மின்சாரத்திடம் அடகு வைக்கப்பட்டவர்கள்
ஒவ்வொரு ஊரிலும் மின்சாரம்
தடைபட்டால்தான் வீட்டை விட்டு மனிதர்கள் வெளியே வருகிறார்கள். ஒரு ஊர்ல… என்று கதை
பேசத் தொடங்குகிறார்கள்.
மின்சாரம்தான் நம்மைப் புரட்டிப்
போட்டு வைத்திருக்கிறது. அது அளவுக்கதிமாக வேலை பார்த்துக் கொண்டு நம்மை வேலை பார்க்க
விடாமல் செய்து கொண்டிருக்கிறது.
மின்சாரம் வந்து சட்டினி
அரைப்பது, மாவரைப்பது, துணி துவைப்பது, கறி காய்களைப் பக்குவபப்டுத்துவது என்று எத்தனையோ
வேலைகளின் நேரங்களையும் உடல் உழைக்கும் அளவையும் குறைத்து விட்டது.
இப்போது வாகனங்களில் கூட
பேட்டரிகளாகவும் இயங்கிக் கொண்டிருக்கிறது. நம்மை நடக்க விடாமல் வாகனங்களில் அழைத்துச் செல்கிறது.
நம்மைப் பேச விடாமல் தொலைக்காட்சி
பெட்டிகளை ஓட விடுகிறது. நம்மைச் சிந்திக்க விடாமல் அலைபேசிகளில் செய்திகளைக் கொண்டு
வந்து கொட்டுகிறது.
நம்மை விளக்கேற்ற விடாமல்
பொத்தானைத் தட்டினால் வெளிச்சத்தைக் கொண்டு வந்து விடுகிறது. நமக்காகப் பாடுகிறது,
ஆடுகிறது, ஓடுகிறது, வேலை செய்கிறது, என்னென்னவோ செய்கிறது.
அது சற்று நேரம் இல்லாமல்
போனால்தான் நமக்காக நாம் எதையாவது செய்து கொள்கிறோம். நாமாகக் கொஞ்சம் யோசித்துப் பார்க்கிறோம்.
சக மனிதர்களிடம் பேசிப் பார்க்கிறோம்.
இப்படி யோசித்துப் பார்க்கையில்
நாம் என்னவோ நம்மை மின்சாரத்திடம் அடகு வைத்து விட்டதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.
*****
No comments:
Post a Comment