5 Nov 2022

ரஜினிகாந்த் திரைப்படங்களை ரசித்துப் பார்ப்பது எப்படி?

ரஜினிகாந்த் திரைப்படங்களை ரசித்துப் பார்ப்பது எப்படி?

இந்தப் பத்தியின் தலைப்பு இப்படி இருந்தாலும் ரஜினிகாந்த் இடையில்தான் வருவார். இந்தப் பத்தியில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் இருப்பதால் பொறுமையாகப் படியுங்கள். கட்டாயம் ரஜினிகாந்த் வருவார்.

இப்போது பத்திக்கு வந்து விடுங்கள்.

தற்போது குழந்தைகள் படிப்பதைக் கவனிக்கிறீர்களா?

அவர்கள் படித்தால்தானே கவனிக்க முடியும் என்று நீங்கள் சொல்லாம். அவர்கள் படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் குழந்தைகளின் படிப்பு மிகவும் எளிமையாகி விட்டது. ஆசிரியர்தான் வேண்டுமில்லை. செயலி (ஆப் (APP))) போதும் அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க.

படிக்கின்ற குழந்தைகளும் இருக்கின்றன. ஒன்றோ, இரண்டோ, மூன்றோ. விரல் விட்டும் எண்ணி விடலாம். ஒன்று, இரண்டு, மூன்று சொல்லியும் எண்ணி விடலாம். அதுவாகப் படிக்கின்ற குழந்தைகள் குறைந்து போய் விட்டன.

குழந்தைகளைப் படிக்க வைக்க முடியவில்லை என்பதற்காகத் தனிப்பயிற்சி (டியூசன்) மையங்கள் தற்போது நிறைய உருவாகி விட்டன.

செயலியால் பாடம் சொல்லிக் கொடுக்கத்தான் முடியும். அதனால் உட்கார்ந்து படிக்க வைக்க முடியாது. இந்த ஒரு காரணத்திற்காகவே தனிப்பயிற்சி மையங்கள் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்று விட்டன.

முன்காலத்தில் மக்குப் பிள்ளைகளுக்காக இந்தத் தனிப்பயிற்சி மையங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்ததாக என் பாட்டனார் இருபத்து இரண்டாம் எலிகேசி குறிப்பிடுவார். இப்போது எல்லா பிள்ளைகளுக்காகவும் இந்த மையங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று சந்திரகுப்த சாணக்கியர் குறிப்பிடுகிறார்.

நாம் நினைப்பது போல பிள்ளைகள் பள்ளிகள் செல்வதால் படிக்கவில்லை, தனிப்பயிற்சி மையங்கள் செல்வதால்தான் படிக்கின்றன என்று புளுகுபெர்க் ஆய்வறிக்கை ஒன்றில் நான் படித்த செய்தியும் தற்போது நினைவுக்கு வருகிறது.

மருத்துவருக்கு, பொறியாளருக்கு, தணிக்கையாளருக்கு, ஆட்சியருக்கு, போட்டித் தேர்வுக்கு என்று படிக்கும் பிள்ளைகள் தீவிரமாகப் படிக்கிறார்கள். மற்ற பிள்ளைகளின் புத்தகங்கள் புதுமை குழையாமல் இருக்கின்றன பத்து நூற்றாண்டுகளுக்குப் பயன்படுத்தும் அளவுக்கு.

குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதற்காகவே மருத்துவராகு, பொறியாளர் ஆகு, ஆட்சியர் ஆகு, அரசுப் பணிக்குப் போ என்று சொல்ல வேண்டியிருக்கிறது.

பாடப்புத்தகங்களைப் படிக்கின்ற நிலை இப்படி இருக்கும் போது எழுத்தாளர்கள் வேறு புத்தகங்களை எழுதி விட்டு அவற்றை யாரும் வாசிக்கவில்லை என்ற வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தங்களுடைய புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று ஆசைப்படும் எழுத்தாளர்கள் பரீட்சைக்குப் பயன்படும் புத்தகங்களை எழுதுவது நல்லது என்று நினைக்கிறேன்.

நான் கூட ‘உரைநடையை எளிமையாகப் படிப்பது எப்படி?’ என்று ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறேன். பெற்றோர்களின் மத்தியில் அந்தப் புத்தகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

தமிழர்கள் புத்தகங்களைப் படிக்கவில்லை என்று சொல்ல முடியாது. அவர்களுக்குத் தேவைப்படும்படி புத்தகங்களை எழுத வேண்டும்.

சில தலைப்புகளை என்னால் சொல்ல முடியும். ‘ரஜினிகாந்தின் படங்களை ரசித்துப் பார்ப்பது எப்படி?’ ‘இளைய தளபதி விஜயின் திரைப்படங்களை இனிமையாகப் பார்ப்பது எப்படி?’ ‘திரையரங்கங்களில் வெளியாகும் திரைப்படங்களைத் திருட்டுத்தனமாகப் பார்ப்பது எப்படி’ என்று இப்படி புத்தகங்களை எழுத வேண்டும்.

அத்துடன் குழந்தைகள் படிக்கும் படியும் புத்தகங்களை எழுத வேண்டும். உதாரணமாக ‘எந்நேரமும் பெற்றோருக்குத் தெரியாமல் மொபைல் கேம் விளையாடுவது எப்படி?’

‘தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தபடி பாடங்களைப் படிப்பது எப்படி?’ என்று இப்படி எழுத வேண்டும்.

படித்துதான் தெரிந்து கொள்ள வேண்டும் என்றில்லை. யூடியூப் பார்த்தே நிறைய தெரிந்து கொள்கிறார்கள் குழந்தைகள்.

படித்ததனால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு. பாடம் படிக்காத யூடியூப் மேதைகளும் உலகில் உண்டு என்பதை எப்போதும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...