21 Nov 2022

அம்மாவின் ஆசைகள்

அம்மாவின் ஆசைகள்

எத்தனை கோயில்களுக்குப் போனாலும் அம்மாவுக்கு ஆசை தீராது. அன்றைய நாள் முழுவதும் நான்கைந்து கோயில்களுக்குச் சென்று வந்தாலும் இடையில் இன்னும் இரண்டு கோயில்களைக் காட்டினால் ரொம்ப சந்தோசம்.

கோயில் திருவிழா என்றால் முதல் ஆளாகப் போய் விட வேண்டும். குடமுழுக்கு என்றால் இரவிலிருந்து பகல் வரை விழித்திருந்து அத்தனையையும் காண வேண்டும். ஒரு குடமுழுக்கைப் பார்ப்பது ஆயிரம் கல்யாணத்தைக் காண்பதற்குச் சமம் என்பது அவள் வாதம்.

அவள் சுதந்திரமாகப் போகவும் வரவும் இருக்கும் இடம் கோயில்கள்தான். கோயில்களுக்குப் போவது பற்றியோ, வருவது பற்றியோ அவளை யாரும் கேள்வி கேட்க முடியாது. யாராவது கேள்வி கேட்டாலும் நல்ல விசயம்தானே என்ற பதிலைத்தான் சொல்ல முடியும்.

இதுவே பிறந்தகம், உறவுக்கார வீடு என்றால் அப்பாவிடம் ஓர் அனுமதியைக்   கேட்டு வாங்க வேண்டியிருக்கிறது. கோயில்கள் என்று சொன்னால் அப்பாவுக்கும் ஒரு தாராள மனோபாவம் வந்து விடுகிறது. ஆமாம் போய் பார்த்துதான் வர வேண்டும் என்று ஆவலோடு அவர் அழைத்துச் செல்லும் இடம் கோயில்களாகத்தான் இருக்கின்றன.

சுற்று வட்டாரத்தில் அவள் சென்று பார்க்காத கோயில்கள் இல்லை. தூரமாகவும் பல கோயில்களைப் பார்த்திருக்கிறாள். இந்தக் கோயில் பயணங்களைப் பார்க்கையில் அவளைச் சிறு வயதில் வேறெங்கும் அழைத்துச் செல்லாத ஏக்கமும் அதற்குக் காரணமாக இருக்கும் என்று நான் நினைத்துக் கொள்வதுண்டு.

எனக்கென்னவோ கோயில்கள் என்றால் பிடிப்பதில்லை. அம்மாவுக்காகவும் கல்யாணம் ஆன பிறகு மனைவிக்காகவும் கோயிலுக்குப் போவதோடு சரி. சுற்றுலா என்றால் கண்டிப்பாக ஒரு கோயில் இருக்கும் என்பதால் அப்போது போவதொடு சரி.

ஒவ்வொரு முறை அம்மாவோடு கோயிலுக்குப் போகும் போது ‘இவனுக்கு நல்ல புத்தியைக் கொடு’ என்று என் காது படவே எனக்காக வேண்டிக் கொள்கிறாள். வேறு எனக்குப் பணத்தைக் கொடு, சொத்துச் சுகங்களைக் கொடு, சம்பாத்தியங்களைக் கொடு என்றெல்லாம் வேண்டிக் கொள்வதில்லை.

அப்படியானால் நான் கெட்ட புத்தியோடா இருக்கிறேன் என்று நான் அம்மாவைக் கேட்டதுண்டு.

எல்லாருக்கும் புத்தி இருக்கத்தான் செய்கிறது, அது நல்ல புத்தியாக இருக்கிறதா, கெட்ட புத்தியாக இருக்கிறதா என்பதுதான் முக்கியம் என்பாள் அம்மா.

இதென்ன புத்தர் சொன்னது போல நல்ல எண்ணம், நல்ல அறிவு, நல்ல காட்சி என்பன போன்ற எண்மார்க்க வகையறாவாக இருக்கிறதே என்று யோசித்ததுண்டு.

அம்மா என்னவோ கோயிலுக்குப் போனால் அது நல்ல புத்தி என்று நம்புகிறாள். ஏதோ ஒரு நம்பிக்கைதானே ஒவ்வொருவரையும் கோயிலுக்கு அழைத்துக் கொண்டு போகிறது.

என்னைக் கேட்டால் நம்பிக்கை ஒரு சுமை. அதைச் சுமந்து சுமந்து சோர்ந்து போக வேண்டியதில்லை. இயல்பாக எப்படி இருக்கிறதோ, இயல்பாக என்ன நடக்கிறதோ அதைப் புரிந்து கொண்டு எளிமையாக வாழ்ந்து விட்டுப் போனால் போதும் என்று நினைக்கிறேன்.

நான் கோயிலுக்குப் போகாமல் இருப்பதற்கு அது கூட ஒரு காரணமாக இருக்கலாம். எனக்கு எப்போதாவது ஏதாவது ஒரு நம்பிக்கையோ, ஆசையோ வந்தால் நானும் நிச்சயம் கோயிலுக்குச் செல்வேன்.

என்னுடைய நம்பிக்கை பொய்த்து விடக் கூடாது, என் ஆசை நிறைவேறாமல் போய் விடக் கூடாது என்று கடவுளிடம் கண்டித்துச் சொல்லி விட்டு வருவதற்காக நிச்சயம் அப்போது கோயிலுக்குச் சென்றுதானே ஆக வேண்டும்.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...