4 Nov 2022

பலமுறை நிறுத்திப் பழகுதலும் ஆரம்பித்துப் பழகுதலும்

பலமுறை நிறுத்திப் பழகுதலும் ஆரம்பித்துப் பழகுதலும்

ஒரு முறை குடித்தால் என்ன

ஒரு முறை புகை பிடித்தால் என்ன

ஒரு முறை கஞ்சா அடித்தால் என்ன

ஒரு முறை ஐட்டத்திடம் சென்று வந்தால் என்ன

எல்லாம் ஒரு முறைதான்

எல்லாம் ஒரு முறை பழகி

ஒரு முறை நிறுத்தி விட முடியுமா என்ன

நடுத்தெரு நாராயணன்

நூற்றியோரு முறை நிறுத்தியிருக்கிறான் குடிப்பதை

புதுத்தெரு புகழேந்தி

நாற்பத்தேழு முறை புகைப்பதை நிறுத்தியதற்கு

கணக்கு வைத்திருக்கிறான்

சாமி ஊர்வலம் வரும் நாட்களில் மட்டும்

கஞ்சா அடிப்பதை நிறுத்தி விடுவதாக

கடைத்தெரு கண்டியப்பன் சொல்கிறான்

மாலை போடும் மாதங்களில்

மனைவியுடன் கூட சம்போகம் இல்லை என்கிறான்

நாணயக்காரத் தெரு நாடிமுத்து

ஆரம்பித்தால் நிறுத்துவது கடினம் என்கிறார்கள்

எனக்கென்னவோ

நடைபயிற்சியும் புத்தகம் படிப்பதும்

ஆரம்பித்து ஆரம்பித்து நின்று போகிறது

நாராயணனிடமும் புகழேந்தியிடமும்

கண்டியப்பனிடமும் நாடிமுத்துவிடமும் கேட்டால்

ஒரு முறை செய்து பார்க்காமல்

எதையும் சொல்ல முடியாது என்கிறார்கள்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...