9 Nov 2022

வாழ்க்கை பல்லாங்குழியின் குழிகள்

வாழ்க்கை பல்லாங்குழியின் குழிகள்

குழியில் தள்ளி விடுவது ஒரு விளையாட்டு

தள்ளி விடும் போது

நல்ல குழியாகப் பார்த்துத் தள்ளி விடுங்கள்

விழுந்தவர் உறங்கி விட்டால்

நல்ல தூக்கம் வர வேண்டும் அல்லவா

குழிகளைச் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்

போர்க்காலங்களில் பதுங்குக்குழிகள்தான் பாதுகாப்பு

குழிகளை வைத்து விளையாடும் பல்லாங்குழி

வாழ்க்கைக்கான குழி விளையாட்டிற்கான பயிற்சிக் களம்

சாலையிலும் நல்ல குழிகள் உள்ளன

அவை தள்ளி விடுவதற்கல்ல

அவர்களாகச் சென்று அவர்களாக விழுவதற்கு

கேபிள் பதிக்க குழாய் பதிக்க

பாதாள சாக்கடைக்குத் தோண்டிய குழிகளும் இருக்கும்

அவை குழியில் விழுந்து எழுந்து

பழக்கப்படுவதற்காக வெட்டப்படுபவை

யாரும் உங்களைக் குழியில் தள்ளவில்லை

என்று பெருமை கொள்ள வேண்டாம்

சாகும் வரைக் காத்திருப்பவர்கள்

கடைசியில் அங்குதான் தள்ளி விடுவார்கள்

முன்னோட்டமாகவோ முன் தயாரிப்பாகவோ

ஒரு குழியில் விழுந்து எழுந்து விடுவது நல்லது

எல்லார்க்கும் ஒரு குழி இருக்கிறது

ஒரு ஜீவன் பிறக்கும் போதே

ஒரு குழி வெட்டப்பட்டு விடுகிறது

மற்றும் மனிதர்கள் பலரும்

பல குழிகள் வெட்டி வைத்தும் காத்திருக்கிறார்கள்

எந்தக் குழியாக இருந்தாலும்

விழும் குழி நமக்குப் பிடித்த குழியாக இருக்க வேண்டும்

பார்த்துக் கொள்ளுங்கள் அல்லது பார்த்து விழுங்கள்

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...