பொதுத்தேர்வுகள் அல்லாத மற்றத் தேர்வுகள் குறித்த அச்சம்
நாட்டில் பொதுத் தேர்வுகள்
குறித்த அச்சத்தை ஒழித்து விட்டார்கள். நீட் போன்ற தேர்வுகள் குறித்த அச்சம் கொஞ்சம்
இருக்கிறது. காலப் போக்கில் அந்த அச்சத்தையும் ஒழித்து விடுவார்கள்.
பொதுத்தேர்வுகள் மற்றும்
போட்டித்தேர்வுகள் அல்லாத பிற தேர்வுகள் குறித்த அச்சத்தை ஒழிப்பது சிரமம்தான் என்று
நினைக்கிறேன்.
ஒன்றாம் வகுப்பு, இரண்டாம்
வகுப்பில் தொடங்கி ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள தேர்வுகள் அண்மைக் காலமாக அச்சமூட்டுவதாக
உள்ளன.
அதை விட வகுப்புத் தேர்வுகள்,
வாரத் தேர்வுகள், மாதாந்திரத் தேர்வுகள் மிகுந்த அச்சமூட்டுகின்றன. அது போன்ற தேர்வுகளின்
ஒவ்வொரு அம்சத்தையும் அக்கு வேர் ஆணி வேராக ஆராய்ந்து மிஸ்கள் ரிப்போர்ட் அனுப்புகிறார்கள்.
அது போன்ற தேர்வு எழுதிய
விடைத்தாள்களில் பெற்றோர்கள் கையெழுத்து இட்டு அனுப்ப வேண்டியிருக்கிறது. அத்துடன்
நான்காம் பகுதியில் இரண்டாவது வினாவிற்கான விடையைப் பார்த்தேன், இன்னும் கொஞ்சம் கவனம்
தேவை என்பதை உணர்ந்தேன் என்பன போன்ற குறிப்புகளையும் எழுதி அனுப்ப வேண்டியிருக்கிறது.
பெற்றோர் கூட்டங்கள் நடைபெறும்
நாட்களில் அது போன்ற இடங்களைக் கவனமாகக் குறித்துக் கொண்டு மிஸ்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
நான்காம் பகுதியின் இரண்டாம்
வினாவிற்கான விடையைச் சிறப்பாக எழுதுவதற்காக நீங்கள் என்ன முயற்சி எடுத்தீர்கள் என்று
கேட்கிறார்கள். அது குறித்து நான் என்ன முயற்சி எடுக்க முடியும், நீங்கள்தான் முயற்சி
எடுக்க வேண்டும் என்று வாய் தவறி ஒரு முறை சொல்லித் தொலைத்து விட்டேன்.
அவ்வளவுதான் பையனின் சீட்டைக்
கிழித்துக் கையில் கொடுத்து விட்டார்கள். விவரம் அறிந்து மனைவி என்னை ஒரு வழி பண்ணி
விட்டாள். அப்பாவின் பொறுப்பற்ற கேள்வியால் தன்னுடைய டி.சி. கிழிக்கப்பட்டு விட்டதாக
மகனும் புகார் பத்திரம் வாசித்துக் கொண்டிருக்கிறான்.
நான் மகனின் படிப்பிற்காக
இன்னொரு பள்ளியைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன்.
இது தேவையா எனக்கு? அந்த
நான்காம் பகுதியின் இரண்டாம் வினாவிற்கான விடையைச் சரியாய்ச் செய்வதற்காக உங்களிடமே
டியூசன் அனுப்புகிறேன் மிஸ் என்று சொல்லித் தொலைத்திருந்தால் எந்தப் பிரச்சனையும் எழுந்திருக்கப்
போவதில்லை.
இது எதற்காக என்றால்… நீங்களாவது
உஷாராக இருந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். வேறு எதற்கு?
*****
No comments:
Post a Comment