்பாட்டு மானிடவியல் ஆய்வாளரான கோமுகி குசலான் அவர்களும் என்னிடம் சொல்லியிருக்கிறார்.

மாரியம்மன் கோயிலின் திருவிழா மற்ற கோயில்களின் திருவிழாவுக்கு ஈடு இணையாகாது என்று திருவிழா ஒப்பீட்டாளர் திருமுருககாந்தி கூறுவதை இவ்விடத்தில் எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

எப்படியும் இரண்டு மூன்று கிலோமீட்டருக்கு வரிசையாக ஒலிப்பெருக்கி, குழல் விளக்கு என்று திருவிழா முடியும் வரை யார் பேசுவதும் யாருக்கும் காதில் விழாத அளவுக்கு மாரியம்மன் புகழ் பாடும் பாடல்கள் காற்றெங்கும் சில பல ஹெர்ட்ஸ்களில் குற்றொலி அலைகளாகவும் மீயோலி அலைகளாகவும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

கிராமங்களின் உண்மையான தீபாவளி, பொங்கல் எல்லாம் மாரியம்மன் கோயில் திருவிழாதான். இதை மறுத்து நிரூபிப்பவர்களுக்கு லட்ச ரூபாய் பரிசு தரவும் தயாராக இருக்கிறேன்.

மற்ற நேரங்களில் சுரிதார், நைட்டி என்று நவநாகரிக உடை அணியும் பெண்கள் கூட அத்திருவிழா நன்னாளில் தாவணி, சேலை என்று பாரம்பரிய உடைகளை அணிந்து வருவதைப் பார்க்கும் போது மாரியம்மனை நான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிறேன்.

மாரியம்மன் திருவிழாவுக்காக மக்கள் மாவு அரைத்து மாவிளக்குப் போட்டு – மற்ற விழாக்கள் என்றால் கையில் ஒரு ரோக்காவைக் கொடுத்து கடையில் வாங்கி வரச் சொல்பவர்கள் - அன்றொரு நாளில் வீட்டைச் சுத்தம் செய்து – மற்ற நாட்களில் ஆண்களைச் சுத்தம் செய்ய சொல்பவர்கள் – இப்படியாக அந்தச் சில நாட்களாவது வீட்டில் சில வேலைகளைச் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோடித்துப் பார்க்கும் போது மாரியம்மனைப் போல அழகான பெண்ணைப் பார்க்க முடியாது. கும்பிடப் போகும் பெண்களும் தன்னை விட அழகான ஒரு பெண்ணைப் பார்த்து பொறாமைப்படாமல் திரும்புவது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும். அது மாரியம்மனின் சக்தி. பொறாமைப்பட வைக்காமல் வசீகரித்து விடும் சக்தி.

அத்திருவிழா நாட்களில் பெண்டுகள், பிள்ளைகள் வேறு நிகழ்ச்சிகளைப் பார்க்காமல் மாரியம்மன் புகழ் பாடும் பாடல்களைப் பார்த்துக் கேட்டு, வேறு குத்தாட்டங்களை ஆடாமல் மாரியம்மன் பாடல்களுக்கு ஆடி – கிராமங்களில் பக்தியை வளர்த்ததும் சத்தியமாக மாரியம்மன்தான்.

மாரியம்மன் புகழ் பரப்பியதில் எல்.ஆர். ஈஸ்வரி மறக்க முடியாதவர். அவர் பாடலைக் கேட்கும் போதே அருள் வந்து ஆடும் பெண்களைப் பார்க்கும் போது அவர்தான் நவீன காலத்து புட்டபர்த்தி அம்மனோ என்று நான் நினைப்பேன்.

மாரியம்மன் கோயில்கள் இல்லாத சந்து பொந்துகள் அநேகம் தமிழகத்தில் இருக்காது. பாரதி காலத்திலும் அப்படியே இருந்திருக்கிறது. மாரியம்மா உன்னை நம்பி வந்தோம் ஒரு காரியமா என்று அவரும் பாடியிருக்கிறார்.

அவருக்குப் பிறகு நிறைய கவிஞர்கள், பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். அவை எல்லாம் திருவிழாவில் ஒன்று விடாமல் ஒலிக்கின்றன இந்தத் திருவிழா நாட்களில்.

திருவிழா முடிந்தால் அனிச்சையால் காதில் கொய்ங் கேட்பதும், வாய் மாரியம்மன் பாடல்களை முணுமுணுப்பதும்தான் மாரியம்மன் எப்போதும் இதயம் எல்லாம் இருப்பதற்கான அடையாளங்கள்.

எனக்குத் தெரிந்த சில ஆணாதிக்கவாதிகள் மாரியம்மனைப் பக்தியோடு கும்பிடுவதைப பார்த்த பின் மாரியம்மனின் சக்தியை என்னால் மறுக்க முடியவில்லை.

இரண்டு பெண் பிள்ளைகள் பிறந்து விட்டதாக எப்போதும் கவலை அனுஷ்டித்துக் கொண்டிருக்கும் கந்தமாறனாகப்பட்டவர் சிவன், பெருமாள், முருகன், விநாயகர் என்று ஆண் தெய்வங்களைக் கும்பிடாமல் பெண் தெய்வமான மாரியம்மனைக் கும்பிடுவது என்னை எப்போதும் ஆச்சரியத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது. அத்தோடு அவர் ஆதிபராசக்தியின் அதி தீவிர பக்தரும் கூட.

பெண்மை வாழ்க என்று பாரதி கூத்திடச் சொன்னார். அதை நிஜமாக்கி சாத்தியமாக்கிய பெருமை மாரியம்மனுக்கே உண்டு.

பெண் தெய்வங்களை இவ்வளவு சிறப்பாக வழிபடும் நாடு தமிழ்நாட்டைத் தவிர வேறு நாடு இருக்கிறதா என்ன? அந்தச் சிறப்பைத் தமிழ்நாட்டுக்குப் பெற்றுத் தந்த பெருமை மாரியம்மனையே சாரும்.

யாமறிந்த கடவுளிலே மாரியம்மனைப் போல பொன்னியம்மனைப் போல அங்காளம்மனைப் போல யாங்கணும் கண்டதில்லை என்று பாரதி பாடியிருக்க வேண்டும். யாமறிந்த தெய்வங்களிலே மாரியம்மனைப் போல புகழாவது யாங்கும் காணோம் என்றும் அவர் பாடியிருக்க வேண்டும். அவ்வளவு சிறப்பு மாரியம்மனுக்கு உண்டு.

மாரியம்மன் கோயில் பூசாரியும் எனக்குப் பிடித்தமானவர். அவரைப் போல பிரபுதேவா என்ன, மைக்கேல் ஜாக்சன் கூட ஆட முடியாது. அவ்வளவு அற்புதமாக அபாயகரமான அசைவுகளோடு சாமியாடுவார்.

அவர் விபூதி அடிக்கும் போது பத்து கிலோமீட்டர் சுற்றளவுக்கு புகை மண்டலம் உருவாகுவதை நான் அவ்வளவு ரசிப்பேன்.

இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்திலும் எங்கிருந்தோ மாரியம்மன் பாடல் ஒன்று ஒலித்துக் கொண்டிருக்கிறது.

எவ்வளவுதான் புகழ்பெற்ற குத்துப்பாடல்கள் வந்தாலும் மாரியம்மன் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும். அவை மக்களின் பாடல்கள். தமிழ்ப்பாடல்களைத் தமிழாக நிலைநிறுத்துவதிலும் மாரியம்மன் பாடல்களுக்குத் தனி முக்கியத்துவம் இருப்பதாக நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ?

உலகளவில் அதிகப் பாடல்களைப் பெற்ற மாரியம்மனை இந்த நேரத்தில் பக்தியோடு வணங்குவோம்.

மாரியம்மன் பாடல்கள் மேலும் அதிகமாக வேண்டும் என்று மாரியம்மனை வேண்டிக் கொள்கிறேன். அதற்கு எப்போதும் மாரியம்மன் துணை இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...